வியத்தகு இந்தியாவின் புதிய பதிப்பு!

வியத்தகு இந்தியாவின் புதிய பதிப்பு!
Updated on
2 min read

இங்கிலாந்தில் பிறந்த புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளரான ஏ.எல்.பாஷம் என்கிற ஆர்தர் லெவலின் பாஷமின் முக்கியமான நூல்களில் ஒன்று, ‘The Wonder That Was India’. இந்திய வரலாறு, பண்பாடு, இந்திய மக்கள் தங்கள் வேர்களுடன் இணைந்திருக்கும் விதம் ஆகியவற்றால் உலகெங்கிலும் உள்ள மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள். இந்தியவியலாளரான பாஷம் எழுதிய இந்நூல் பண்பாடு, சமயம், ஆட்சிமுறை, சமூகப் பரிணாமம், பாரம்பரியம், மொழிகள், தத்துவம், அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான இந்திய வரலாற்றைப் பேசுகிறது. மூன்றாவது ஆங்கிலப் பதிப்பிலிருந்து க.பூரணச்சந்திரன் மொழிபெயர்த்திருக்கும் இப்புதிய பதிப்பில், ஏராளமான படங்களுடன் பாஷம் தம் வாழ்நாளில் இறுதியாகச் சேர்த்தவையும் அவரது மாணவரான பேராசிரியர் தாமஸ் ஆர்.டிரௌட்மனின் முன்னுரையும் இடம்பெறுகின்றன.

வியத்தகு இந்தியா
ஏ.எல்.பாஷம்
தமிழில்: க.பூரணச்சந்திரன்
அடையாளம் பதிப்பகம்
விலை: ரூ.870
(கெட்டி அட்டை)

-----

நவீன ஓவியத்தை அணுகுதல்... காட்சித் தொடர்பியல் துறையில் இயங்கிவரும் மோனிகா, சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியத்தில் பட்டப்படிப்பு, பரோடாவில் உள்ள மகாராஜ சாயாஜி ராவ் பல்கலைக்கழகத்தில் ஓவிய வரலாற்றில் முதுகலைப் பட்டப்படிப்பு (தங்கப் பதக்கம்), நியூ யார்க் மன்ஹாட்டன் கிராஃபிக்ஸ் மையத்தில் பிரின்ட் மேக்கிங் பயிற்சி என ஓவியம் சார்ந்து ஆழ்ந்த கல்வி கற்றவர்; பாரிஸ், நியூ யார்க் நகரங்களில் தனிநபர் ஓவியக் காட்சிகள் நடத்திய துறைசார் அனுபவம் உள்ளவர். தமிழ்நாட்டில் நவீன ஓவியம் பற்றிய புரிதல் கல்விப் புலம், வெகுஜன ஊடகம் உள்ளிட்ட தளங்களில்கூட மிகக் குறைவாகவே பேசப்படும் நிலையில், மேற்கத்திய ஓவியங்களைத் தமிழ் வாசகர்கள் எளிதாக உள்வாங்கக் கூடிய வகையில் மோனிகா எழுதிய அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.

நவீன இந்திய ஓவியம்- வரலாறும் விமர்சனமும்
மோனிகா
எதிர் வெளியீடு
விலை: ரூ.1,200

----

களவும் கற்பும்: தமிழ் வாழ்க்கை நிலைகளை அகப்பொருள், புறப்பொருள் என இலக்கணப்படுத்துகிறது தமிழ். ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' எனச் சொல்லும் தொல்காப்பியம், உலகின் தொன்மையான இலக்கண நூல்களுள் ஒன்று. இந்நூல் பொருள் இலக்கணம் பற்றியது. ‘இறையனார் அகப்பொருள்’ (நக்கீரர் உரை வழங்கியது), அகப்பொருளுக்கான தனித்துவமான முதல் இலக்கண நூலாகும். இதில் ஆணுக்கும் பெண்ணுக்குமான வாழ்க்கையின் முதல் நிலையைக் களவியல் என வகைப்படுத்தி, அதற்கான இலக்கணங்களை வரையறுக்கிறது இந்நூலின் முதல் பகுதி. களவியலில் ஆணும் பெண்ணும் நாடறியா வண்ணம் தங்களுக்குள் காதல் வளர்த்துக்கொள்வதும் புணர்ச்சியும் காதலைத் தோழியிடம் பகிர்வதும் வருகின்றன. களவு என்றாலும் இது குற்றமாகப் பார்க்கப்படவில்லை. களவு வெகு காலம் ரகசியமாக இருக்காதில்லையா? அது வெளிப்படும் நிலை, கற்பியல் என வகைப்படுத்தப்படுகிறது. இது இந்நூலின் இரண்டாம் பகுதி. நாடறியாக் காதல், இரு வகையில் அம்பலமாகும். இருவர் கூடி இந்தக் காதல் பற்றிப் பேசுவது அம்பல் என்றும் ஊர் அறியும் வண்ணம் பேசுவது அலர் என்றும் வகைப்படுத்துகிறது அகப்பொருள் இலக்கணம். இதனால் காதலர்கள் எதிர்கொள்ளும் இடர்களையும் இந்தப் பகுதி பேசுகிறது. எளிய தமிழில் இந்த இலக்கண நூலுக்கு அ.செந்தில்நாதன் உரை எழுதியுள்ளார். மாணவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இறையனார் அகப்பொருள்
உரையாசிரியர்: அ.செந்தில்நாதன்
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்
விலை: ரூ.175

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in