நம்பிக்கை அளிக்கும் நவ எழுத்துகள்

நம்பிக்கை அளிக்கும் நவ எழுத்துகள்
Updated on
2 min read

இரண்டாயிரத்து இருபதுக்குப் பிறகு நம்பிக்கை அளிக்கும் பல இளம் கதைஞர்கள் தமிழில் உருவாகியிருக்கிறார்கள். இவர்கள் அதற்கு முந்தைய பத்தாண்டுகளின் இறுதியில் எழுத வந்தவர்கள். இணைய இதழ்களில்தான் இவர்களது பெரும்பாலான கதைகள் வெளியாகியிருக்கின்றன. தமிழ்ப் புனைகதைக்கு வளம் சேர்க்கும் பல புனைவுகள் இவர்களின் வழியாக உருப்பெற்றிருக்கின்றன. அந்த வகையில் கவிதையிலிருந்து புனைகதைக்கு நகர்ந்துள்ள முத்துராசா குமாரின் ‘ஈத்து’ குறிப்பிடத்தக்க தொகுப்பு. நிலத்துக்கும் மனிதனுக்குமான இருப்பை இவர் வெவ்வேறு புனைவுகளாக எழுதியுள்ளார்.

இயற்கையிலிருந்து தங்களைத் துண்டித்துக்கொள்ளாத மனிதர்கள் இவரது கதைகளில் நடமாடுகிறார்கள். நவீன வளர்ச்சி இம்மனிதர்களின் வாழ்க்கை மீது நிகழ்த்தும் இடையீட்டைத் ‘தொல்லிருள்’ என்ற கதையில் எழுதியிருக்கிறார். இக்கதையில், மின்சாரம் நவீனத்துவத்தின் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிலத்தின் மீது மனிதர்களுக்குள்ள அவ்வளவு உரிமைகளும் புழு பூச்சிகளுக்கும் உண்டு என்பது இவரது பார்வை.

கன்னியாகுமரி மாவட்டம் தந்த எழுத்தாளர் அமுதா ஆர்த்தி; இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ‘பருந்து’. தன் அன்றாடத்தில் காண நேர்ந்த புற உலகத்தை அமுதா புனைவுகளாக எழுதியுள்ளார். பெண்களின் நுண்ணுணர்வுகள் சார்ந்தும் பெண்களுக்கும் வீட்டுக்குமான உறவுகள் சார்ந்தும் எழுதப்பட்ட பல கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

தன் இனத்தின் மீது கட்டப்பட்டுள்ள பெருமை சிறுமைகளைச் சுமந்துகொண்டே ஒவ்வொரு உயிரினமும் இந்தப் புற உலகத்தைப் பார்க்கிறது. ‘பருந்து’ இதற்குச் சிறந்த உதாரணம். பருந்தைப் பெண்ணுக்கான குறியீடாக மாற்றியும் வாசிப்பதற்கான இடத்தைப் புனைவு பெற்றிருக்கிறது. மனித அக உலகத்தின் இருண்மைகள் மீது இவரது புனைவுகள் கவனம் செலுத்தும்போது தவிர்க்க முடியாத எழுத்தாளராக மாறுவார்.

மதுரை மாவட்டத்தைச் சார்ந்த லட்சுமிஹர், ‘ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள்’, ‘டார்லிங் எனப் பெயர் சூட்டப்பட்ட சித்தாந்தம்’ என இரு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். மொழியை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்துகிறார்; கதைகளுக்குள் அதிக இடைவெளிகளை உருவாக்குகிறார்.

கலைக்கும் இவருக்குமான உடன்படிக்கையாகத் தன் கதைகளைத் தனக்கே சொல்லிப் பார்த்துக்கொள்ளும் பல புனைவுகள் இவரது தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. நிலம், இயற்கை, தொன்மம், காமம், மாய யதார்த்தம் எனப் பல வகைமைகளில் இவரது புனைவுகள் வாசகருடன் ஊடாடுகின்றன.

கன்னியாகுமரி தந்த மற்றொரு எழுத்தாளர் இவான் கார்த்திக். இவரது முதல் நாவல் ‘பவதுக்கம்.’ நோயும் அதனைத் தொடர்ந்துவரும் மரணமும் தவிர்க்க முடியாதவை. இந்த இடைப்பட்ட காலத்தில் மனிதன் அவ்வளவு இழிவுகளுடனும் வாழ்கிறான். மரணத்தின் மூலமாக வாழ்வின் நிலையற்ற தன்மையை இந்நாவல் பகிர்ந்துகொள்கிறது.

இளமை, உடல், செல்வம் ஆகிய மூன்றும் நிலையற்றவை என்று அற இலக்கியங்கள் பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு உவமைகளின் வழியாகக் கூறிக்கொண்டே வந்துள்ளன. பவதுக்கமும் அதில் இணைந்துகொள்கிறது. நார்வே நாட்டைச் சேர்ந்த எட்வர்ட் மூன்கின் ‘நோயறையில் மரணம்’ என்ற ஓவியமே இந்நாவல் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது.

‘பட்டர் - பி’, ‘ராம மந்திரம்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளை எழுதிய வைரவன் லெ.ரா.வும் கன்னியாகுமரியைச் சார்ந்தவர். இளமைக்காலத்தின் நினைவுகளைப் புனைவுகளாக எழுதிவருபவர். இவரது புனைவுகளில் வெளிப்படும் குழந்தைத்தனம், இவரது அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. நாஞ்சில் நாட்டின் தொன்மம், வட்டார வழக்கு ஆகியனவும் இவரது புனைவுகளுக்குத் தனித்தன்மையை உருவாக்குகின்றன. அறிவியல் புனைகதைகளையும் தொடர்ந்து எழுதிவருகிறார்.

நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த விஜய ராவணன், பொருட்படுத்தத்தக்க புனைகதை ஆசிரியராக வளர்ந்துவருகிறார். ‘நிழற்காடு’, ‘இரட்டை இயேசு’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறார் பருவ அனுபவங்கள், தொன்மங்கள், நாட்டார் வழக்காற்றியல் சார்ந்த புனைவுகளுக்கு இவர் முக்கியத்துவம் கொடுத்து எழுதிவருகிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் சொல்லப்பட்ட இயேசு பற்றிய தொன்மக் கதையை அடிப்படையாகக் கொண்டு ‘இரட்டை இயேசு’ சிறுகதையை எழுதியுள்ளார். அமானுஷ்யத்தை எளிமையாகவும் சொல்ல முடியும் என்பதற்கு விஜய ராவணனின் புனைவுகள் ஓர் எடுத்துக்காட்டு.

திருச்சியைச் சார்ந்த ச.வி.சங்கர நாராயணனின் சிறுகதைத் தொகுப்பு ‘விறலி.’ மனிதர்களைக் கடவுளின் இடத்துக்கு நகர்த்தும் இவரது பார்வை குறிப்பிடத்தக்கது. தேர்ந்துகொண்ட பொருண்மையைக் கச்சிதமாகச் சொல்லி முடித்துவிடுகிறார். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து எழுதும் எஸ்.தேவி, தன் முதல் நாவலான ‘பற்சக்கரம்’ நாவலிலேயே கவனத்தை ஈர்த்திருக்கிறார். நூற்பாலைகளில் பணியாற்றும் பெண்களின் அகப்புறச் சிக்கல்களையும் சிறுதொழிலின் நலிவையும் யதார்த்தமாக எழுதியதால் எஸ்.தேவியை நம்பிக்கை அளிக்கும் புனைகதையாளராகக் கருதலாம்.

திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த லோகேஷ் ரகுராமனின் சிறுகதைத் தொகுப்பு ‘விஷ்ணு வந்தார்’. அறிவியல், தொன்மம், சூழலியல் பற்றிய புனைவுகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. சர்வோத்தமன் சடகோபனின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘முறையிட ஒரு கடவுள்’ முக்கியமான தொகுப்பாகும். தன் அடையாளங்களை எப்படியாவது நிறுவிக்கொள்ள முயலும் நவீன மனிதர்களின் கதைகளை சர்வோத்தமன் சடகோபன் புனைவுகளாக எழுதியிருக்கிறார்.

இவர்களுடன் ஜெயன் கோபாலகிருஷ்ணன், ச.துரை ஆகியோரையும் இப்பட்டியலில் இணைத்துக்கொள்ளலாம். தற்காலத்தில் எழுதும் பெரும்பான்மையான இளம் எழுத்தாளர்கள் தகவல் தொழில்நுட்பம், திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுபவர்களாக இருக்கிறார்கள்.

இவர்களுக்குத் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதில் தடுமாற்றங்கள் இருக்கின்றன. முன்னோடிகளின் எழுத்துக்களைத் தொடர்ச்சியாக வாசிப்பதினூடாகத்தான் மொழி பற்றிய புரிதலை இவர்கள் அடைய இயலும். ஆனாலும் அடுத்தடுத்த படைப்புகளின் வழியாக தமிழ்ப் புனைகதை வளர்ச்சிக்கு இவர்கள் பங்களிப்பார்கள் என்று நம்பலாம்.

- ramesh5480@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in