வைகையை உயிர்ப்பித்த வரலாறு கொண்டது முல்லைப்பெரியாறு: எழுத்தாளர் அ.வெண்ணிலா நேர்காணல்

வைகையை உயிர்ப்பித்த வரலாறு கொண்டது முல்லைப்பெரியாறு: எழுத்தாளர் அ.வெண்ணிலா நேர்காணல்
Updated on
2 min read

அ.வெண்ணிலா, தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். ‘கங்காபுரி’, ‘சாலாம்புரி’ ஆகிய வரலாற்றுப் புதினங்களை எழுதியுள்ளார். முல்லைப் பெரியாறு அணை தொடர்பான அவரது வரலாற்று நாவல் ‘நீரதிகாரம்’ இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளிவந்துள்ளது. அது குறித்து அவருடன் கலந்துரையாடியதில் இருந்து:

முல்லைப் பெரியாறு சமீபத்திய வரலாறு. இதைப் புனைவாக்குவதில் எதிர்கொண்ட சவால் என்ன? - தெரிந்த கதையில் புனைவுக்கான சாத்தியம் குறைவு என்று நம்பப்படுகிறது. அது உண்மையல்ல. பிரிட்டிஷார் கட்டிய இந்த அணை எல்லா வளர்ச்சித் திட்டத்தையும்போல் சாதாரணமானதன்று. தாது வருஷப் பஞ்சம் என்கிற உருவாக்கப்பட்ட பஞ்சத்தால் மூன்றில் ஒரு பகுதி மதுரை மக்கள் இறந்துவிட்டனர்; சிலர் புலம்பெயர்ந்து போய்விட்டனர். இதை ஒட்டிக் கட்டப்பட்ட அணை இது. இதற்குள் அறியாத கதைகள் இன்னும் பல இருக்கின்றன.

என்ன மாதிரியான கதைகள்? - இந்த அணை அன்றைய திருவிதாங்கூர் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டது. அதனால், இன்று வரை கேரள-தமிழக அரசுக்கு இடையில் தொடரும் அரசியல், அன்றைய காலகட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சாதிய வேற்றுமை, பசுமையான நிலத்தில் வாழ்ந்தாலும் குடிநீருருக்குக்கூடக் கஷ்டப்பட்ட கம்பம் பள்ளத்தாக்கு மக்களின் நிலை என ஒரு புனைவுக்கான ஈர்ப்புள்ள அம்சங்கள் பல இந்த வரலாற்றில் இருக்கின்றன. வளம் மிக்க வரலாறு கொண்ட வைகையை இந்த அணைதான் உயிர்ப்பித்தது எனப் பல விஷயங்களை எடுத்துக்கொண்டு இதை எழுதியிருக்கிறேன்.

வாய்மொழி வரலாற்றில் உள்ள புனைவுகளை உங்கள் ஆய்வின் வழி கண்டறிந்தீர்களா? - பென்னி குயிக் பற்றிய நிறைய வாய்மொழிப் புனைகதைகள் உலவுகின்றன. பென்னி குயிக்குக்குக் கூடுதல் பெருமையைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்தக் கதைகள் புனையப்பட்டிருக்கலாம். இப்படியெல்லாம் கதைகள் கட்டப்பட்டால்தான் மக்களை ஒன்றுதிரட்ட முடியும் என்கிற நல்லெண்ணத்தில் சொல்லப்பட்டிருக்கலாம்.

பிரிட்டிஷாரே கைவிட்ட பிறகு பென்னி தன் கைக்காசைப் போட்டுக் கட்டினார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இம்மாதிரிக் கதைகள், கம்பம் பகுதியில் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் இருக்கிறது. அவர்கள் ஏதோ ஒருவிதத்தில் இந்தப் பெரிய வரலாற்றுடன் தங்களைத் தொடர்புபடுத்திக் காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதையே இந்தக் கதைகள் வழி அறிய முடிகிறது. ஆனால், இந்த வரலாற்று உண்மைகளைக் கண்டறிவது இந்த நாவலின் நோக்கமல்ல.

மன்னான் பழங்குடிகள் பற்றி எழுதியிருக்கிறீர்கள்... மன்னான்கள் பாண்டிய நாட்டிலிருந்து பூஞ்சாறு அரசர்களுடன் சேர்ந்து மேற்கு மலைத் தொடருக்குக் குடிபெயர்ந்தவர்கள். இவர்கள் இன்றைக்கு உள்ள நமது பொங்கல் பண்டிகை மாதிரியான அறுவடைத் திருநாள் முடிந்த பிறகு ‘கஞ்சிவைப்புத் திருவிழா’ என்று ஒரு பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இதை மீனாட்சிக்குத்தான் படைக்கிறார்கள்.

கஞ்சிவைப்புத் திருவிழாவில் ‘கண்ணகைப் பாடல்’ எனச் சிலப்பதிகாரத்தைத்
தான் பாட்டாகப் பாடுகிறார்கள். ஒரு தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் அங்கு நாட்டார் தன்மையுடன் இருக்கிறது. மாதவியும் கண்ணகியும் சேர்ந்து இருப்பது போன்ற சில மாற்றங்கள் அதில் இருக்கின்றன.

இந்த ஆய்வுக்காக லண்டன் வரை சென்றிருக்கிறீர்கள். அது பற்றிச் சொல்லுங்கள்? - இது சமீபத்திய வரலாறு என்பதால், பிரிட்டிஷ் ஆவணம் சார்ந்து இதற்கான சான்றுகளைத் தேட முதலில் தீர்மானித்தேன். தமிழ்நாட்டில் ஆவணங்கள் கிடைக்கவில்லை. டெல்லியிலும் தேடிப் பார்த்தேன். அதனால்தான் பொருள் செலவானாலும் பரவாயில்லை என லண்டன் சென்றேன். ஆய்வுக்கு அப்பாற்பட்டு பென்னிகுயிக் வாழ்ந்த இடத்தைப் பார்ப்பது ஒரு எழுத்தாளராக எனக்கு நெருக்கமாக இருக்கும் என நினைத்தேன்.

லண்டனுக்கு ஒரு முறைதான் சென்றிருக்கிறேன். ஆனால், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிக்குப் பல முறை சென்றுள்ளேன். இந்த ஆய்வில் கண்டறிந்த ஏறக்குறைய 35 ஆயிரம் ஆவணங்களை தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகத்திடம் ஒப்படைத்துள்ளேன். அது விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கிடைக்கும்.

கண்ணகியை இதற்குள் கொண்டுவந்திருக்கிறீர்களா? - கண்ணகி கடைசியாக வந்த – ‘விண்ணேற்றிப் பாறை’ என இளங்கோவடிகள் சொல்லும் - இடம் பெரியாறு அணைக்கு மேல்தான் இருக்கிறது. கண்ணகியின் தோழியான தேவந்தியையும் இதில் கொண்டுவந்துள்ளேன். இந்தத் தேவந்தி தமிழ் வாழ்க்கையின் முக்கியமான குறியீடு. அணையுடன் சேர்ந்து தமிழ் வாழ்க்கையையும் இந்த நாவலுக்குள் சொல்லியிருக்கிறேன்.

- தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in