Published : 07 Jan 2024 06:05 AM
Last Updated : 07 Jan 2024 06:05 AM
கோவை: வாசிப்புப் பழக்கம் மக்களிடம் என்றும் நிலைத்திருக்கும் என கோவையில் ‘இந்து தமிழ் திசை’, வர்த்தமானன் பதிப்பகம் சார்பில் நடந்த வாசிப்புத் திருவிழாவில் எழுத்தாளர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் வர்த்தமானன் பதிப்பகம் சார்பில், வாசிப்புத் திருவிழா, கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. ‘இந்து தமிழ் திசை’ கோவை பதிப்பு செய்தி ஆசிரியர் என்.பிரபாகரன் வரவேற்றார். முதன்மை உதவி ஆசிரியர் ஆர்.ஜெயக்குமார் நிகழ்ச்சியில் பேசினார். வர்த்தமானன் பதிப்பக உரிமையாளர் ஸ்ரீ வர்த்தமானன், விஜயா பதிப்பகம் உரிமையாளர் மு.வேலாயுதம், எழுத்தாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில், வர்த்தமானன் பதிப்பக உரிமையாளர் ஸ்ரீ வர்த்தமானன் பேசும்போது, ‘‘எழுதுவதற்கான சொற்கள் கிடைக்க, நிறைய வாசிக்க வேண்டும். சொற்கள் கிடைத்தால் தான் மிகப்பெரிய ஒரு நாவல் எழுத முடியும். 2014-க்கும் 2023-க்கும் இடைப்பட்ட காலத்தில் 10-ம் வகுப்பினை ஒரு கோடி மாணவர்கள் எழுதியுள்ளனர். இவர்களது காலத்தில் தான் தொழில்நுட்ப புரட்சியான செல்போன் வந்தது. இவர்கள் தங்கள் பாடப் புத்தகங்களுக்குரிய பாடநூல்களை படிப்பதை விட்டுவிட்டனர். இவர்களிடம் வாசிப்பின் நோக்கத்தையும், அதன் மகிமையையும் தெரிவித்துவிட்டால் அவர்கள் கண்டிப்பாக படிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. தினமும் இரண்டு மணிநேரம் செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். ஒரு கோடி பேரில் 10 லட்சம் பேர் வாசிப்புப் பக்கம் திரும்பினாலும் நமக்கு வெற்றிதான்,’’ என்றார்.
விஜயா பதிப்பகம் உரிமையாளர் மு.வேலாயுதம் பேசும்போது, ‘‘வாசிப்பு என்பது படிப்பவர்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு மாதிரியான உலகத்தை காட்டும். வாசிப்பு என்பது வானத்தை விட, பூமியை விட, கடலை விட, பஞ்சபூதங்களை விட பெரியது. எழுதுவதற்கு ஒரு இலக்கணம் உள்ளது போல், வாசிப்புக்கும் ஒரு இலக்கணம் உண்டு. அதன்படி வந்தால் சரியாக இருக்கும்.
படைப்பு உலகம் எவ்வளவு சக்தியை உங்களுக்கு தருகிறது. நீங்கள் படிக்க படிக்க, நீங்களே படைப்பாளியாகலாம். இது யாருக்கும் கிடைக்காத விஷயம். நீங்கள் ஒரு நூலை படிக்கும் போது உங்களுக்குள் ஒரு மாற்றம் ஏற்படும். ஆழ்மனக்கணிப்பு, கற்பனை எல்லாம் நமக்கு வரும்.
ஒரு படைப்பை எடுத்து படிக்க ஆரம்பித்தால், உங்களுக்குள் ஒரு பூதம் உருவாகிவிடும். குழந்தைகளுக்கு புத்தகங்களை படிக்கச் சொல்லிக் கொடுக்க வேண்டும். வாசகர்கள் இன்றும் உள்ளனர். அவர்கள் படித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு தீனி கொடுக்க முடியவில்லை.
அறிவியல் வளர்ச்சி, கணினி வளர்ச்சி ஒரு பக்கம் மேலே செல்கிறது. மறுபக்கம் பண்பாடு, கலாச்சாரம் கீழே போய்க் கொண்டிருக்கிறது. இதை வாசிப்புதான் சரி செய்ய முடியும்’’ என்றார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எழுத்தாளர் ராஜேஷ்குமார் பேசும்போது, ‘‘இவர்கள் எல்லாம் வாசிப்பு போய் விடுமோ, புத்தகம் விற்காதோ என குழம்புகின்றனர். வாசிப்பு என்றைக்கும் போகாது. அன்றைக்கு சிறுதானியங்களை ஒதுக்கிவிட்டு அரிசி சாதத்தையும், பீட்சாவையும் சாப்பிட்டோம். இன்று சிறுதானியங்களை கடைகளில் நாம் தேடுகிறோம். அந்த நிலைமை புத்தகங்களுக்கும் வரும்.
துபாய், சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் புத்தகங்கள் புதுவடிவம் பெற்று எல்லோர் கையிலும் இருக்கின்றன. அந்த பொன்னாள் இங்கு வரும்.
ரயில் பயணத்தின் போது 25 வயது இளைஞர் என் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். வாசிப்புப் பழக்கம் இருக்கிறது. எப்போதும் வாசிப்பு போய்விடாது. பழைய பட்டுப்புடவை, பழைய தங்கம், பழைய பாடல்களுக்கு தான் இன்று மதிப்பு. நல்ல எழுத்தாளருக்கு அழகு, பெண்களை கொச்சைப்படுத்தி எழுதாமல் இருப்பது. வாசிப்பு என்பது படிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். என்னை நான் செதுக்கி செதுக்கி இந்த அளவுக்கு வந்தேன். கண்டிப்பாக வாசிப்புப் பழக்கம் மக்களிடம் என்றும் நிலைத்திருக்கும். புத்தகத்தில் போதை உள்ளது என மூளைக்கு சொல்லிக்கொடுங்கள். மூளைக்கு நாம்கேட்க வைப்பதன் மூலம் வாசிப்பைஅதிகப்படுத்தலாம்,’’ என்றார்
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் கோவை பதிப்பு விற்பனை மற்றும் விநியோகப் பிரிவு மேலாளர் ப.விஜயகுமார் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியை ‘இந்து தமிழ்திசை’யின் உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான வாசகர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT