

நூறாண்டுகளைக் கடந்த தமிழ் நிலத்தின் பதிப்புத் துறை, இந்திய விடுதலைப் போராட்டக் காலத்திலிருந்து இன்றைய சமூகப் பண்பாட்டு, அரசியல் தளத்தில் பெரும் தாக்கம் செலுத்துகின்ற துறை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நான்கு தலைமுறையாகப் பதிப்புலகில் காலூன்றியிருப்பவர்கள், இரண்டு-மூன்று தலைமுறை வாசகர்களைத் தமக்கெனக் கொண்டவர்கள் என்று பதிப்புத் துறையில் ஆளுமை செலுத்தி வரும் பதிப்பகங்கள் பலவும் உண்டு. 2010க்குப் பிறகு இந்தத் துறையில் நுழைந்த நானும் எனக்கு மூத்தவர்களும் டிஜிட்டல் யுகம் எனும் மிகப் பெரிய தொழில்நுட்ப வலைப்பின்னலில் நித்தமும் உருமாறிக்கொண்டிருக்கும் பதிப்புச் சாத்தியங்கள் குறித்த எதிர்கால அச்சங்களை எதிர்கொண்டுதான் வருகிறோம்.
இதற்கு மத்தியிலும் எதிர்காலத்தை நம்பிக்கைக்கு உரியதாக்கியிருக்கும் சில புதிய தலைமுறைப் பதிப்பாளர்கள் சமீபத்தில் உருவாகியிருக்கிறார்கள். அவர்களின் முயற்சியால் இந்தத் துறை ஊக்கம்பெற்று வளர்ச்சியடைந்தால், தடைகளைச் சாதகமாக்கி எதிர்காலத்தில் பயணிக்கும் என நம்பலாம்.
வேக்கப் பப்ளிஷர்ஸ்: இது சிறார்களுக்கான புதிய பதிப்பகம். ஆங்கிலத்தில் வெளிவருவதற்கு இணையான தயாரிப்பில் தமிழில் குழந்தைகளுக்கான நூல்களைத் தயாரிப்பதில் இரண்டு சிக்கல்கள் பிரதானம். அடக்கவிலை – குறைந்த எண்ணிக்கையில் வெளியிடும் வரை கட்டுப்படியாகும் விலையில் வைக்க இயலாது என்பது முதலாவது சிக்கல்.
தரவிறக்கம் செய்யாமல், உரிமத்தோடு அல்லது தற்காலத் தலைமுறையின் ரசனைக்கேற்றவாறு உருவாக்குவது என்பது அடுத்த சிக்கல். இரண்டையும் தெரிந்தே களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இந்நிறுவனத்தின் வினோத் ஐ.ஐ.டியில் படித்துவிட்டு வந்தவர் (அவ்விதமே ‘ழகரம்’ பதிப்பகமும் தரமான வடிவமைப்பில் ஆங்கில நூல்களுக்கு இணையாகச் சிறார்களுக்கான நூல்களைத் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறது).
அழிசி பதிப்பகம்: இதன் நிறுவனரான ஸ்ரீனிவாசன் மென்பொருள் துறையில் பணிபுரிந்தவர். தனது வாசிப்பின் ஈர்ப்பால், அச்சில் இல்லாத அல்லது இதழ்களில் வந்து அச்சில் வெளிவராத; மறந்துபோன நிறைய நூல்களைக் கிண்டிலில் மின்னூலாக ஏற்றி ஒரு பெரும் பெட்டகத்தை உருவாக்கியவர்.
அதே கூர்நோக்குடன் எளிமையாக ஆரம்பித்திருக்கும் பதிப்பகம் இவருடையது. அரிய நூல்களோடு, இளைய படைப்பாளர்களின் நூல்களையும் பதிப்பிக்கிறார்.
சீர் வாசகர் வட்டம்: தமிழ் வாசகப் பரப்பில் பெருஞ்சேவையை ஆற்றியிருக்கும் சீர் வாசகர் வட்டம். திரள்நிதி (கிரவுட் ஃபண்டிங்) முறையில் இலக்கிய ஆர்வலர்கள் தரும் தொகையைக் கொண்டு, மலிவு விலையில் தரமான அச்சில் நூல்களைக் கொண்டுவரும் இவர்களது அமைப்பு, வெற்றிகரமாக ஒரு வட்டப்பாதையை முடித்திருக்கலாம்.
அதற்குள் நிறைய எதிர்ப்புகளையும், அதைவிட அதிக வரவேற்பையும் பெற்றுள்ள பதிப்பகம். இதுவரை விற்றுள்ள புதுமைப்பித்தன் கதைகள் 20,000 பிரதிகளில் 10 சதவீதம் பேர் வாசித்தால்கூட வாசகப் பரப்பு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாறியிருக்கும்.
இங்கு பலரும் தத்தமது வீட்டு விசேஷங்களில், அன்பளிப்புகளில் இத்தகைய இலக்கிய நூல்கள் இடம்பெறச் செய்வது ஆரோக்கியமான எதிர்காலத்தை முன்வைக்கிறது.
சீர்மை: இது பிரபல வணிக நிறுவனமான காமன்ஃபோக்ஸ் இணையதளத்தின் பதிப்பகம். இசுலாமிய மதம் சார்ந்த, அரசியல் சார்ந்த நூல்கள், தத்துவ விளக்கங்கள் ஒருபுறமும், மற்றொரு புறம் இவர்களது மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் மிக முக்கியமானவை.
நேரடியாக அரபி மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள இலக்கிய நூல்கள் பெரிதும் கவனத்தைக் கோருகின்றன. தொடர்ந்து முக்கியமான நூல்களை (அரசியல், மதம், இலக்கியம் சார் நூல்கள்) தக்க ஆசிரியர்களைக் கொண்டு மொழிபெயர்த்து மிகத் தரமான வெளியீடுகளாகக் கொண்டு வரும் பதிப்பகம்.
பியூர் சினிமா: பேசாமொழி / படச்சுருள் / கூடு / தமிழ் ஸ்டூடியோ / பியூர் சினிமா / கருப்பு வெளியீடு என வெவ்வேறு பணிகளைத் திரைத் துறை சார்ந்த முன்னெடுப்புகளை, மாற்று வெளிகளை விவாதிக்கின்ற, பேசுகின்ற நிறுவனம். திரைப்படங்கள், ஆளுமை, விமர்சனங்கள், அரசியல் என முழு உத்வேகத்தோடும் ஈடுபாட்டோடும் தனித்துவத்தோடும் இயங்கும் அமைப்பு இது. அருண்.மோ இதன் நிறுவனர்.
மேற்சொன்ன வரிசை ஒரு பட்டியல் அல்ல, இது தவிர்த்தும் நிறையப் பதிப்பகங்கள் குறிப்பிட்ட நோக்குடன் தீவிரமாக இயங்குகின்றன. வாசக சாலையின் தொடர்ச்சியான பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. க்வீயர் (பால் புதுமையருக்கான பதிப்பகம்), இடையினம் பதிப்பகம் (திருநங்கைகளுக்கானது), ஹெர் ஸ்டோரீஸ் உள்ளிட்ட முக்கியமான பதிப்பகங்கள் பயணத்தை வெவ்வேறு பரிமாணங்களுடன், தடங்களுடன் தொடங்கியுள்ளன.
டிஜிட்டல் யுகத்தில், சுயமாகப் பதிப்பிக்கவைக்கும் தளங்கள் உருவாகிய காலத்திலும் இந்தப் பதிப்பகங்கள் நின்று களமாடி எதிர்காலத்தின் சாலைகளை அகலப்படுத்தியிருக்கின்றன.
- தொடர்புக்கு: kaalidossan@gmail.com