Last Updated : 28 Jan, 2018 08:00 AM

 

Published : 28 Jan 2018 08:00 AM
Last Updated : 28 Jan 2018 08:00 AM

பழமையை உணராமல் புதுமையில் எப்படிச் சாதிக்க முடியும்? - மூத்த நாட்டிய ஆசான் பா.ஹேரம்பநாதன் பேட்டி

பரதநாட்டிய உலகில் 60 ஆண்டுகளாக இயங்கிவருபவர், பா.ஹேரம்பநாதன். தஞ்சாவூரில் புகழ்பெற்ற மிருதங்கக் கலைஞராகவும் நாட்டிய ஆசானாகவும் திகழ்ந்த பாவுப்பிள்ளையுடைய மகன். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் சீடர்களைக் கொண்டவர். தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் ‘சின்ன மேளம்’ விழா நடைபெறுவதற்குக் காரணமாக இருந்தவர். 200-க்கும் மேற்பட்ட அரங்கேற்றங்கள், 1,000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள், 100-க்கும் மேற்பட்ட விருதுகள் என நாட்டிய மேடையின் நீள, அகலத்தைத் தனது 60 ஆண்டு கால அனுபவத்தால் அளந்தவர். தஞ்சை மேல வீதியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதிலிருந்து…

உங்களுடைய தந்தை பாவுப்பிள்ளை பற்றிச் சொல்லுங்கள்…

மிருதங்க இசையிலும் நாட்டியக் கலையிலும் புகழ்பெற்று விளங்கியவர். பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, அவருடைய மகன் முத்தையா பிள்ளை, அவருடைய பேரன் கிட்டப்பா பிள்ளை, சொக்கலிங்கம் பிள்ளை, சுப்பராய பிள்ளை போன்றவர்களுக்கெல்லாம் மிருதங்கம் வாசித்தவர். எனது முதல் ஆசான். எங்களது கலைக் குடும்பத்தின் தலைவராக இருந்து, அனைவரையும் உயர்த்தியவர்.

எப்போது மிருதங்கம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தீர்கள்?

எனக்கு ஏழு வயதாக இருந்தபோது, தஞ்சாவூர் ராஜம் ஐயர் என்கிற மிருதங்க வித்வானிடம் என்னைக் கொண்டுபோய் விட்டார்கள். அவரிடம் 10 ஆண்டுகள் மிருதங்கம் கற்றுக்கொண்டேன். ஓரளவு கற்றுக்கொண்ட பிறகு, என் அப்பாவுடைய மாணவிகள் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்யும்போது என்னை மிருதங்கம் வாசிக்கச் சொன்னார்கள். எங்கள் குடும்பங்களில் யாரும் முறையாக அரங்கேற்றம் செய்துகொள்வதில்லை. வாசிக்க ஆள் வராதபோது, ‘கொஞ்சம் அப்படி உட்கார்ந்து வாசிடா’ன்னு சொல்வாங்க, அவ்வளவுதான். அப்படியே மேடைக்கு வந்துவிடுவோம்.

பரதநாட்டிய ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

அந்தக் காலத்தில், என் பெரியம்மா கமலாம்பாளின் பொன்னையா நாட்டியப் பள்ளி, என் பெரிய மாமியார் லக்ஷ்மிகாந்தத்தின் பிச்சையா பிள்ளை நாட்டியப் பள்ளி, அருணாசலம் பிள்ளை, ராஜேந்திரன்… இப்படி நான்கைந்து பள்ளிகள் மட்டுமே தஞ்சாவூரில் இருந்த காலம். இவை எல்லாவற்றுக்கும் என் அப்பாதான் மிருதங்க வித்வான். நான் அவர் கூடவே பல நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவருவேன். பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மிகப் பெரிய கலைஞர். ருக்மிணி தேவி அருண்டேல், சாந்தாராம் போன்றவர்கள் எல்லாம் தஞ்சாவூருக்கு வந்து அவரிடம் கற்றுக்கொள்வார்கள். அப்போது மீனாட்சிசுந்தரம் பிள்ளையுடன் முத்தையா பிள்ளை, கிட்டப்பா பிள்ளை, சுப்பராய பிள்ளை என நாட்டியக் கலையின் புலி சிங்கங்கள் எல்லாம் உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும்போதே தெய்வீகமாக இருக்கும். அவர்கள் பயிற்றுவிக்கும்போது, என் அப்பா மிருதங்கம் வாசிப்பார். இப்படி மாபெரும் கலைஞர்களைத் தொடர்ந்து அருகில் இருந்து கவனித்ததால் எனக்கும் நாட்டியக் கலையில் ஆர்வம் தொற்றிக் கொண்டது.

மிருதங்க வித்வானாக இருந்த நீங்கள் எப்படி நட்டுவனாராக மாறினீர்கள்?

தஞ்சை பெரிய கோயிலில் என் அப்பா மிருதங்கம் வாசிப்பது உண்டு. அதற்கு முட்டுக்காரர் என்று சொல்வார்கள். நான் எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு வீட்டில் இருந்த நேரம், அங்கே போய்க் காலையிலும் மாலையிலும் மிருதங்கம் வாசிப்பேன். 1961, 62 காலகட்டத்தில் பெரிய கோயிலில் அர்த்தசாம பூஜையின்போது சிவாச்சாரியார், நட்டுவனார், மிருதங்க வித்வான், நைவேத்திய பரிசாரகர் என நான்கு பேர்தான் இருப்போம். அப்போது என் தோளில் இருந்த மிருதங்கத்தை நட்டுவனாரிடம் கொடுத்துவிட்டு, நட்டுவனார் கையில் இருந்த நட்டுவ தாளத்தை வாங்கி, நானே தை… தை... தா… என்று தட்டித் தட்டிக் கற்றுக்கொண்டேன். நட்டுவாங்கத்தைப் பொறுத்தவரை எனக்கு ஆசான், பெரிய கோயிலின் மூலவர் பெருவுடையார்தான். பிறகு, என் அப்பாவும் கற்றுக்கொடுத்தார்.

1967-ல் தஞ்சை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட நேரம், டாக்டர்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளுக்கு நாட்டியம் சொல்லிக் கொடுக்க வேண்டுமெனக் கேட்டார்கள். என் அப்பா, பையனை அனுப்புகிறேன் என்று சொல்லி என்னை அனுப்பினார். ஒரு பரதநாட்டிய ஆசானாக என் பயணத்தை அப்படித்தான் தொடங்கினேன். 1970-ல் அரங்கேற்றம் ஆனது!

40 ஆண்டுகளுக்கு முன் நாட்டியம் கற்பித்தல் எப்படி இருந்தது?

அப்போது வாத்தியார்கள் மாணவிகளின் வீடுகளுக்குச் செல்வது வழக்கம் இல்லை. மாணவிகள்தான் வாத்தியார் வீடுகளுக்குப் போக வேண்டும். காலையில் 7 மணிக்கெல்லாம் வந்துவிட வேண்டும். வாரத்தில் எல்லா நாட்களும் வகுப்புகள் இருக்கும். ஒரு தப்பு செய்துவிட்டால், எவ்வளவு பெரிய இடத்துப் பிள்ளைகளாக இருந்தாலும் தப்பிக்க முடியாது. அடி, உதை, ஏச்சு, பேச்சு எல்லாம் கிடைக்கும். அதுதான் தஞ்சாவூர். தஞ்சாவூர் பாணி, பந்தநல்லூர் பாணி, வழுவூர் பாணி என்று எல்லோரும் பெருமையாகச் சொல்கிறார்கள் என்றால், இந்தக் கட்டுப்பாடுதான் அதற்குக் காரணம். அதேசமயம், வாத்தியார்கள் மிகுந்த அன்பு காட்டுவார்கள்.

உங்கள் காலத்தில் நாட்டியம் கற்றுக்கொள்ளும் மாணவ, மாணவியரின் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் இதேபோல இருந்ததா?

அப்போதெல்லாம் ஒரு மாணவர் ஆசிரியரிடம் கற்கச் சென்றால், குறைந்தபட்சம் 15 முதல் 20 வருடம் வரை அதே ஆசானிடம் கற்றுக்கொண்டு நாட்டிய நிகழ்ச்சி நடத்துவார்கள். முழுமையாக, தரமாக எல்லா நுணுக்கங்களையும் கற்று முடிப்பது ஒரு மார்க்கம் எனப்படுகிறது. ஒரு மார்க்கத்தைச் சரியாக முடித்தவர், தொடர்ந்து இரண்டு மணி நேரம் ஆடக்கூடிய திறன் பெற்றவராக இருப்பார். நான் மூன்று மணி நேரம்கூட ஆட வைத்திருக்கிறேன். இப்போதெல்லாம் அதை ஒன்றரை மணி நேரமாகக் குறுக்கிவிட்டார்கள். தற்சமயம் சலங்கை பூஜை ஆடம்பரமான, அபரிமிதமான செலவுகளுடன் நடைபெறுவது ஏற்புடையதல்ல.

உங்கள் கண் முன்னாலேயே நாட்டியத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நாட்டியத்தின் தன்மை தலைகீழாக மாறிவிட்டது. இதை யாரும் வெளிப்படையாகச் சொல்வதற்கு யோசிக்கிறார்கள். எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் இருந்த நாட்டியத்தையும் நான் இந்தத் துறைக்குள் நுழைந்த காலத்தில் இருந்த நாட்டியத்தையும், இன்றைய நாட்டியத்தோடு ஒப்பிட்டால் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. மாற்றம் என்பது முன்னேற்றத்தை நோக்கியதாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், அது தரம் குறைந்ததாக ஆகிவிட்டதுதான் துரதிர்ஷ்டம்.

இக்கலையை அடுத்த கட்டத்துக்கு, நவீனமாக எடுத்துச் செல்வதைச் சரியான போக்காகக் கருதலாமா?

நவீனம் என்று சொல்பவர்கள் என்ன செய்கிறார்கள்? ‘டுடே தி பரதநாட்டியம் ரிசைட்டல்…’ என்று ஆரம்பித்து, ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். நிகழ்ச்சி சென்னையில் நடக்கிறது. அங்கே தமிழ் தெரியாதவர்களா இருக்கிறார்கள்? ‘நெள, தி ராமாயணா இஸ்…’ என்று ஆரம்பிக்கிறார்கள். ராமாயணம் ஆங்கிலத்திலா எழுதப்பட்டது? முனைவர் அனிதா ரத்னம் போன்றவர்கள் இரண்டு, மூன்று நாட்டிய முறைகளைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இதோடு அதைக் கலப்பதில்லை; அதோடு இதைக் கலப்பதில்லை. அதுதான் தன்மை; அதுதான் முறையும்கூட. நாகரிகம், புதுமை என்றால் சந்தோஷம்தான். அதை எப்படிச் செய்யப் போகிறீர்கள் என்றுதான் கேட்கிறேன். பழமையை முழுமையாக உணர்ந்துகொள்ளாத யாரும், புதுமையில் வெற்றிபெற முடியாது.

இன்றைக்கு ஒரு குறிப்பிட்ட பிரிவினர், இக்கலையைத் தங்களுடையதாக வரித்துக்கொண்டுவிட்டார்கள்.. இல்லையா?

எப்போதுமே, நம் பாரம்பரியம் என்ன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்றைக்குக் கால்களில் சலங்கையைக் கட்டிக்கொண்டுவிட்டதாலேயே, ஒரு பாரம்பரியம் வந்துவிடாது. உங்களுடைய முப்பாட்டி ஆடி இருக்கிறாரா? அவருடைய குடும்பத்தில் யாருக்காவது நாட்டியம் தெரியுமா? உங்கள் பெற்றோருக்குச் சங்கீதத்துடனோ நாட்டியத்துடனோ தொடர்பு உண்டா? உங்களுக்கு இது பெரிய விஷயமாகத் தெரிந்ததால், இங்கு வந்துவிட்டீர்கள். வரவேற்கிறோம். ஆனால், இதற்கான பாரம்பரியத்தை நீங்கள் அனுசரிக்க வேண்டும். அதன் அடிப்படையில் புதுமைகளைச் செய்ய வேண்டும். நீங்கள் புதுமையைச் செய்வதன் மூலம் கலை வளர வேண்டும். அது மிகமிக முக்கியம்.

சாதிகள் குறித்து உங்கள் கருத்து…

என் தாத்தா மராட்டிய ஆசிரியர். என் தாயைப் பெற்ற பாட்டி கள்ளர். என் தாயைப் பெற்ற தாத்தா நாயுடு. என்னுடைய மாமனார் பிராமணர். எங்கள் குடும்பத்தில் பலர் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். எங்கள் குடும்பம் ஆண்டவனின் அனுக்கிரகத்தோடு நிம்மதியாக இருக்கிறது. எங்கள் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைகளும் மருமகள்களும் உயர்வான எண்ணங்கள் கொண்டவர்கள். இதுவே சாதியைப் பற்றிய என்னுடைய பார்வை.

உங்களுடைய வாழ்வின் முக்கியமான தருணம் அல்லது சாதனை என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?

வாழ்க்கையில் நமக்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியுமே மறக்க முடியாததுதான். ஒவ்வொரு முறை அரங்கேற்றம் செய்யும்போதும் தலைமை விருந்தினராக வருபவர்கள் அர்த்தத்துடன் பேசுவார்கள். அதெல்லாம் முக்கியமான தருணங்கள். நட்டுவாங்க ரத்தினம், தலைக்கோல் ஆசான், பெரும்பாண நம்பி… இப்படிப் பல விருதுகள் எனக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் கலைமாமணி விருது, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது போன்றவற்றை இறைவன் எனக்குக் கிடைக்கச் செய்திருக்கிறான். இவற்றை மட்டுமே நான் பெரிதாகப் பேச முடியாது. அதற்கு முன்னால் என்னை ஊக்குவித்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். சென்னையில் ‘புருஷ்’ என்ற அமைப்பு ஆண் நாட்டிய ஆசிரியர்கள் 11 பேருக்கு விருது கொடுத்தார்கள். சும்மா கொடுக்கவில்லை. ‘உன் யோக்கியதை என்ன என்று சபையில் காட்டு‘ என்று சொல்லிக் கொடுத்தார்கள். என்னுடைய திறமையை என் பையனின் மூலமாக நிரூபித்தேன். நான் பெற்ற ஒவ்வொரு விருதையும் தரம் மிக்கவர்களால், விருது கொடுப்பதற்கு யோக்கியதை உள்ளவர்களின் கைகளால் வாங்கியிருக்கிறேன். என்னுடைய தொழில் தரம், தரம் என்று வளர்ந்துகொண்டே இருக்கிறது. அந்தத் தரத்தில் நான் பணக்காரன்தான்.

‘தி இந்து’ 2018 பொங்கல் மலரில் வெளியான நேர்காணலின் சுருக்கமான வடிவம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x