நூல் வெளி: ஒரு சொட்டுத் தூறல்

நூல் வெளி: ஒரு சொட்டுத் தூறல்
Updated on
3 min read

1979 ஆம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கிய தேவிபாரதி (பிறப்பு: 1957) முப்பதாண்டுகளுக்கும் மேலாகச் சிறுகதைகள் எழுதிவருகிறார். கவிதை, நாடகம், கட்டுரை ஆகியவற்றில் ஈடுபட்டாலும் சிறுகதையே பிரதானம். 1990களில் ‘நிகழ்’ இதழில் வெளியான ‘பலி’ சிறுகதை பெரிதும் கவனம் பெற்றது. ‘தலித் இலக்கியம்’ என்னும் வகைமை உருவான அக்காலகட்டத்தில் ‘பலி’ பெரிதும் விவாதத்திற்கு உள்ளானது. அதன் பின் அவர் எழுதிய பல சிறுகதைகள் ஆண் – பெண் உறவில் நேரும் உளவியல் சிக்கல்களையும் விழுமியச் சிதைவுகளையும் மையப்படுத்தின. சம்பவங்களாலும் மொழியாலும் வாசிப்போருக்குப் பதற்றத்தை உருவாக்கும் தன்மை கொண்டவை அவை.

பின்னர் காந்தியைப் பாத்திரமாக்கிய ‘பிறகொரு இரவு’ நெடுங்கதையும் அத்தலைப்பில் வெளியான நூலில் உள்ள பிற கதைகளும் அவர் எழுத்துப் பரிமாணத்தின் இரண்டாம் கட்டமாக அமைந்தன. சிறுகதை வடிவத்தைத் தாண்டி குறுநாவல் அளவிலானவை இக்கதைகள். முந்தைய கதைகளின் தொடர்ச்சியாகப் பிற கதைகள் அமைந்தாலும் அவற்றின் மொழியும் சொல்முறையும் வேறுபட்டு விளங்கின. ‘பிறகொரு இரவு’ காந்தியைப் புதிய கோணத்தில் காணும் பார்வையைக் கொண்டு ஆச்சரியமூட்டியது. சில ஆண்டுகள் சென்னை வாசம் தவிர, பெரும்பாலும் கொங்குப் பகுதி கிராமம் ஒன்றிலேயே வாழ்ந்தவர் அவர். எனினும் சிறுகதைகளில் அவர் கவனம் செலுத்திய இவ்விரு கட்டத்திலும் வட்டார வாழ்வியல், வட்டார மொழி ஆகியவற்றைப் பெரிதும் தவிர்த்தே வந்தார். அவை இலக்கியத்தின் வீச்சைக் குறுக்கிவிடும் எனக் கருதியிருக்கலாம்.

ஆனால், நாவல் எழுதத் தொடங்கியதும் இலக்கியத்திற்கெனக் கொண்டிருந்த ‘பொது’ வரையறை அவரை அறியாமலே தகர்ந்து போய்விட்டது. உரையாடலில் பேரார்வம் கொண்டவரான அவர் எழுத்தில் பேச்சு மொழியும் வட்டாரத்தன்மையும் இயல்பாக வந்து சேர்ந்தன. நிழலின் தனிமை (2011), நட்ராஜ் மகராஜ் (2017), நீர்வழிப் படூஉம் (2020), நொய்யல் (2022) எனச் சீரான இடைவெளியில் அவர் எழுதிய நான்கு நாவல்களும் வட்டார வாழ்வியலையும் வட்டார மொழியையும் கொண்டிருந்தன. ஒரு நாவல் முன்வைக்கும் வாழ்வின் நம்பகத்தன்மைக்குக் களமும் அதற்கேற்ற மொழியும் அவசியம். அவற்றைப் பூரணமாகக் கொண்டு எழுதப்பட்டவை இந்நாவல்கள்.

ஆதிக்க சாதி வாழ்வைத் தமிழ் நாவல்கள் பெருமளவில் பதிவுசெய்துள்ளன. 1990களுக்குப் பிறகு தலித் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்திய நாவல்கள் பரவலாக வெளியாயின. ஆதிக்க சாதிகளுக்கும் தலித் சாதிகளுக்கும் நடுவில் வைக்கப்பட்டுக் கிராம வழக்கில் ‘தொழிலாளிகள்’ என்றழைக்கப்படும் இடைநிலைச் சாதிகளின் வாழ்க்கை ஓரளவுகூட நாவல்களில் பேசப்படவில்லை. அந்த இடைவெளியை நிறைவு செய்பவையாகத் தேவிபாரதியின் நாவல்கள் அமைந்தன. எல்லாச் சாதிகளுமே தாம் ஆண்ட பரம்பரை, ராஜ வம்சம் எனக் கூறிப் பிம்பக் கட்டமைப்பு செய்து கொண்டிருக்கும் சூழலில் ராஜவம்ச வாரிசாக அறியப்படும் ஒருவரின் சாதாரண வாழ்க்கையில் குறுக்கிடும் அரசியலைத் தீவிரத்தோடும் எள்ளலோடும் விவரிக்கிறது ‘நட்ராஜ் மகராஜ்.’ இந்நாவல் மட்டும் ஆதிக்க சாதிப் பாத்திரங்களை முதன்மைப்படுத்தியது.

‘நிழலின் தனிமை’, ‘நீர்வழிப் படூஉம்’, ‘நொய்யல்’ ஆகிய மூன்றும் கொங்குப் பகுதியில் ஆதிக்க சாதியினருக்குத் தொண்டூழியம் செய்யும் குடிநாவிதர் சாதி வாழ்வை அவர்கள் கோணத்திலிருந்து பேசுபவை. பாலியல் வன்புணர்வு செய்த ஆதிக்க சாதியைச் சேர்ந்தவனைப் பழி வாங்கும் எண்ணத்தை முப்பதாண்டுகள் கழித்து நிறைவேற்ற முயலும் அக்கா, தம்பி ஆகியோர் உணர்வை ‘நிழலின் தனிமை’ பேசுகிறது. ‘நீர்வழிப் படூஉம்’ சாதிப் பிரச்சினையை நேரடியாகப் பேசவில்லை. அது நாவிதர் குடும்ப வாழ்வைப் பேசுகிறது. எனினும் சொல்முறையின் காரணமாகப் பின்னணியில் இருக்கும் சாதிய சமூகத்தின் குரூர இயல்பைச் சித்திரமாக்கிக் கொள்ளத் தூண்டுகிறது. குடும்ப உறவுகளில் நேரும் பிணக்கம், இணக்கம், தியாகம், துயரம், வன்மம், குரோதம் என எல்லாவற்றையும் வெளிப்படுத்துகிறது.

காருமாமாவின் மரணம் என்னும் ஒற்றை நிகழ்வில் பல இழைகள் பிரிந்து விரிகின்றன. நல்ல நிகழ்ச்சிக்கு ஒருவர் வரவில்லை என்றாலும் விதிவிலக்கு உண்டு. மரணத்திற்கு எப்படியாவது அனைவரும் வந்து சேர்ந்துவிடுவர். குடும்ப உறவுகள் கூடும் களம் மரண வாசல். காருமாமாவின் மரணத்திற்கு உறவுகள் வந்து கூடுகின்றன. மனித மனங்களில் அகவயமாக மரணம் முதலில் நிகழ்த்தும் நெகிழ்வுகளையும் பின்னர் போகப்போகப் புறவயப் பிரச்சினைகள் பெருகி ஏற்படும் இறுக்கங்களையும் நாவல் தீவிரமாகப் பரிசீலிக்கிறது. கொங்குப் பகுதியின் நாட்டுப்புறக் கலைகளிலும் இலக்கியத்திலும் பேரார்வம் கொண்டவர் தேவிபாரதி. அவரது பல்லாண்டு காலச் சேகரத்தை இந்நாவலில் உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டுள்ளார். அண்ணன்மார் கதைப்பாடல், தங்காயி ஒப்பாரி ஆகியவை நாவலுக்குள் பாலுள் நெய் போலக் கலந்திருக்கின்றன.

அவர் சிறுகதைகளில் ஆண் உலகமும் பார்வைக் கோணமும் முன்னிலைப்படும். மாறாக ஆண் நோக்கில் கதை சொல்லப்பட்டாலும் நாவல்களில் பெண்களின் உலகம் பலவிதமாகக் காட்சியாகிறது. இந்நாவலிலும் அப்படித்தான். தாயம் ஒருகாலத்தில் பெண்கள் விளையாட்டாக மட்டுமே இருந்திருக்கக் கூடும். அதில் இருக்கும் சூட்சுமங்கள் காரணமாகச் சூதாட்டமாக்கி ஆண்கள் சுவீகரித்திருக்கலாம். அவ்வகையில் தாயம் பெண்களுக்குப் பொழுதுபோக்காகவும் ஆண்களுக்குச் சூதாட்டமாகவும் பல காலமாக விளங்கி வருகிறது. இந்நாவலின் முடிவில் பெண்கள் பொழுதுபோக்குக்காகத் தாயம் ஆடுகிறார்கள். ஆண்களின் சூதாட்ட முறை பெண்களின் தாயத்திற்கு நகர்ந்து பதற்றத்தில் நிறுத்துகிறது. மரணத்தில் தொடங்கி தாயத்தில் முடிகிறது. வாழ்வின் குறியீடு தாயம் என்றும் சொல்லலாம்.

பெரிதும் மேட்டுக்காடுகளைக் கொண்டு முல்லை நிலமாக விளங்கும் கொங்குப் பகுதியில் ஓடும் சிற்றாறு நொய்யல். அதன் கரையோர மக்களின் சில தலைமுறை வாழ்வைச் சொல்லும் நாவல் ‘நொய்யல்.’ அவ்வாற்றில் வெள்ளமும் வறட்சியும் மாறிமாறி அமைவன. அதற்கேற்ப மக்கள் வாழ்வு கொள்ளும் கோலங்களை நாவல் காட்டுகிறது. பல சாதியினர் வாழும் தமிழ்நாட்டுக் கிராமம் ஒன்றின் வகைமாதிரிச் சித்திரம் இதில் இடம்பெற்றிருப்பதும் முக்கியமானது.

தமிழ் வட்டார நாவல் என்னும் வகைமையை ‘நாகம்மாள்’ மூலம் 1942இல் தொடங்கி வைத்தவர் ஆர்.ஷண்முகசுந்தரம். கொங்கு வட்டார வாழ்வியலை மையப்படுத்தி இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதினார். சிறுகதை, கட்டுரை, நாடகம் எனப் பலவற்றை எழுதினார். நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களை மொழிபெயர்த்தார். 1956ஆம் ஆண்டு முதல் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. 1977ஆம் ஆண்டு வரை வாழ்ந்த முன்னோடி எழுத்தாளரான ஆர்.ஷண்முகசுந்தரத்திற்கு அவ்விருது கிடைக்கவில்லை. அதன்பின் கு.சின்னப்பபாரதி, க.ரத்னம், சி.ஆர்.ரவீந்திரன், சூர்யகாந்தன், கௌதம சித்தார்த்தன், க.சீ.சிவக்குமார், என்.ஸ்ரீராம், எம்.கோபாலகிருஷ்ணன் என எத்தனையோ எழுத்தாளர்கள்.

ஒருவருக்கும் விருது கிடைக்கவில்லை. இப்பகுதியைச் சேர்ந்த வானம்பாடிக் கவிஞர்கள் சிலர் மட்டுமே விருது பெற்றுள்ளனர். இப்பகுதிப் புனைவிலக்கியத்திற்கென தம் ‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக முதன்முதலில் சாகித்திய அகாடமி விருது பெற்றிருக்கிறார் தேவிபாரதி. வடதமிழ்நாட்டிலும் தென்தமிழ்நாட்டிலும் மழை கொட்டி வெள்ளம் பெருக்கெடுத்தோடும் காலத்தில் கொங்குப் பகுதி மாவட்டங்களில் ஓரிரு சொட்டுத் தூறல் விழும். தேவிபாரதிக்குக் கிடைத்திருக்கும் சாகித்திய அகாடமி விருது அத்தூறலை நினைவுபடுத்துகிறது.

சாகித்திய அகாதமி விருது : தேவிபாரதி

- தொடர்புக்கு: murugutcd@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in