Published : 16 Dec 2023 06:16 AM
Last Updated : 16 Dec 2023 06:16 AM
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் இந்த ஆண்டுக்கான விருதுகளை அறிவித்துள்ளது. கலை இலக்கியத்துக்கு வாழ்நாள் பங்களிப்பு செய்த ஆளுமைக்கான கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது, வரலாற்றாய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது ரூ.1,00,000 ரொக்கத் தொகையும் பரிசுக் கேடயமும் உள்ளடக்கியது. தோழர். கே.முத்தையா நினைவு தொன்மைசார் நூல் விருது ‘காவிரி நீரோவியம்’ புத்தகத்துக்காக சூர்யா சேவியருக்கும், கே.பி.பாலசந்தர் நினைவு நாவல் விருது ‘சலாம் அலைக்’ நாவலுக்காக ஷோபா சக்திக்கும், சு.சமுத்திரம் நினைவு விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு விருது ‘பங்குடி’ நாவலுக்காக க.மூர்த்திக்கும், இரா.நாகசுந்தரம் நினைவு அல்புனைவு விருது ‘வித்தி வான்நோக்கும் வியன்புலம்’ கட்டுரைத் தொகுப்புக்காக பெ.ரவீந்திரனுக்கும், வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு கவிதை விருது ‘குருதி வழியும் பாடல்’ தொகுப்புக்காக அ.சி.விஜிதரனுக்கும் அகிலா சேதுராமன் நினைவு சிறுகதை விருது ‘நசீபு’ தொகுப்புக்காக அராபத்துக்கும் வ.சுப.மாணிக்கனார் நினைவு மொழிபெயர்ப்பு விருது ‘ஆன்மீக அரசியல்’ (மூலம்: திரேந்திர கே.ஜா) மொழிபெயர்ப்புக்காக இ.பா.சிந்தனுக்கும் ராஜபாளையம் மணிமேகலை மன்றம் கொ.மா.கோதண்டம் நினைவு குழந்தைகள் இலக்கிய நூல் விருது ‘பெரியார் தாத்தா’ நூலுக்காக மோ.அருணுக்கும், கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல் விருது ‘செவ்வியல் இலக்கண ஆய்வு: இடைச்சொற்கள் பதினெண் கீழ்க்கணக்கு’ நூலுக்காக ஜா.கிரிஜாவுக்கும், மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு பெண் படைப்பாளுமை விருது புதிய மாதவிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.இராமச்சந்திரன் நினைவுக் குறும்பட விருது ‘அரிதாரம்’ படத்துக்காக பி.சுரேஷ்குமாருக்கும் என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு ஆவணப்பட விருது ‘நொச்சிமுனை தர்ஹா’ படத்துக்காக ஆத்மா ஜாபிருக்கும், மு.சி.கருப்பையா பாரதி - ஆனந்த சரஸ்வதி நினைவு நாட்டுப்புறக் கலைச்சுடர் விருது கலைமாமணி நாகுக்கும், மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு இசைச்சுடர் விருது மழையூர் சதாசிவத்துக்கும், த.பரசுராமன் நினைவு நாடகச்சுடர் விருது பேரா.ராஜுவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிஷா நடராஜன் நூல் வெளியீட்டு விழா: எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் எழுதிய ‘பண்ணைப் புத்தகம்’, ‘கழுதை வண்டி’, ‘நூலகலாஜி’ ஆகிய தமிழ் நூல்கள் உள்பட இரு ஆங்கில நூல்களும் கடலூரில் வெளியிடப்பட உள்ளன. அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள சுபலட்சுமி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறவுள்ள வெளியீட்டு நிகழ்வில், தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT