

ஓர் இளம் மருத்துவர் தான் தினமும் சந்திக்கும் நோயாளிகள் குறித்தும் அவர்களின் வாழ்க்கையைக் குறித்தும் எழுதுவதோடு, அந்தப் பிரச்சினைகள் குறித்து ஒரு மருத்துவராக, ஒரு மனிதநேயராக, சமூக அக்கறைகொண்டவராகத் தன் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். பிச்சை எடுப்பவர்கள், பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் பெண்களின் மன அழுத்தம், ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள், பாலியல் பலாத்காரத்துக்குள்ளான குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் எனப் பல பிரச்சினைகளுக்கும் போதினி சமரதுங்க தரும் ஆலோசனைகள் சரியானவை. இறுதி யுத்தத்துக்குப் பிறகு வடக்குப் பகுதிக்கு மனித நேயத்துடன் சென்றிருக்கிறார். அங்கு தமிழர்களிடம் அன்பையும் மதிப்பையும் பெற்றிருக்கிறார்.
தமிழைக் கற்றுக்கொண்டிருக்கிறார். இளம் போராளிகள், முன்னாள் போராளிகள், கணவனை இழந்த பெண்கள் ஆகியோரைச் சந்தித்ததில், யுத்தம் எவ்வளவு கொடூரமானது என்பதையும் அமைதி எவ்வளவு அவசியமானது என்பதையும் சொல்லியிருக்கிறார். ஆனால், ‘சிங்களர்களை எதிரிகளாகச் சித்தரித்தே தமிழர்கள் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று ஒரு இடத்தில் கூறுகிறார். அதே போலவே அவரும் போராளிகளை எதிரிகளாக, தீவிரவாதிகளாகச் சித்தரித்தே வளர்க்கப்பட்டவர் என்றே வாசிப்பில் நமக்குத் தெரிகிறார். - எஸ். சுஜாதா
மருத்துவக் குறிப்புகள் அல்லாதவை
மருத்துவர் போதினி சமரதுங்க (தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப்)
வம்சி பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9445870995.
அக்கம் பக்கத்துக் கதைகள்: நூலாசிரியரின் நான்காவது சிறுகதை நூல் இது. இதில் 16 சிறுகதைகள் உள்ளன. எல்லாக் கதைகளுமே ஆறேழு பக்கங்களில் முடிந்துபோகிற கதைகளாக இருந்தாலும் வாசிப்புக்கு இதமாக இருக்கின்றன. ஒவ்வொரு கதையிலும் எழுத்தாளர் தான் கண்டுணர்ந்த அல்லது கேட்டறிந்த சம்பவங்களையும் சக மனிதர்களது உரையாடல்களையும் எவ்வித அலங்காரங்களும் இன்றி அப்படியே எழுதியுள்ளார். அதனாலேயே பல கதைகளைப் படிக்கையில், நம் அக்கம் பக்கத்து வீட்டில் நிகழும் ஒரு சம்பவம் ஒன்றினை அருகிருந்து பார்க்கும் நெருக்கம் உண்டாகிவிடுகிறது. பெண்களின் மனவுலகமாக விரியும் ‘கரோனா குமாரி’, ‘கோழிமூட்டி கோமளா’ ஆகிய கதைகளும், ஒரு பெண் எதிர்கொள்ளும் வித்தியாசமான பிரச்சினையைப் பேசும் ‘ரஞ்சனாவின் ரவிக்கை’ குறுங்கதையும் கதாசிரியரின் புதுமையான பார்வைக்கான சான்றுகள். ‘மனதில் ஆயிரமாயிரம் நதிகள்’ கதையில் வரும் நரசிம்மன், ‘தூபம்’ கதையில் வரும் முரளி என ஆண் கதாபாத்திரங்களும் வாஞ்சையுடன் வார்க்கப்பட்டுள்ளன. ‘நிரலியின் இணையவழி சுயம்வரம்’, ‘வரையறையைக் கடக்கும் முரண்கள்’ கதைகளும் இத்தொகுப்பில் கவனம் ஈர்க்கும் கதைகளாக உள்ளன. - மு.முருகேஷ்
சங்கு தீர்த்தம்
பவித்ரா நந்தகுமார்
படி வெளியீடு
விலை: ரூ.160
தொடர்புக்கு: 99404 46650
நட்பைப் பறைசாற்றும் எழுத்துகள்: தமிழ் இலக்கியத்தில் நண்பர்கள் பற்றிய பதிவுகள் சங்க காலம் தொட்டே இருக்கின்றன. சங்க காலப் புலவர் பிசிராந்தையாருக்கும் கோப்பெருஞ்சோழனுக்குமான நட்பு அதற்கு இலக்கணமாகச் சொல்லப்படுகிறது. இதுபோல் நவீன இலக்கியத்தின் நட்புப் பதிவுகளைத் தனி நூலாகத் தொகுத்துள்ளார் அ.ஜெகநாதன். பாரதியாருக்கும் வ.உ.சி.க்குமான நட்பை விளக்கும் வ.உ.சி. எழுதிய ‘மாமா பாரதியார்’ என்கிற கட்டுரை இந்தத் தொகுப்பின் முத்துகளில் ஒன்று. மார்க்ஸுக்கு ஏங்கெல்ஸ் ஆற்றிய அஞ்சலி உரை, ஒரு நண்பனைக் கொண்டாடும் விதத்துக்கான சான்றாக வெளிப்பட்டுள்ளது. ‘சிறிதளவு கள் கிடைத்தாலும் எனக்குக் குடிக்கத் தருவான். அம்பும் வேலும் பாயும் இடங்களில் என்னை ஒதுங்கச் செய்து முன்னே செல்வான்’ என்கிற பொருள்படும் அதியமான் நெடுமான் அஞ்சிக்காக ஒளவையார் பாடிய அழகான பாட்டு நட்பின் ஆழத்தைப் பறைசாற்றுகிறது. நட்பைப் பேசும் நவீனக் கவிதைகளும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் என நட்பின் தடத்தைத் தேடித் தொகுத்துள்ளார் ஜெகன். ஆனால், இவற்றையும்விட விரிவுகொண்டது அந்தத் தேடல். - விபின்
சேக்காளிகளின் வரைகோடுகள்
அ.ஜெகநாதன் (தொகுப்பு)
மலர் புக்ஸ்
விலை: ரூ.190
தொடர்புக்கு: 9382853646
எளிமையான சரித்திர நாவல்: எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழில் வெளிவந்து மிகப் பெரிய கவனம் பெற்ற நாவல். தமிழில் வெளிவந்த சரித்திர நாவல்களில் ‘பொன்னியின் செல்வன்’தான் அதிகம் வாசிக்கப்பட்ட நாவலாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் தலைமுறைகளைக் கடந்த நாவலும் இதுவாகத்தான் இருக்கும். இந்த நாவல் மணி ரத்னம் இயக்கத்தில் படமாக வந்த பிறகு, சோழ வரலாற்றின் மீதும் இந்த நாவலின் மீது தனிக் கவனம் கிடைத்தது. அந்தரீதியில் இந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இப்போது வெளிவந்துகொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இந்த மொழிபெயர்ப்பு எளிமையும் தெளிவும் கொண்டதாக இருக்கிறது. - குமரன்
பொன்னியின் செல்வன் - 2
கல்கி (ஆங்கிலத்தில்: நந்தினி கிருஷ்ணன்)
வெஸ்ட் லேண்ட் வெளியீடு
விலை: ரூ.399
படங்கள் சொல்லும் பாடம்: இன்று உலக சினிமாவாகவே இருந்தாலும்கூட அதற்கான வணிகமும் அதன் தரத்தை முடிவுசெய்வதாக இருக்கிறது. இந்த இடத்தில் பல படைப்பாளிகள் சமரசம் என்கிற சிறைக்குள் சிக்கிவிடாமல், சுயாதீனமாகப் படங்களை எடுத்து வாழ்வைக் கற்றுக்கொடுக்கும் சிறந்த படைப்புகளைக் கொடுத்துவிடுகிறார்கள். இன்னும் சிலர், வணிகக் கட்டமைப்புக்குள் இருந்துகொண்டே சிறந்த படங்களைத் தந்துவிடுகிறார்கள். எப்படியிருப்பினும் ஒரு திரைப்படம் திரைப் பாடம் ஆகும்போதுதான், அதன் மேன்மை காலம் கடந்தும் வாழ்க்கைக்கு உதவுகிறது. அப்படிப்பட்ட சிறந்த படங்களைத்தான் நூலாசிரியர் நமக்கு முற்றிலும் புதிய பார்வையுடன் அறிமுகப்படுத்துகிறார்.
இந்நூலின் ஆசிரியர் டாக்டர் ஆர்.கார்த்திகேயனை மனித வள மேம்பாட்டுப் பயிற்சித் துறையில் அறியாதவர்கள் குறைவு. பன்முக ஆளுமையான இவர், சிறந்த எழுத்தாளரும்கூட. ‘இந்து தமிழ் திசை’ இணைப்பிதழ்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற பல தொடர்களை எழுதியவர். தனது பயிற்சிப் பட்டறைகளில் சிறந்த திரைப் படைப்புகளை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துபவர். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் வெள்ளிக் கிழமை சினிமா இணைப்பிதழான ‘இந்து டாக்கீஸி’ல் இவர் எழுதிய ‘திரைப் பாடம்’ என்கிற தொடர், பெரும் வரவேற்பை பெற்ற ஒன்று. இத்தொடரில், ஆங்கிலம், இத்தாலி, ஜப்பானியம் எனப் பல அந்நிய மொழிகளிலும் தமிழ், மலையாளம், இந்தி என இந்திய மொழிகளிலும் வெளியான 31 சிறந்த திரைப்படங்களைக் குறித்த தனது அட்டகாசமான, ஆழமான பார்வையைச் சுவைபடப் பரிமாறியிருக்கிறார்.
திரைப் பாடம்
டாக்டர் ஆர்.கார்த்திகேயன்
இந்து தமிழ் திசைப் பதிப்பகம்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 74012 96562 / 74013 29402
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
****