

நம் தமிழ் மரபு, கதையாய கதைகளைக் கொண்டது. அந்தக் கதைகளைச் சொல்வதற்கு ஊர்களில் ஆச்சிகள் இருந்தார்கள். தோசைகளைப் பிய்த்துப் போட்டு வழி அறிவித்த ராசகுமாரிகளின் கதை, ஏழு கடல்... ஏழு மலை... தாண்டிய மந்திரக் கிளியின் கதை, கூடுவிட்டுக் கூடு பாயும் அரக்கனின் கதை என அந்தக் கதைகள் நமது கற்பனைக்குச் சிறகுகளைத் தந்தன. சிறு பிராயத்தின் மன வளர்ச்சிக்கும் கற்பனை ஆற்றலுக்கும் இந்தக் கதைகள் அவசியமானவை. அம்மாதிரியான சிறார் கதைகளின் தொகுப்புதான் ‘திபுலான் வாராதி’. நூலாசிரியர் வேலு சரவணன்.
நாவலாங்காடு என்னும் ஒரு காட்டூரில் ஒரு திருவிழா; முயல்களின் பூஞ்சிட்டுத் திருவிழா. இந்த நூல், இப்படிக் கோலாகலமாகத் தொடங்குகிறது. குட்டி முயல்கள் ஆறு மணல் குன்றுகளையும் திபுலான் யானையையும் தாண்ட வேண்டும். அதுதான் சடங்கு. தாண்டும் முயல்கள்தாம் பெரிய முயல்களுடன் வேட்டைக்குப் போக முடியும். இந்தப் பூஞ்சிட்டுத் திருவிழாவுக்காகக் காடே தயாராகிறது. புறா, விருந்து சமைக்கிறது. வெட்டுக்கிளியும் குரங்கும் முயல்குட்டிகளைச் சீவிச் சிங்காரிக்கின்றன. முயல்களின் தாய்மாமனான கலைமான், திபுலான் யானையை அழைக்கப்போன வாராதி குள்ளநரியை எதிர்பார்த்துப் பரபரப்போடு நிற்கிறது. பெரியவர்களின் ஒரு சடங்கை சிறியவர்களுக்காக மாதிரி செய்திருக்கிறார் வேலு சரவணன். அதே நேரம், இந்தச் சடங்கைச் சிறியவர்களின் உயரத்துக்கு இழுத்துள்ளார். இது இந்தக் கதைகளின் விசேஷமான அம்சம்.
வேலு சரவணன் இதில் உருவாக்கிய காட்டுலகம், அத்துணை பசுமையாக மனதில் விரிகிறது. நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள வைகவியின் ஓவியங்கள் கற்பனைக்கு விளக்கேற்றுகின்றன. மரமும் கொடியும் மரங்களும் விலங்குகளும் பறவைகளுமான அந்தக் காடு வாசிப்புக்கு ஆசுவாசம் அளிக்கிறது. நம் காடுகளுக்கு வேற்றுமையான ஒட்டகத்தை நாவலாங்காட்டுக் கரடி வழியாக வேலு சரவணன் இதில் விருந்தினராய்ச் சுவீகரித்துள்ளார். இந்த ஒட்டகத்தின் வழி ஒரு குதிரைக் குட்டி துள்ளிக் குதித்து வருகிறது. மாவிதாபு என்கிற அந்தக் குதிரைக் குட்டிதான் தமிழ் நிலத்தின் முதல் குதிரை என அந்தக் குட்டியைச் சுவாரசியமாக வரலாற்றுடன் முட்டவைக்கிறார் அவர். இது வினோதமான விளையாட்டு.
வேலு சரவணன் இந்தக் கதைகளில் கைக்கொண்டுள்ள பெயர்கள் பைதல்களின் இயல்புகளைப் போல் வசீகரமானதாக இருக்கின்றன. ஒரு ஊதாப்பூ காணாமல் போய்விட்டதாக ஒரு கதையில் விவரிக்கப்படுகிறது. அது தன் சகோதர சகோதரிகளுடன் மேயப்போகும்போது தொலைந்துவிட்டது. மண்ணில் வேர் விட்டு நிற்கும் ஒரு செடியின் மலர் நடந்துபோய் தொலைந்துவிட்டதா? வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், அது ஒரு கழுதைக் குட்டியின் பெயர்தான். இந்தப் பெயர் தரும் மகிழ்ச்சி விளங்கக் குழந்தை மனது வேண்டும். இந்தக் கதை, அழகான காட்சிக் கவிதையாக வெளிப்பட்டுள்ளது.
இந்தச் சேட்டைக்கார ஊதாப்பூ காணாமல் போய்க்கொண்டே இருக்கிறது; மான் குட்டிகளுடன் விளையாடிப் பாதாளத்துக்குள் விழுந்துவிடுகிறது. அது விழும் அந்த நிகழ்வை ஒரு சினிமா காட்சியைப் போல் உருவாக்கியுள்ளார் வேலு சரவணன். அது விழுகிறது, முடிக் கற்றைகள் காற்றில் பறக்கின்றன; கால்கள் காற்றுவெளியில் நீந்துகின்றன - இப்படிப் போகிறது காட்சி. பாதாள மலர்கள் ஒரு பூக்கல்லைப் பரிசாகத் தருகின்றன. அதனால் ஆறும் கழுதைக் குட்டிகளும் ஊதாவாகின்றன. இதெல்லாம் நிகழும்போதே இதை நிஜத்துக்கும் கனவுக்கும் இடைப்பட்ட ஒரு கணத்துக்கு உயர்த்துகிறது கதை.
திபுலான் என்கிற யானையும் வாராதி என்கிற குள்ளநரியும் இந்த நூலின் பிரதான கதாபாத்திரங்களாக வருகின்றனர். இவர்கள் இருவரும் இணை பிரியா நண்பர்களும்கூட. குள்ளநரிக் கதாபாத்திரத்தின் வழி சில நெறிகளை இந்த நூல் முன்வைக்கிறது. நட்பு குறித்தான ஒழுக்கங்களையும் சொல்கிறது. இந்தக் கதைகளில் சாதாரண நரிகள், விரோதிகளாகச் சித்தரிக்கப்பட்டிருந்தாலும்கூட, சிறார் கதைகளில் வஞ்சகத்துக்குப் பெயர்போன குள்ளநரிக்கு ஒரு நல்ல இடத்தை வேலு சரவணன் இந்த நூலில் கொடுத்திருக்கிறார். பாட்டுக்கு ஆசைப்படும் பாம்பு, ஊருணியைக் காவல் காக்கும் காந்தீபா புலி, கூட்டாஞ்சோறு வைக்கும் குரங்கு என விசித்திரமும் சுவாரசியமுமான கதாபாத்திரங்களை இந்த நூல் உருவாக்கியுள்ளது. கற்பனைகளைத் தர்க்கங்களால் ஆராய வேண்டியதில்லை. கற்பனைகள்தான் அறிவியல் புரட்சிக்கு வித்திட்டன. இந்த அம்சத்துக்கு இந்த நூல் ஒரு சான்று
வேப்பரசு என்னும் ஒரு பெரு மரக் கதாபாத்திரத்தின் வீழ்ச்சி உணர்வுபூர்வமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெரு மரம் வீழ்வதன் வழி சிறார்களுக்கு இயற்கையின் அம்சம் சொல்லப்பட்டுள்ளது. காடழிந்து நாடான காலகட்டம் வரை கதை நீள்கிறது. நாவலாங்காட்டுப் பிரஜைகள் நாட்டையும் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கியம் வருகிறது. இந்தக் கதையில் ஒரு சிறுவனின் முதுகில் பொதியைப் போல் சவாரிசெய்யும் வாராதி குள்ளநரி, சினிமாவின் ‘ஃபோர்த் வால் பிரேக்கிங்’ போல் வேலு சரவணனின் கதையையும் தாண்டி வாசகர்களை உற்றுநோக்குகிறது. மிருகக்காட்சிச் சாலையிலிருந்து தப்பிக் காட்டுக்குத் திரும்பும் அதன் பார்வை, வருங்காலத் தலைமுறைக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறது. அதுதான் வருங்காலத் தலைமுறையினர் கடைப்பிடிக்க வேண்டியதுமாகும்.
திபுலான் வாராதி
வேலு சரவணன்
ஆல் பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 04652-278525
- தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in