Published : 13 Jan 2018 10:17 AM
Last Updated : 13 Jan 2018 10:17 AM

தொடுகறி: ஆவிகளிடம் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்!

ஆவிகளிடம் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்!

மேலை நாடுகளில் ஆவிகள் தொடர்பான ஆராய்ச்சிகளும் ஆவியுலக நம்பிக்கையாளர்களும் அதைப் பற்றிய புனைவுகளுமாக ஒரு கூட்டமே ஈடுபட்டுவருகிறது. நம்புகிறோமோ இல்லையோ அவற்றைப் பற்றிய கதைகள் சுவாரசியமானவை. ஆவிகளுடன் பேச ‘ஒய்ஜா பலகை’(!) போன்ற கருவிகளையும் மேற்குலகம் கண்டறிந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆவியுலக ஆராய்ச்சியாளர், ஆவிகளின் ஊடகமாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுசொல்பவர் என்று நம்பப்படுபவர், ‘பேசும் ஆவிகள்’, ‘ஆவிகள் உலகம்’ பத்திரிகைகளின் ஆசிரியர், பதிப்பாளர் என்ற பல முகங்கள் விக்கிரவாண்டி ரவிச்சந்திரனுக்கு. திருவல்லிக்கேணியில் இவரது அலுவலகம் இயங்கிவருகிறது. தாத்தாவின் திடீர் மரணம், அவருக்குப் புதிரை ஏற்படுத்த மரணத்துக்குப் பிறகான வாழ்க்கை மீது தேடல் ஏற்பட்டதாகக் குறிப்பிடுபவர். மேகதூதன் பதிப்பகத்தின் வெளியீட்டாளராகத் தொடர்ந்து புத்தகங்களையும் வெளியிட்டுவருகிறார். ஜெர்மனியைச் சேர்ந்த கான்சன்டைன் ராதிவ் ஏதேதோ கருவிகள் கொண்டு பல்வேறு ஆவிகளுடன் பேசி, அவற்றின் குரல்களைத் தான் பதிவுசெய்திருப்பதாகக் கூறியிருக்கிறார். அவருடன் ஏற்பட்ட கடிதத் தொடர்பே தனக்குத் தூண்டுதலாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன். ஆவியுலகைப் பற்றி ஆராய்ச்சி செய்ய நம்மிடையே விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் இருப்பதுபோல மனிதர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆவிகளிடையேயும் ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்களா என்று ஆவிகளிடம் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கள் ரவிச்சந்திரன்!

குறுங்காமிக்ஸ் சித்திரக் கதைகள், நிக்கொலாய் ரட்லோவ்

கற்பனைக்குச் சிறகு தரும் ஓவியங்கள், எளிமையான மொழியில் குழந்தைகளின் மனநிலையைப் பிரதிபலிக்கும் எழுத்தைக் கொண்ட ரஷ்ய சிறார் புத்தகங்கள் 70-80-களின் பொக்கிஷம். இப்படி மாஸ்கோவிலிருந்து தமிழகத்துக்குக் கப்பலில் வந்த ஆயிரக்கணக்கான புத்தகங்களில் ஒரு ஓவியப் புத்தகத்தை அப்போது சின்னக் குழந்தைகளாக இருந்தவர்களும்கூடப் படித்திருப்பார்கள்.

அது ‘சித்திரக் கதைகள்’ என்ற பெயரில், ஓரிரு வரிக் கதைகள், ஒரு பக்க ஓவியங்களைக் கொண்ட குறுங்காமிக்ஸ் பாணியிலான புத்தகம். இதை எழுதி வரைந்தவர் நிக்கொலாய் ரட்லோவ். விலங்கு கதாபாத்திரங்களாகக் கொண்ட இந்த நகைச்சுவைக் கதைகளில் படங்களே பாதி கதையைச் சொல்லிவிடுகின்றன.

 

 

 

நிகொலாய் ராட்லோவின் புகழ்பெற்ற இந்தப் புத்தகம் கவிஞர் டானில் கார்ம்ஸ் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட ஒன்று. 1937-ல் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேசக் குழந்தைகள் புத்தகப் போட்டியில் இரண்டாவது விருது வென்ற இந்தப் புத்தகத்துக்கு இப்போது 80 வயது.

குழந்தைகளே பார்த்தும் வாசித்தும் அறிந்துகொள்ளக் கூடிய எளிமையான இந்தக் கதைகளை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மறுபதிப்பாகக் கொண்டுவந்துள்ளது.

மனித கால்குலேட்டர்!

‘அண்ணாச்சி’ என்று நண்பர்களால் அழைக்கப்படும் ‘தமிழினி’ பதிப்பகத்தின் வசந்தகுமாருக்குப் பல முகங்கள் உண்டு. திறமையான எழுத்தாளர்களைத் தேடித் தேடிப் புத்தகங்கள் பதிப்பிப்பவர், நல்ல எடிட்டர், பயண விரும்பி, புகைப்படக் கலைஞர் என்று பட்டியல் நீளும். அது மட்டுமா! புத்தகக் காட்சிகளில் இன்னமும் கால்குலேட்டரே இல்லாமல் கையால் ரசீது எழுதித்தருவார். 50 புத்தகங்களை நீட்டினாலும் கண வேகத்தில் புத்தகங்களின் விலையைக் கூட்டி, தள்ளுபடியைக் கணக்கிட்டு, மொத்த தொகையை எழுதிவிடக்கூடியவர் வசந்தகுமார்!

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x