திண்ணை: பெரியார் நூல் கன்னடத்தில்...
ஆய்வறிஞர் பழ.அதியமானின் ‘வைக்கம் போராட்டம்’ ஆய்வு நூல் மலையாளத்தைத் தொடர்ந்து, கன்னடத்தில் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்நூலின் கன்னட மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டார். முதலமைச்சர் வெளியிட்ட இந்த நூலை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார். பெரியார் வைக்கம் போராட்டத்தில் செய்த பங்கு என்ன என்பதைச் சான்றுகளுடன் விவரிக்கும் நூல் இது. இந்தப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்பட்டது. பெரியார் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக நான்கு மாதங்கள் கடுங்காவல் தண்டனைக்கு உள்ளானார். இதை ஆய்வுபூர்வமாகப் பதிவுசெய்யும் நூல் இது.
எஸ்.ராமகிருஷ்ணன் நூல்கள் சேதம்: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தனது நூல்களை ‘தேசாந்திரி’ பதிப்பகம் வழி வெளியிட்டுவருகிறார். சென்னை வெள்ளம் தேசாந்திரி புத்தகக் கிடங்கில் புகுந்து புத்தகங்கள் நாசமாகிவிட்டதாக, சமூக வலைதளத்தில் அவர் தெரிவித்துள்ளார். ‘யாமம்’, ‘உப பாண்டவம்’, ‘நெடுங்குருதி’, ‘உறுபசி’ உள்ளிட்ட தமிழின் சிறந்த நாவல்களை எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன். ‘காட்டின் உருவம்’, ‘தாவரங்களின் உரையாடல்’ உள்ளிட்ட சிறந்த சிறுகதைத் தொகுப்புகளை எழுதியவர் அவர். அவரது இந்த நூல் பிரதிகள் பல மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துவிட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் இருக்கலாம் என சமூக வலைத்தளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு தமிழ்ப் புத்தகத் திருவிழா: கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் பெங்களூருவில் 2ஆவது ஆண்டாக தமிழ்ப் புத்தகத் திருவிழா நடைபெற்றுவருகிறது. சிவாஜி நகரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் மையத்தில் நடைபெற்றுவரும் இந்தத் திருவிழா வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 10ஆம் தேதி (ஞாயிறு) வரை நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் பண்டிதர் புக்ஸ் அரங்கில் ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து குழும’ நூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ‘பாபாசாகேப் அம்பேத்கர்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’, ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ உள்ளிட்ட அனைத்து நூல்களும் 10 சதவீத கழிவு விலையில் கிடைக்கின்றன.
தூத்துக்குடியில் புத்தகக் காட்சி: மதுரை மீனாட்சி புக் ஷாப், முன்னேற்றப் பதிப்பகம் நடத்தும் புத்தகக் காட்சி தூத்துக்குடியில் 10.12.23இலிருந்து 19.12.23 வரை நடைபெறவுள்ளது. தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையிலுள்ள ராமையா மகாலில் நடைபெறவுள்ள இந்தப் புத்தகக் காட்சியில், புத்தகங்கள் 10 சதவீதத் தள்ளுபடி விலையில் கிடைக்கும். இங்கு இந்து தமிழ் திசை வெளியிட்ட புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.
சலபதிக்கு பாரதி விருது வரலாற்றாசிரியர்: ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான மக்கள் சிந்தனைப் பேரவையின் ‘பாரதி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பதிப்புத் துறை சார் ஆய்வுகளில் இந்திய அளவில் கவனம் பெற்றவர் சலபதி. உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ், சிகாகோ உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர். பொதுவாக, ஆய்வு எழுத்துகளுக்கென இருக்கும் மொழியைத் தன் தனித்துவத்தால் கடந்தவர் சலபதி. இவரது ஆய்வெழுத்தின் மொழி, புனைவு எழுத்துக்குரிய ரசனையைக் கொண்டது.
கடந்துவிட்ட காலத்தை பதிப்பு ஆவணங்கள் கொண்டு நம் முன்னால் மீண்டும் ஒருமுறை உயிர்ப்புடன் நிகழ்த்தும் மாயம் சலபதியின் எழுத்துகளுக்கு உண்டு. அவர் கைக்கொண்டுள்ள தனித் தமிழ் நடை, தமிழ்மொழி மீது தீராக் காதலை உண்டாக்கும் தன்மைகொண்டது. ‘எழுக, நீ புலவன்’, ‘பாரதி; கவிஞனும் காப்புரிமையும் – பாரதி படைப்புகள் நாட்டுடைமையான வரலாறு’, ‘பாரதியின் சுயசரிதைகள்’ (தொகுப்பு), ‘பாரதி கருவூலம்’ (தொகுப்பு), ‘பாரதி விஜயா கட்டுரைகள்’ (தொகுப்பு) உள்ளிட்ட நூல்கள் பாரதியியலுக்கு சலபதி செய்த பங்களிப்புகள்.
