

மனதை ஆற்றுப்படுத்தும் வழிமுறைகளை 10 சிறிய கட்டுரைகள் மூலம் மிகப் பக்குவமாக எழுதியுள்ளார் ஆயிஷா
இரா.நடராசன். மனம் என்பது யாராலும் புரிந்துகொள்ளவே முடியாத ஒன்றல்ல; சரியான சிந்தனையின் மூலமாகவும் முறையான பயிற்சியின் வழியாகவும் மனதை நம்மால் அடக்கியாள முடியும். கற்பனை வளமும் மனதின் விரிவாக்கமுமே மனிதனை விலங்கிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது. அந்த மனதைக் கைக்கொள்ளவே பலரும் பல வகைகளில் முயன்று வருகின்றனர். மனித மனதை வெல்லும் ஆற்றல் மனிதனிடத்திலேதான் உள்ளது.
‘மனதை அலைபாய விடுங்கள். தியானம், ஒருநிலைப்படுத்துவது, சாந்தம் இதெல்லாம் அறிவியலுக்கு ஒவ்வாதது. மனம் ஒரு ஆய்வுக்கூடம். சிந்தனையே கருவி. கற்பனையே வேதிவினை. ஐன்ஸ்டீன் போல ஆவதற்கு மனதை ரிசர்ச் பிளீஸ் என்று தூண்ட வேண்டும். உலகின் பிரம்மாண்டப் புதிர்களை விடுவித்த யாவரும் மன ஆய்வுக்கூட நிபுணர்கள்தான்’ என்று தொடங்கும் இந்த நூலின் நெகிழ்வான மொழிநடையே நம் மனதுக்குத் தேவையான மருந்தாகிறது.- மு.முருகேஷ்
மனசே ரிசர்ச் ப்ளீஸ்!
ஆயிஷா இரா.நடராசன்
புக்ஸ் ஃபார் சில்ரன்
விலை: ரூ.80
தொடர்புக்கு: 044-24332924
ராஜராஜனும் அசோகரும்: இடைக்காலச் சோழர்களில் சிறப்பு மிக்க மன்னன் ராஜராஜசோழன். தமிழ் நிலம் தாண்டியும் இம்மன்னனின் ராஜ்ஜியம் விரிந்து கிடந்தது. ராஜராஜனின் ஆட்சி எந்த வகையில் சிறந்தது என்பதை இந்த நூல் சான்றுகளுடன் விவரிக்கிறது. ராஜராஜனின் வரலாறு என இந்த நூலைக் குறுக்கிவிட முடியாத அளவுக்கு, அந்தக் காலகட்டத்தின் வரலாற்றைப் பெரும் பரப்பில் வைத்துச் சொல்கிறது இந்த நூல். மெளரியப் பேரரசான அசோகருடன் ராஜராஜ சோழனை ஒப்பிட்டு எழுதியுள்ளார். ராஜராஜன் காலத்து நகரங்கள், சமூக வாழ்க்கை, வாணிபம் எனப் பல தளங்களில் இந்த நூல் விரிந்துசெல்கிறது. - குமரன்
ராஜராஜ சோழன்
ராகவன் சீனிவாசன்
(தமிழில்: ஸ்ரீதர் திருச்செந்துறை)
சுவாசம் பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 8148066645
சுமங்கலித் திட்டத்தின் கதை: பெண் வழி பிறந்து, பெண்களோடு வளர்ந்து, பெண்ணோடு வாழ்வைக் கழித்தும் பெண் வலியையும் உணர்வையும் புரிந்துகொள்ளாமல் வாழ்வதை உணர்த்துகிறது எஸ்.தேவியின் ‘பற்சக்கரம்’ நாவல். சுமங்கலித் திட்டத்தில் (மூன்று அல்லது ஐந்து வருடக் கால ஒப்பந்தத்தில் திருமணமாகாத பெண்களை வேலைக்குச் சேர்க்கும் திட்டம்) வேலை பார்க்கும் ரம்யா எனும் பெண்ணின் கதை, சோடா கம்பெனி நடத்தி நலிவடைந்த அவளது குடும்பத்தின் கதை ஆகிய இரண்டு தளங்களில் நாவல் பயணிக்கிறது.
மழைத்துளிகளே குளமாகக் காட்சியளிப்பதைப் போன்று பிரம்மாண்டமாக இயங்கும் தொழிற்சாலைகளுக்குள் ஒவ்வொரு தொழிலாளிகளும் மழைத்துளியாக இயங்குவதைப் பற்சக்கரம் உணர்த்துகிறது. உள்ளாடையும் நாப்கினும் வாங்க இயலாத குடும்பச் சூழலில் இருந்து வருபவர்கள்தான் சுமங்கலித் திட்டத்தின் வெற்றியாக இருப்பதையும் நாவல் உணர்த்துகிறது. தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் இயந்திரங்களின் மதிப்பைவிடக் குறைந்த பணமதிப்பற்ற நபர்களாகவே பார்க்கப்படுவதை நாவல் சுட்டுகிறது. உணவு உண்பதையும் உறங்குவதையும் ஷிப்ட் நேரங்களே முடிவுசெய்வதால், தொழிலாளர்கள் மனச்சிக்கலுக்கு உள்ளாவதைக் கதையோட்டத்தின் நிழலாய் காட்சிப்படுத்துகிறார் தேவி.
வேலை பார்க்கும் பெண்களோடு அமர்ந்து அவர்கள் உண்ணும் உணவையே உண்டு எல்லோரும் என் பிள்ளைகள்... உங்கள் பிரச்சினைகளை அப்பாவாக என்னிடம் கூறுங்கள் எனக் கூறி, அது சார்ந்து நடவடிக்கை எடுப்பதாக முதலாளிகள் போடும் நாடகம் அவர்களின் சுயநலன் சார்ந்தது என்பதையும் நாவல் சொல்கிறது. முதலாளிகளுக்கு அவர்கள் பேசும் வார்த்தைகளும் அவர்களுக்கான முதலீடே என்பதையும் தேவி உணர்த்துகிறார். மேலும், நூலாலைகளில் நடக்கும் பாலியல் சுரண்டலை வலியோடு காட்சிப்படுத்துகிறார். குடும்பங்கள் எப்படி எப்படியெல்லாம் ஆண் மையப்பட்டு இருக்கின்றன என்பதையும் குடும்பங்களில் பெண்களின் பரிதாப நிலையையும் நாவல் சுட்டிச் செல்கிறது. வாய்ப்புள்ள எல்லா இடங்களிலும் எளியவர்களின் நம்பிக்கையை முதலாளிகள் தங்கள் முதலீடாக மாற்றும் தன்மையை நாவல் மையச் சரடாகக் கொண்டுள்ளது. - ந.பெரியசாமி
பற்சக்கரம்
எஸ்.தேவி
எழுத்து பதிப்பகம்
விலை: ரூ.280
தொடர்புக்கு: 8925061999
கவிதையே பெண்ணாக... ஒரு பெண் என்ற நிலையை முழுமையாக உணர்த்துகின்றன இந்தக் கவிதைகள். தன் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவற்றுக்கு ஒரு மொழியைக் கண்டுபிடித்துக் கவிதைகள் வழி வெளிப்படுத்தியுள்ளார். பெண்களை வர்ணிக்கும் காதல் கவிதைகள் தமிழ் மொழிக்குப் பரிச்சயம். ஆனால் ஓர் ஆணை, அவன் கூந்தல் அசைவை, அவன் இருப்பை வர்ணிக்க விரும்பும் ஒரு பெண்ணின் கவிதைகள், வாசிக்கச் சுவாரசியமானதாக இருக்கின்றன. இந்த அம்சத்தில் ஆண்டாள் பாசுரங்களில் வெளிப்படும் தீராப் பெருங்காதலை ஒத்தவை சுமித்ராவின் இந்தக் கவிதைகள் எனலாம். - விபின்
ஆசை அகத்திணையா
க.சுமித்ரா சத்தியமூர்த்தி
விலை: ரூ.100
நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்
தொடர்புக்கு: 9789743053
நம் வெளியீடு: ஆங்கிலம் இனிது! - புதிதாக ஆங்கிலத்துக்குள் அடியெடுத்து வைப்பவர்களை மட்டுமல்லாமல், ஏற்கெனவே மொழியில் ஆளுமை படைத்தவர்களையும் இந்த நூல் ஈர்த்துவருகிறது. எவ்வளவு கடினமான கருத்தையும் சிரிக்கச் சிரிக்கப் புரியவைக்க முடியும் என்பதைத் தன்னுடைய லாகவமான எழுத்துத் திறமையால் தொடர்ந்து நிரூபித்துக்காட்டுகிறவர் ஜி.எஸ்.எஸ். ஏற்கெனவே, ‘இந்து தமிழ் திசை’யில் வெளியான ‘ஆங்கிலம் அறிவோமே’ பல பாகங்களாக வெளியான நிலையில், அடுத்த பாகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
உலக மொழி உங்களிடம்
ஜி.எஸ்.எஸ்
இந்து தமிழ் திசைப் பதிப்பகம்
விலை: ரூ.190
தொடர்புக்கு: 7401296562
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications