நூல் வெளி: ஒரு பகுத்தறிவுக் கதை

நூல் வெளி: ஒரு பகுத்தறிவுக் கதை

Published on

சரோஜா பிரகாஷின் நெடுங்கதையான ‘கொச்சைக் கிடா’ ஒரு வித்தியாசமான பரப்பில் பயணம் செய்கிறது. ஆனால், பேசப்படும் உள்ளடக்கம் நம் சமூகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஆணாதிக்கம், சாதி ஆணவம், மூடநம்பிக்கைகள் போன்றவைதாம். எழுத்தாளர் அம்பை ‘காட்டில் ஒரு மான்’ கதையில் வயதுக்கு வராத ஒரு பெண் வாழப் போராடுவதை நுட்பமாகச் சொல்லியிருப்பார். அது நடுத்தர வர்க்க வாழ்க்கைப் பின்புலம். இங்கு சரோஜா பிரகாஷ் தொட்டிருப்பது முற்றிலும் கிராமம் சார்ந்த வாழ்க்கைப் பின்னணி. தானே பெற்ற பெண் குழந்தையின் வலிகளைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல், ஊருக்குள் தான் ஒரு ஆண் மகன் என்று வீராப்பாகக் காட்டிக்கொள்வதே முக்கியம் என்றும் மகள் வயதுக்கு வந்தே ஆக வேண்டும் என்பதற்காகவும் யாரோ மூடர்கள் சொன்னதைக் கேட்டு, பச்சைத் தவளையை மகளுக்குக் கொடுத்துச் சாப்பிட வைக்கிறான். நினைத்துப் பார்க்க முடியாத அருவருப்பான தண்டனை அது. தவளையைச் சாப்பிடச் சாப்பிட மகளுக்கு வாந்தி பேதி ஆகிச் செத்தே போகிறாள். காலராவினால் அவள் செத்துப்போனதாகக் கதை கட்டிவிடுகிறார்கள். ஒருவகையில் இதுவும் ஓர் ஆணவக் கொலைதான்; ஆணாதிக்க ஆணவக் கொலை. செய்த கொலை உண்டாக்கிய குற்ற உணர்வைப் போக்கிக்கொள்ளப் பரிகாரம் தேடுவதில் கதை தொடங்குகிறது.

சாமியை மட்டும் நம்பி வாழ முடியாது என்று ஊர்க் கோயிலை விட்டு வெளியேறி, விவசாயக் கூலியாக எங்கோ ஒரு நிலப்பரப்பில் உழைத்துக் கொண்டிருக்கும் பூசாரியிடம் பரிகாரம் கேட்கிறார்கள். பிறப்பிலேயே விதை இல்லாமல் பிறந்த கொச்சைக் கிடா ஒன்றைப் பிடித்து வந்து பலி கொடுத்தால் கொன்ற பாவம் தீரும்; செத்துப்போன பெண்ணின் கோபம் அமைதியுறும் என்று சொல்லியனுப்புகிறார். கொச்சைக் கிடாயைத் தேடிக் கொண்டுவந்து பலி கொடுத்து, அந்தக் கிடாக்கறியை விருந்தாக ஆண்கள் எல்லோரும் வெட்டிக்கொண்டிருக்கும் நாளில், இளைய மகள் வயதுக்கு வந்து அவள் கால்களின் வழிக் குருதி கசிகிறது. அவளைப் பெற்ற தாய் அவளை அழைத்துக்கொண்டு அவ்விடம் நீங்கி, மகளின் ரத்தச் சுவடுகள் பாதையில் பதிய நடந்துபோகிறாள். இன்னொரு புறம், புறக்கணிக்கப்பட்ட கோயில் மாட்டைக் கல்லால் அடித்துத் துரத்துகிறார்கள் இளைஞர்கள். அவர்களை நோக்கித் தாய் கல்லெறிகிறாள். இக்கதையில் எந்தக் கதாபாத்திரமும் தனித்துவமான குணாம்சத்துடன் படைக்கப்படவில்லை.

ஆணாதிக்கத்தின் குறியீடாகத் தகப்பன், துயருறும் கையறு நிலையில், நம்மோடு வாழும் எண்ணற்ற பெண்களின் பிரதிநிதியாக அந்தத் தாய், மூடர்கூடமாக உள்ளூர் சமூகம் என எல்லாமே வகைமாதிரியான பாத்திரப் படைப்பாகவே இருப்பது கதைக்குப் பலம் அல்ல என்று தோன்றுகிறது. பச்சைத் தவளை என்பதையும் குறியீடாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இக்கதையில் பெண்ணுக்குப் பச்சைத் தவளையை ஆணாதிக்கச் சமூகம் தின்னக் கொடுக்கிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் காலம் காலமாக இச்சமூகம் எதை எதையோ தின்னக் கொடுத்து நிர்ப்பந்திக்கும் வரலாற்றைப் பச்சைத் தவளை குறிப்பால் உணர்த்துகிறது. ஒரு பகுத்தறிவுப் பரப்பில் கதையை நகர்த்திச் செல்ல முயன்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சரோஜா பிரகாஷுக்கு மொழி கைகொடுக்கிறது. சொல்ல வருவதை லாகவமான மொழியில் சொல்லிச் செல்கிறார். இன்றைய இளைஞர்கள் புதிய புதிய பாதைகளில் வாசகர்களை அழைத்துச் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது. சரோஜா பிரகாஷ் இக்கதையின் மூலம் ஒரு புதிய வழியில் அழைத்துச் செல்கிறார்.

கொச்சைக் கிடா
சரோஜா பிரகாஷ்

ஸ்நேகா பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 98401 38767

- தொடர்புக்கு: tamizh53@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in