

சித்திரக் காட்சியைப் பார்ப்பதற்காகச் சக்கரவர்த்தி நின்ற இடங்களில் எல்லாம் அவர் மேலும் குந்தவி தேவியின் மேலும் பூமாரி பொழிந்தார்கள். நறுமணம் பொருந்திய பனி நீரை இரைத்தார்கள்.
கலைத் திருநாள்!
இவ்விதம் கண்ணுக்கு எட்டிய தூரம் ஒரே ஜன சமுத்திரமாகத் தோன்றியதாயினும் அந்த ஜனத் திரளுக்கு மத்தியில் ஓரிடத்தில் மிகவும் நெருங்கிய ஜனக் கூட்டம் காணப்பட்டது. இந்தக் கூட்டம் ஒரே இடத்தில் நிலைத்து நில்லாமல் போய்க்கொண்டு இருந்தது. அந்தக் காட்சியானது சிறு சிறு அலைகள் எழுந்து விழுந்துகொண்டிருக்கும் சமுத்திரத்தில் ஒரே ஒரு பெரிய அலை மட்டும் தொடர்ச்சியாகப் போய்க்கொண்டு இருப்பதுபோல் தோன்றியது. இந்தப் பெரிய அலைக்குக் காரணமாக இருந்தவர்கள் சக்கரவர்த்தியும் அவருடைய செல்வப் புதல்வியும்தான். நரசிம்ம வர்மர் உயர்ந்த ஜாதிப் புரவி ஒன்றின் மேல் வீற்றிருந்தார். குந்தவி தேவியோ பல்லக்கில் இருந்தாள். இவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் கூட்டத்தை விலக்கி வழி செய்வதற்காக ஒரு சில வீரர்கள் மட்டுமே சென்றார்கள். அவர்களுக்குச் சற்று முன்னால், சக்கரவர்த்தியின் வருகையை அறிவிப்பதற்காக, ஒரு பெரிய ரிஷபத்தின் மேல் முரசு வைத்து அடித்துக்கொண்டு போனார்கள்.
ஜனத் திரளுக்கு இடையே சென்றுகொண்டு இருந்த இந்த ஊர்வலம் ஆங்காங்கு நின்று நின்று போகவேண்டியதாக இருந்தது. சித்திரக் காட்சியைப் பார்ப்பதற்காகச் சக்கரவர்த்தி நின்ற இடங்களில் எல்லாம் அவர் மேலும் குந்தவி தேவியின் மேலும் பூமாரி பொழிந்தார்கள். நறுமணம் பொருந்திய பனி நீரை இரைத்தார்கள். சந்தனக் குழம்பை அள்ளித் தெளித்தார்கள். "ஜய விஜயீ பவ!" என்றும், "தர்ம ராஜாதிராஜர் வாழ்க!" "திருபுவனச் சக்கரவர்த்தி வாழ்க!" "நரசிம்ம பல்லவேந்திரர் வாழ்க!" "மாமல்ல மன்னர் வாழ்க" என்றும் கோஷித்தார்கள்.
சக்கரவர்த்தி ஒவ்வொரு சித்திரக் காட்சியையும் விசேஷ சிரத்தையுடன் பார்வையிட்டு, ஆங்காங்கு பயபக்தியுடன் நின்று கொண்டிருந்த ஓவியக்காரர்களிடமும், சிற்பக் கலைஞர்களிடமும் தமது பாராட்டுதலைத் தெரிவித்துக்கொண்டு வந்தார்.
- மீண்டும் கனவு விரியும்...