நூல் நயம்: அறியப்படாத உலகின் அரிய குரல்

நூல் நயம்: அறியப்படாத உலகின் அரிய குரல்
Updated on
3 min read

சிறு தொழில் நசிவு பற்றியும், அந்தத் தொழிலை முடக்கும் நுண்ணரசியல் பற்றியும் மையப்படுத்தி ‘குற்றியலுகரம்’ நாவலை நெய்வேலி பாரதிக்குமார் எழுதியிருக்கிறார். பாபு - ஜெனிதா, அறிவழகன்-மலர்விழி என்ற இரண்டு இளம் தம்பதிகளையும், குருராஜன் என்னும் தொழில்முனைவோரையும் முக்கியக் கதாபாத்திரங்களாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல், தமிழில் இதுவரை பேசப்படாத புதிய களத்தைக் கண்முன் விரிக்கிறது.குறுந்தொழில் உலகம் என்பது திறன் சார்ந்த தொழிலாளர்கள் என்றேனும் ஒரு நாள் தாமும் ஒரு நிறுவனத்தை உருவாக்க முடியும் என்கிற கனவு காணும் மாய உலகம். அது எப்படித் தந்திரங்களால் சூழப்பட்ட உலகமானது என்பதை நாவல் நுட்பமாகச் சித்தரிக்கிறது; சிறு தொழில்முனைவோருக்கு இடையே நிலவும் உளவியல் சவால்களைச் சொல்கிறது.

சிறுதொழில் நடத்துகிற பாபு பிறப்பால் இலங்கைக்காரன். சிறு குழந்தையாக இருக்கும்போதே, தான் யாரென்று தெரியாமல், சாதி, மத அடையாளங்கள் எதுவும் இல்லாமல் அகதி முகாமில் வளர்ந்தவன். இப்படி ஒரு கதாபாத்திரம் தமிழுக்கு மிகப் புதிது. இந்த நாவலில் வருகிற அறிவழகன் முதலாளிகளுடைய துரோகச் செயல்களுக்கு எதிராகப் பலரின் மத்தியில் கத்தியால் கழுத்தை அறுத்துக்கொள்கிறான். அறிவழகன் குடும்பத்துக்குக் கழுத்தறுப்புக்குக் கை மேல் பலன் என்று அவர் குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்கிறபோது சிலர் சொல்கிறார்கள். ஆனால், இப்படி கழுத்தறுப்பு நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கும் சிறு சிறு முதலாளிகளுக்கும் ஏற்படுகிறது. இதேபோல மலர்விழியின் தொழில் சார்ந்த சிக்கல்களைப் பற்றியும், அவற்றிலிருந்து அவள் எப்படி மீண்டெழுகிறாள் என்பதும் நாவலில் நுட்பமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

கதைக்குள் கதைகள் என்பதுபோல, இந்த நாவலில் கதையின் ஓட்டத்தோடு நான்கு குறுங்கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. துரோகத்தின் பல்வேறு வகையான வடிவங்கள் பற்றியும், சிக்கல்களைப் பற்றியும் வெவ்வேறு மட்டங்களிலும் இந்த நாவல் உணர்த்துகிறது. சிறு தொழில் எனும் உலகம் சார்ந்து இயங்கும் பல மனிதர்கள் பற்றிய முக்கியமான அனுபவங்களை நாவல் பதிவுசெய்கிறது. குறுந்தொழில் முனைவோரின் முன்னால் நிற்கும் பிரச்சினைகளையும் சவால்களையும், அவற்றை எதிர்கொண்டு போராட வேண்டிய எளிய மனிதர்களின் வாழ்க்கை எப்படித் திசைமாறுகிறது என்பதையும் துல்லியமாக இந்த நாவல் சொல்கிறது. படைப்பாளிக்குத் திறனும் உழைப்பும் மட்டுமே முதலீடு என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லிவரும் பாரதிக்குமாருடைய தொடர்ந்த இலக்கியச் செயல்பாடுகளில் ஒரு முக்கியப் பதிவாக அவரின் இந்த முதல் நாவல் இருக்கிறது. - சுப்ரபாரதி மணியன்

குற்றியலுகரம்
நெய்வேலி பாரதிக்குமார்
எழுத்து பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 8925061999

வரலாறும் கலையும்: சித்தன்னவாசல் ஓவியத்துக்குப் பெயர்பெற்ற ஊர் புதுக்கோட்டை. இந்த ஊரின் சிறப்பான ஓவியத்தை, சிற்பக் கலையை வரலாற்றுப் பின்புலத்துடன் விளக்கும் நூல் இது. சித்தன்னவாசலின் எல்லா ஓவியங்களுடன் இந்த நூலில் உள்ள கட்டுரை தெளிவாக விளக்குகிறது. ஓரிடத்தில் சித்தன்னவாசல் யானை ஓவியத்துடன் அஜந்தா ஓவியத்தையும் அந்தக் கட்டுரை ஒப்பிடுகிறது. சித்தன்னவாசல் அருகிலுள்ள குடைவரைக் கோயிலைக் குறித்தும் தனிக் கட்டுரையில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. - விபின்

சித்தன்னவாசல்
முனைவர் சு.இராசவேல்
மத்தியத் தகவல், ஒலிபரப்பு அமைச்சகம்
விலை: ரூ.170
தொடர்புக்கு: https://www.publicationsdivision.nic.in

கட்டுப்பாடற்ற கவிதைகள்: தமிழ் நவீனக் கவிதையின் வெளிப்பாட்டு வடிவம் 2000க்குப் பின் மாற்றம் கண்டுள்ளது. பெரும்பாலான கவிதைகள் ஓசை நயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்படுகின்றன. அதற்கு முந்தைய காலகட்டத்தில் காணப்படும் ஓசை அற்ற கவிதைகளின் தொடர்ச்சியாக ‘நிறையழிதல்’ தொகுப்பிலுள்ள கவிதைகள் இருக்கின்றன. காட்டாற்று வெள்ளத்தைப் போல் இந்தத் தொகுப்பில் கவிதையின் மொழிக்குக் கட்டுப்பாடில்லை. போகிறபோக்கில் ஒரு மொழியைக் கைக்கொண்டுள்ளது. அந்த மொழியின் வழி சமகால வாழ்வு, அரசியல், காதல் எல்லாம் வெளிப்பட்டுள்ளது. நிலம் சார்ந்த காட்சிகளும் கவிதையில் விருப்பத்துடன் வெளிப்பட்டுள்ளன. அதுபோல் எல்லாமும் அனுபவத்தால் கட்டப்பட்டுள்ளன. - குமரன்

நிறையழிதல்
நூதன் பியர்யெவ்ஸ்கி
குறி வெளியீடு
விலை: ரூ.130
தொடர்புக்கு: 9489306677

பன்முக ஆளுமைச் சித்திரம்: மக்களவை உறுப்பினர் ரவிக்குமாரின் 60ஆம் பிறந்தநாளை ஒட்டி 2021-22இல் அம்பேத்கர் படிப்பு வட்டம் இணையவழி கலந்துரையாடல் அமர்வுகளை ஒருங்கிணைத்தது. இவற்றில் அரசியலர்கள். எழுத்தாளர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் எனப் பல்துறை ஆளுமைகள் பங்கேற்று உரை அல்லது கட்டுரை வாசிப்பு நிகழ்த்தினர். இவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளும் கட்டுரைகளும் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. சக மக்களவை உறுப்பினர்களான கனிமொழி கருணாநிதி, சு.வெங்கடேசன் இருவரும் ரவிக்குமாரின் நாடாளுமன்றப் பங்களிப்பு குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்கள்.

குறிப்பாக ரவிக்குமார் அனைத்து மசோதாக்கள் குறித்தும் தெளிவாகப் படித்து வைத்திருப்பார், நாம் படிக்கத் தவறியிருந்தால் அவரிடமிருந்து விளக்கம் கேட்டுக்கொள்ளலாம் என்று கனிமொழி குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. கல்வியாளர் வே.வசந்திதேவி ரவிக்குமாரின் அதிகம் அறியப்படாத கல்விப் பணிகள் குறித்துப் பேசியிருக்கிறார். விழுப்புரம் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிதில் ஆசிரியர்கள், செயல்பாட்டாளர்கள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பணியாற்றுவோர் ஆகியோரை வைத்து ஒரு கூட்டத்தை நடத்தி, அவர்களிடையே உரையாற்றத் தன்னை அழைத்திருந்ததை வசந்திதேவி நினைவுகூர்ந்திருக்கிறார்.

எழுத்தாளர் அரவிந்தன் ரவிக்குமாரின் எழுத்துகளில் படைப்பிலக்கியத்தின் கூறுகள் இருப்பதாகக் கூறி, அவர் படைப்பிலக்கியம் எழுத வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். மேலும் எழுத்தாளர் சுந்தர ராமசாமி, ரவிக்குமாரின் எழுத்தையும் அவதானிப்புத் திறனையும் வெகுவாகப் பாராட்டியதைக் குறிப்பிட்டிருக்கிறார். அரசியல், எழுத்து, மொழிபெயர்ப்பு, இதழ்கள் நடத்துவது, வரலாற்றாய்வு, திறனாய்வு எனப் பல துறைகளில் தொடர்ச்சியாகக் காத்திரமாக இயங்கிவரும் ரவிக்குமாரின் பன்முக ஆளுமைப் பரிமாணத்தை உள்வாங்க இந்த நூலை வாசிக்கலாம். - கோபால்

உணர்வுத் தோழமை
ஜெ.பாலசுப்பிரமணியம். அ.ஜெகநாதன்
மணற்கேணி பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 6382794478

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in