பெண்களும் அரசியலும்

பெண்களும் அரசியலும்
Updated on
2 min read

கே.ஆர்.மீரா இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுத வந்தவர். இவர், கல்விப்புலம் சார்ந்த பின்னணியுள்ள குடும்பத்தில் பிறந்தவர். தொண்ணூறுகளுக்குப் பிறகு ‘மலையாள மனோரமா’வில் பணியில் சேர்ந்துள்ளார். இந்த இதழ் கே.ஆர்.மீரா எழுதுவதற்கான களத்தை வலிமையாக உருவாக்கிக்கொடுத்துள்ளது. ஒரு கட்டத்தில்எழுதுவதற்காகத் தனது வேலையை விட்டுள்ளார். கே.ஆர்.மீரா எழுத்தின் அடையாளமாக ‘ஆராச்சார்’ நாவல் பார்க்கப்படுகிறது. கல்கத்தாவில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வழிவழியாகத் தூக்கிலிடும் தொழில் செய்யும் குடும்பத்தைப் பற்றிய கதைதான் ‘ஆராச்சார்.’ இந்நாவலைக் கள ஆய்வு செய்து, கே.ஆர்.மீரா எழுதியுள்ளார்.

இந்நாவல் சாகித்ய அகாடமி, கேரள சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளது. இவர் தன் நாவல்களில் வலிமையான பெண் கதாபாத்திரங்களைத் தொடர்ச்சியாக உருவாக்குகிறார். ஆண்களால் உருவாக்கப்பட்ட பெண் கதாபாத்திரங்கள் ஒருசார்புத் தன்மையுடன் காணப்படுகின்றன. ‘ஆராச்சார்’ நாவலின் சேதனா அத்தகையதொரு கதாபாத்திரம். இப்படியொரு இடத்தைப் போதிய கவனம் கொடுத்து நிரப்பாமல் இலக்கிய உலகம் கடந்து சென்றிருப்பதை கே.ஆர்.மீரா கண்டுகொள்கிறார். அந்த இடம்தான் தனக்கான இலக்கிய இயங்குதளம் என்பதை அறிந்து, கே.ஆர்.மீரா இறுகப் பற்றிக்கொள்கிறார்.

இவரது கதாபாத்திரங்கள் ஆண்களிடம் உண்மையான அன்பைத் தேடித் தேடி ஏமாந்துபோகும் கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள். தனக்கான ஆணைத் தேடிச் சலிப்படைந்து, இறுதியில் சுயத்தின் பாதைக்குத் திரும்பும் கதாபாத்திரங்களை கே.ஆர்.மீரா தம் படைப்புகளில் உருவாக்கிக்கொண்டே இருக்கிறார். உண்மையான அன்பைத் தேடும் தேடலினூடாக அவர் முன்வைக்கும் பெண்ணியக் கதையாடலே கே.ஆர்.மீராவைத் தவிர்க்க முடியாத எழுத்தாளராக மாற்றுகிறது. தன் கதைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள ஏராளமான தொன்மங்கள் இந்து மரபில் கொட்டிக்கிடப்பதை கே.ஆர்.மீரா அறிகிறார். இந்தத் தொன்ம மதிப்பீடுகள் அனைத்துமே பெண்களுக்கு எதிராக இருக்கின்றன.

அதிலொரு தொன்மத்தை ‘மீரா சாது’ நாவலில் பயன்படுத்தியுள்ளார் கே.ஆர்.மீரா. ‘துளசி’ என்ற கதாபாத்திரத்தை ‘மீரா’ என்ற தொன்மத்தின் நவீன வடிவமாக மாற்றியுள்ளார். ஐ.ஐ.டி.யில் படித்தவள் துளசி. செல்வாக்குமிக்க குடும்பத்தில் பிறந்தவள். ஆனால், மாதவன் என்கிற ஆணின் பேச்சில் மயங்கித் துயரத்தின் இழிநிலைக்குச் செல்கிறாள். பெண்களை மயக்குவதிலும் அடிமைப்படுத்தி வைப்பதிலும் இனிப்பான பேச்சும் தற்காலிகப் பணிவும் ஆண்களிடம் அபாரமாகச் செயல்படுவதைத் துளசி இறுதியில்தான் கண்டுகொள்கிறாள். நைச்சியமாகப் பேசும் மாதவன் ஆண்களின் ஒட்டுமொத்தப் பிம்பத்தையும் உள்வாங்கியவனாக இருக்கிறான்.

துளசியைத் தனது அபாரமான நடிப்பினூடாகச் சிறப்பாக ஏமாற்றும் கலை தெரிந்தவனாக இருக்கிறான். இறுதியில் அவனைப் பழிவாங்கத் தன்னை அழித்துக்கொள்ளும் முடிவைத் துளசி எடுக்கிறாள். ஆண்கள் தங்கள் இருப்புக்கான ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்ளும் குழந்தைகளைத் தூக்கி எறிகிறாள். மாதவனுடன் எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டும் என்ற அவளது தன் முனைப்பை, மாதவன் ஒவ்வொரு முறையும் உதாசீனப்படுத்திக்கொண்டே இருக்கிறான். இறுதியில், தன் அழகை அழித்து மாதவனைத் தனிமைப்படுத்துகிறாள். எல்லாவித மகிழ்ச்சியும் எளிதாகக் கிடைத்திருக்கக்கூடிய பெண் துளசி. அழகு, அறிவு, திறமை, படிப்பு எல்லாம் இருந்தும் ஓர் ஆணின் பேச்சுத் திறமைக்கு முன்பு தோற்று நிற்கிறாள் என்ற யதார்த்தத்தை அவ்வளவு காத்திரமாக கே.ஆர்.மீரா இந்நாவலில் எழுதியிருக்கிறார்.

மக்களாட்சிகூட எவ்வளவு கொடூரமாக இருக்கிறது என்பதை நவீன இலக்கியங்களே வெளிக்காட்டுகின்றன. கே.ஆர்.மீராவின் ‘யூதாஸின் நற்செய்தி’ நாவலை வாசித்தபோது, அப்படித்தான் இருந்தது. நெருக்கடிநிலை என்பது முடிந்துபோகவில்லை. அதன் வெவ்வேறு வடிவங்கள் இன்றும் நடைமுறையில் உள்ளன. யூதாஸ், சுனந்தா, பிரேமா ஆகிய மூன்று கதாபாத்திரங்களைக் கொண்டு கே.ஆர்.மீரா அதிகாரத்தின் கோர முகத்தைத் துல்லியமாகப் படைப்பாக்கியிருக்கிறார். பெண்கள் எவ்வளவு வலிமையானவர்கள் என்பதற்குஇந்நாவலின் சுனந்தாவும் பிரேமாவும் சிறந்த உதாரணங்கள். நக்சலைட்டுகள் யாருக்கானவர்கள்; அவர்களது போராட்டம் யாரை நோக்கியதாக இருந்தது என்பதையெல்லாம் இக்காலகட்டத்திலாவது மறுபரிசீலனை

செய்ய வேண்டும். அரசு யாருக்கானது; அவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ‘யூதாஸின் நற்செய்தி’ நாவல் இதைச் செய்திருக்கிறது. நக்சலைட்டுகள் எப்போதும் நினைக்கத்தக்கவர்கள்; அவர்களது தியாகங்கள் தொடர்ந்து நினைவுகூரப்பட வேண்டியவை. இதனை இந்நாவல் மிகத் தீவிரத்துடன் உரையாடியிருக்கிறது. கே.ஆர்.மீராவுக்கு ஓர் இழை போதும்; அதனைக் கொண்டு காத்திரமான புனைவாக மாற்றிவிடுகிறார். அவரது புனைவுகளுக்கு மொழி நன்றாக ஒத்துழைக்கிறது. வெள்ளிக்காசுக்கு ஆசைப்பட்டுக் காட்டிக்கொடுத்த யூதாஸ் என்ற தொன்மத்தை நக்சலைட்டுகள் கதையுடன் இணைத்து நவீன வடிவமாக மாற்றியுள்ளார் கே.ஆர்.மீரா. காட்டிக்கொடுத்தவனின் சூழல் இதில் தெளிவாக்கப்பட்டுள்ளது. காட்டிக்கொடுத்தவனின் துயரத்துக்குப் புனைவு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

மீரா சாது

(தமிழில்: மோ.செந்தில்குமார்)
யூதாஸின் நற்செய்தி
(தமிழில்: மோ.செந்தில்குமார்)

கே.ஆர்.மீரா

எதிர் வெளியீடு
விலை முறையே: ரூ.150, ரூ.200
தொடர்புக்கு: 98650 05084

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in