ஒரு அணையின் கதை

ஒரு அணையின் கதை
Updated on
1 min read

தமிழகம்,கேரளா இடையே உரிமைப் போராட்டத்தை ஏற்படுத்திய ஒரு விஷயம் முல்லைப் பெரியாறு அணை. தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் இந்த முல்லை பெரியாறு அணைக்குப் பின்னணியில் ஒரு பெரும் தியாகம் ஒளிந்திருக்கிறது. பல சர்ச்சைகளுக்கு இடையே தென் தமிழக மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைப் பற்றியும், இந்த அணையைக் கட்டிய பென்னிகுயிக்கின் தியாகத்தையும் எழுத்துருவில் தாங்கி வந்திருக்கும் நூல்தான் ஜி. விஜயபத்மா எழுதியுள்ள ’முல்லை பெரியாறு - அணை பிறந்த கதை’.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்ட திட்டம் என்பதால், வெள்ளையர்கள் இந்தியாவுக்கு வர முயற்சி மேற்கொண்டதிலிருந்து அணையின் கதை தொடங்குகிறது. தமிழக அரசின் தலைமைச் செயலகமாக உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை எப்படி உருவானது, எதற்காக உருவாக்கினார்கள், ராபர்ட் கிளைவின் சாசசங்கள் என கறுப்பு வெள்ளைக் காலத்தைப் பற்றி நூலில் ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. மெட்ராஸ் மாகாணத்தில் ஏற்பட்ட தாது வருடப் பஞ்சம் பற்றி ஆதாரத்துடன் நூல் ஆசிரியர் விளக்கியிருக்கிறார்.

பஞ்சத்தைப் போக்கும் விதமாக நீர் மேலாண்மையை விஸ்தரிக்க ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட முயற்சி, அதன் ஒரு பகுதியாக முல்லைப் பெரியாறு அணை கட்ட எடுக்கப்பட்ட முயற்சிகள், திருவாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுகளுக்குப் போட்டப்பட்ட ஒப்பந்தம், அணை கட்டும்போது ஏற்பட்ட சிரமங்கள், உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் குறித்து தகவல்கள் உள்ளன.

இறுதியாக பென்னி குயிக் என்ற ஆங்கிலேயப் பொறியாளரின் கடும் முயற்சியும், அதற்காக அவர் மெனக்கெட்டதையும் படிக்கும்போது சிலிர்ப்பு ஏற்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி அரபிக் கடலில் வீணாகக் கலக்கும் பெரியாறு நீரைப் பயன்படுத்த அணை கட்டித் தென் தமிழக மக்களின் வயிற்றில் நீர் வார்த்த பென்னி குயிக்கின் தியாகத்தை எல்லோருமே அறிந்து கொள்ள வேண்டும்.

முல்லை பெரியாறு - அணை பிறந்த கதை, ஜி.விஜயபத்மா, விலை : ரூ.115, விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002, தொலைபேசி: 044-42634283/84

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in