Last Updated : 27 Jan, 2018 10:20 AM

 

Published : 27 Jan 2018 10:20 AM
Last Updated : 27 Jan 2018 10:20 AM

புத்தகக் காட்சியின் வெற்றியை நிர்ணயிப்பது எது?

ந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சி இனிதாக நடந்து முடிந்தது. கடந்த ஆண்டைவிடக் கூடுதலான பார்வையாளர்கள். பலர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். பெருமளவில் குழந்தைகளைக் காண முடித்து. பொங்கல் விடுமுறை நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம். நெரிசல், புழுக்கம் எனப் பல காரணங்கள் இருந்தபோதிலும், அவற்றைப் பொருட்படுத்தாது மக்கள் திரண்டுவருவது மகிழ்ச்சிதரும் விஷயம். அதேசமயம், புத்தக விற்பனை தொடர்பாக, பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களிடம் மாறுபட்ட மனநிலை நிலவுகிறது. ஒரு சாரர் சிறப்பான விற்பனை என்றும் இன்னொரு பகுதியினர் மிக மோசமான விற்பனை என்றும் பேசுவதைப் பார்க்க முடிகிறது. எது உண்மை?

சில முக்கியக் காரணிகள் விற்பனையை நிர்ணயிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. முதலாவதாக, சிறப்பான விற்பனை செய்த பதிப்பகங்கள் அதிக அளவில் புதிய புத்தகங்களை வெளியிட்டிருக்கின்றன. எல்லாத் தரப்பு வாசகர்களையும் கவரும் வண்ணம் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள், குறிப்பாக, ஒரு குடும்பத்தில் தந்தை, தாய், குழந்தைகள் என அனைத்து வயதினருக்குமான புத்தகங்களை வைத்திருந்தவர்கள், தொண்டு நிறுவனம், அமைப்பு சார்ந்த பதிப்பாளர்கள், பெரிய அரங்குகள் மூலம் வாசகர்கள் சிரமமின்றி புத்தகங்களை எடுத்துப் பார்க்கும் வசதி ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் என்று பட்டியல் நீள்கிறது.

புத்தகக் காட்சியை மட்டும் கணக்கில்கொள்வது என்றில்லாமல், ஆண்டு முழுவதும் மக்கள் மனதில் நிலைக்கும் வகையில் தொடர்ந்து இயங்கி, தங்களுக்கான ‘பிராண்ட்’ உருவாக்கிய பதிப்பகங்களும் நல்ல விற்பனையைக் கண்டிருக்கின்றன. தற்போது பிரபலமாகிவரும் ‘தேவைக்கேற்ப அச்சிடுதல்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அதிக முதலீடு இன்றி குறைந்த அளவில் புத்தகங்கள் அச்சடிப்பதன் மூலம் நிறைய புத்தகங்கள் கொண்டுவருகிற வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இதனால், எண்ணற்ற அளவில் புதிய எழுத்தாளர்கள் உருவாகிறார்கள்.

முகநூல், வலைதளம் போன்றவற்றில் எழுதத் தொடங்குபவர்கள் குறுகிய காலத்தில் தேர்ந்த எழுத்தாளர்களாகிவிடுகின்றனர். அதுதவிர, சமூக வலைதளங்களில் தங்களுக்கென ஒரு பெரிய நட்பு வட்டத்தை உருவாகிக்கொள்கின்றனர். இதன் மூலம், இவர்களால் எளிதில் நூற்றுக்கணக்கான பிரதிகள் விற்க முடிகிறது. இது போன்றவர்களைப் பயன்படுத்திக்கொண்ட பதிப்பகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

மக்கள் பெரிய பதிப்பகங்களை நோக்கிப் படையெடுக்கின்றனர். சிறிய பதிப்பகங்களைப் புறக்கணிக்கின்றனர் என்கிற குற்றச்சாட்டைப் பலர் முன்வைக்கிறார்கள். இன்றைக்கு அமேசான் போன்ற இணையவழி வணிக நிறுவனங்கள் மூலம் எளிதில் வாங்கிக்கொள்ளலாம் என்கிற வசதி இருக்கும்போது புத்தகக் காட்சிக்கு மக்கள் வருகிறார்கள் என்றால், அது புத்தகம் மீதுள்ள அளவுகடந்த பிரியமும், புத்தகக் காட்சியில் கிடைக்கும் அனுபவங்களுக்காகவும்தான். புத்தகக் காட்சியை வெறுமனே சுற்றிவருவதற்கே ஒரு மணி நேரம் ஆகிவிடும். இந்தச் சூழலில் ஒவ்வொரு கடைக்கும் சென்று பார்ப்பது என்பது இயலாத காரியம். இதுபோன்ற காரணங்களால், வாசகர்கள் தங்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான பதிப்பாளர்களின் அரங்குகளுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர்.

பிராங்பர்ட், லண்டன் போன்ற புத்தகக் காட்சிகளிலும் இத்தகைய பிரச்சினைகள் உள்ளன. இதனை எதிர்கொள்ள, சிறிய பதிப்பாளர்கள் கூட்டாக இணைந்து பெரிய கடைகளாக அமைக்கின்றனர். அதுபோன்று நமது பதிப்பாளர்களும் முயற்சிக்கலாம். மேலும், வெவ்வேறு வகை பதிப்பாளர்களைத் தொகுத்து பகுதிகளாகப் பிரிப்பது வாடிக்கையாளர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.

விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களை வாசகர்கள் அறிந்துகொள்ளவும், தேடி எடுத்துக்கொள்ளவும் செயலிகள் உருவாக்குவது அவசியம். என்னென்ன புத்தகங்கள் வந்திருக்கின்றன, என்னென்ன புத்தகங்களை வாங்கலாம் என்று புத்தகக் காட்சிக்குக் கிளம்புவதற்குள் வாசகரால் திட்டமிட முடியும். திறன்பேசிகள் அதிகரித்திருக்கும் இந்தக் காலகட்டத்திலும் புத்தகங்களை நோக்கி வரும் வாசகர்களைத் தக்கவைத்துக்கொள்ள இது பெரிதும் கைகொடுக்கும். பதிப்பாளர்கள் இதை உணர்ந்து காலத்துக்கேற்பத் தங்களை மாற்றிகொள்வது நல்லது. தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளிப்படங்கள் கொண்ட அச்சுப் புத்தகங்கள் எதிர்காலத்தில் கோலோச்சப்போகின்றன. உதாரணமாக, கதையில் குற்றால அருவியில் தண்ணீர் கொட்டுவதுபோல விவரிக்கப்பட்டால், அவ்விடத்தில் அமைந்துள்ள குறியீடுகளை, வாசகர்கள் தங்கள் திறன்பேசி வாயிலாக உள்வாங்கி, அந்தக் காட்சியையே பார்க்க முடியும். அறிவியல் பாடங்களுக்குப் பெருமளவில் உதவும் தொழில்நுட்பம் இது. இத்தகைய மாற்றங்களுக்குப் பதிப்பகங்கள் தங்களைத் தயார்செய்துகொள்ள வேண்டும். இதுபோன்ற முன்னெடுப்புகளைப் பதிப்புலகம் மேற்கொள்வது இனி நடக்கவிருக்கும் புத்தகக் காட்சிகள் மேலும் வெற்றிகரமாக நடைபெற வழிவகுக்கும்!

- கோ.ஒளிவண்ணன்,

மேனாள் பொருளாளர், பபாசி; தமிழ் பதிப்புத் துறை

ஆராய்ச்சியாளர். தொடர்புக்கு: olivannang@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x