இந்த வலையில் ஒரு கண்ணிதான்

இந்த வலையில் ஒரு கண்ணிதான்
Updated on
1 min read

சந்தோஷ் நாராயணன் ஓவியர், வடிவமைப்பாளர். அண்மைக் காலங்களில் அவர் வரைந்துவரும் சில ஓவியங்கள் முகநூலில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்தக் குறுஞ்சித்திரங்கள் உருவானதன் பின்னணியில் உள்ள பார்வையையும் அனுபவங்களையும் இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

மினிமலிசம். இது ஒரு கலை வடிவம் மட்டுமல்ல; வாழ்வியல் சார்ந்த தத்துவமும்கூட. இன்றைய உலகமயமாக் கப்பட்ட பொருளியல் சூழலில், எல்லாம் இயந்திரமயமாகிவிட்ட நுகர்வியல் கால கட்டத்தில் மினிமலிசம் தேவைகளைக் குறைத்துக்கொள்வதைப் பற்றி நம்மிடம் பேசுகிறது. அது கட்டிட வடிவமைப்பிலிருந்து இசைக்கோர்ப்பு வரை அலங்காரங்களை விலக்கக் கோருகிறது.

அந்த வகையில் மினிமலிசம் என்னைக் கவர்ந்த ஒரு கலை வடிவமாக இருக்கிறது. இந்தத் தாராளமய மாக்கப்பட்ட, மனித சந்தையின் நோவுகளை, அடையாள இழப்பை, அக்கறையின்மையை, அழுத்தங் களை, ஆன்மிகமின்மையை, அரசியலைப் பதிவுசெய்ய, சுட்டிக்காட்ட, எனக்கு நானே கதை கூறிக்கொள்ள, இந்த வடிவம் பொருத்தமாக இருக்கிறது.

பெரும்பாலும் இந்த ஓவியங்கள் இன்றைய கணினி மயமாக்கப்பட்ட மூளைகளுடன் பேசுகின்றன. அந்த மூளைகளின் இண்டு இடுக்குகளில் இன்னமும் தேங்கியுள்ள மனிதத்தன்மையை, அன்பை, கருணையை தேடிக் கேள்வியுடன் நிற்கிறது. இதன் சுவாரசியமான தவிர்க்க முடியாத முரண்பாடு, இந்த ஓவியங்களையும் கம்ப்யூட்டரில் டிஜிட்டல் ஓவியங்களாகத்தான் செய்கிறேன் என்பதும், ஃபேஸ்புக் வழியாகவே இது அதிக கவனத்தைப் பெறுகிறது என்பதும். கலைஞனின் மூளையும் இந்த வலையில் ஒரு கண்ணிதான்.

இதை முழுமையான மினிமலிச ஓவியங் கள் என்று மட்டுமே சொல்ல முடியாது. 1960-களில் ஆரம்பித்த மினிமலிச கலை இயக்கங்கள் பெரும்பாலும் அரூபத் தன்மையைத் தம் காட்சி மொழியாகக் கொண்டவை. ஆனால் என்னுடைய இந்த ஓவியங்கள் திட்டவட்டமான அரசியல் பார்வையும், மக்களிடம் நேரடியாகப் பேசும் தன்மையும் கொண்டிருக்கின்றன. இந்த வகையில் இதை மினிமலிசத்தின் பாணியைக் கொண்ட பாப் ஆர்ட் என்றே சொல்

வேன். அதனால்தான் மிகத் தீவிரமான விஷயங்களைப் பேசும்போதுகூட நேரெதிராக மிகக் கொண்டாட்டமான வண்ணங்களைப் பயன்படுத்துகிறேன். இது ஒரு சுவராசியமான முரணை அளிக்கிறது. “Less is More” என்கிற தலைப்பில் தினமும் ஒரு ஓவியத்தை ஃபேஸ்புக்கில் வெளியிடுகிறேன். கண்ணாடியில் தங்கள் முகம் பார்க்கும் சுவாரசியத்துடன் அதற்கு நண்பர்கள் அளிக்கும் வரவேற்பு உற்சாகமளிக்கிறது.

தொடர்புக்கு: ensanthosh@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in