நூல் நயம்: அசல் மனிதர்களின் கதை

நூல் நயம்: அசல் மனிதர்களின் கதை
Updated on
2 min read

கா.ரபீக் ராஜாவின் ‘ஐஸ் பிரியாணி' சிறுகதைத் தொகுப்பின் கதைமாந்தர்கள் நாம் பார்க்கும், பழகும், நம்மைச் சுற்றி வாழும் மனிதர்கள்தாம். அதனால் கதைகளுடன் எளிதாக ஒன்றிணைய முடிகிறது. நிலப் பத்திரப் பதிவு அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர், லஞ்சம் வாங்கிக்கொண்டு சில காரியங்களைச் செய்துகொடுப்பவராக இருந்தாலும், தன் மருமகனின் உறவினர்களுக்குச் செய்யும்போது அலுத்துக்கொள்கிறார். அந்தக் காரியங்களுக்கு அவரால் லஞ்சமும் வாங்க முடிவதில்லை. வேலைக்கே உலை வைக்கக்கூடிய ஆபத்து நிறைந்ததாகவும் இந்தப் பணி இருக்கிறது.

மகளின் வாழ்க்கையை நினைத்து அனைத்தையும் செய்யும் அவரைப் பற்றிய கதை நேர்த்தியாக இருக்கிறது. வீடற்ற ஒரு ஜோடி, தனிமையைத் தேடிச் செல்லும் கதையில், அந்த வாழ்க்கையிலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் காட்டியிருக்கிறது. ஒரு துண்டு நிலமாவது சொந்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர்கள், அந்த நிலத்துக்காகப் படும்பாட்டை ‘ஊருக்கு அப்பால்’ கதை அழுத்தமாகச் சொல்கிறது. பெரிய திருப்பமோ அதிர்ச்சியோ இல்லாத முடிவுகளாக இருந்தாலும் கா.ரபீக் ராஜாவின் எழுத்து, கதைகளை வேகமாக வாசிக்க வைப்பதோடு, சில நாள்களுக்கு நம் நினைவில் தங்கிவிடவும் வைத்துவிடுகிறது. - எஸ். சுஜாதா

இந்திய இஸ்லாம்: இஸ்லாமுக்கும் இஸ்லாமியருக்கும் எதிரான வலுமிக்க சித்தாந்த அரசியல் இயக்கம் இந்தியா போன்று உலகில் எந்த நாட்டிலும் பரவியது கிடையாது. ஆதலால் இஸ்லாம், இஸ்லாமிய வளர்ச்சி வரலாறு, முஸ்லிம் இந்தியர் பற்றிய அனைத்து அம்சங்களையும் ஒரே நூலில் நெறிபிறழாது முன்வைக்க வேண்டும் என்கிற டி.ஞானையாவின் ஆர்வத்தின் விளைவாக இந்நூல் உருவாகியிருக்கிறது. 55 நாடுகளில் அறுதிப் பெரும்பான்மை, மேலும் 55 நாடுகளில் கணிசமான சிறுபான்மை என்ற அளவில் ஒரே நூற்றாண்டில் உலகளவில் பரவிய மதமான இஸ்லாம் பற்றி இஸ்லாமிய, இதர நாடுகளுக்கும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்த நீண்ட அனுபவம் கொண்ட ஞானையா இந்நூலை எழுதியுள்ளார். வரலாற்று மாணவர்களுக்கும் வரலாற்றின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கும் சிறந்த பார்வை நூலாக இது அமைந்துள்ளது. - முகில்

உணர்வுகளின் தோரணங்கள்: எழுத்தைக் கொண்டாடும் ஓர் ஆளுமையாக அறியப்படுகிறவர் மலையாள/ஆங்கில எழுத்தாளர் கமலாதாஸ். கவிஞர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர் எனப் பல வடிவங்களில் கமலாதாஸின் எழுத்துகள், காதலையும் நவீனத்தையும் பேசியவை. கமலாதாஸ் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய நான்கு குறுநாவல்களின் தொகுப்பு இது. ‘ருக்மணிக்கு ஒரு பொம்மைக் குழந்தை’, ‘சந்தன மரங்கள்’, ‘என்றென்றும் தாரா’, ‘தொலைந்து போன நீலாம்பரி’ ஆகிய நான்கு குறுநாவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

சமூக ஒழுக்கம் என்னும் கற்பிதத்தைத் தன் திடம்மிக்க எழுத்தால் கேள்விக்கு உள்ளாக்கியவர் கமலாதாஸ். அந்தப் பண்பை இந்தத் தொகுப்பிலும் காண முடிகிறது. இந்தத் தொகுப்பின் நான்கு கதைகளிலும் கமலாதாஸின் தனித்துவமான எழுத்தும் உலகமும் வெளிப்பட்டுள்ளன. குறிப்பாகக் காதல், கதாபாத்திரங்களின் வழியே அழகாக வெளிப்பட்டுள்ளது. கமலாதாஸின் கதைகள் விடுதலையையும் காதலையும் போதிப்பவை. நிர்மால்யாவின் மொழிபெயர்ப்பு, வாசிப்புத் தடங்கலின்றி வெளிப்பட்டுள்ளது. - எல்னாரா

அயல்மொழி நூலகம்: திகைக்க வைக்கும் ஆய்வு நூல்: நுகர்வுப் பண்பாட்டின் தவிர்க்க முடியாத பின்விளைவுகளில் ஒன்றான கழிவுப் பிரச்சினை, நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. சுற்றுச்சூழல், சுகாதாரம் - இன்னும் ஏன் பொருளாதாரம் எனப் பல அம்சங்களில் தாக்கம் செலுத்தக் கூடிய உலகளாவிய கழிவுத் தொழில் பற்றிய அதிர்ச்சியூட்டும் பயணத்துக்குப் பத்திரிகையாளர் ஆலிவர் ஃபிராங்க்ளின்-வாலிஸ் இந்நூலில் அழைத்துச் சென்றுள்ளார். நுகர்வுக்குப் பிறகு நாம் தூக்கி எறியும் பொருள்கள் எங்கு போகின்றன, அது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பது பற்றிய திகைக்கவைக்கும் ஆய்வாக வெளியாகியிருக்கும் இந்நூல், தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுப் பரவலாக வாசிக்கப்பட வேண்டும். - பிரசாத்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in