பபாசி தேர்தல் | நூல் வெளி: விமர்சனங்களை உள்வாங்கிப் பலம் பெறுமா பதிப்புத் துறை?

ஆர்.எஸ்.சண்முகம், சேது சொக்கலிங்கம், சுப்பையா முத்துக்குமாரசாமி
ஆர்.எஸ்.சண்முகம், சேது சொக்கலிங்கம், சுப்பையா முத்துக்குமாரசாமி
Updated on
3 min read

இந்திய அளவில் நடைபெறும் இரண்டாவது மிகப் பெரிய புத்தகக் காட்சி, சென்னை புத்தகக் காட்சி. இந்தப் புத்தகக் காட்சியை ஆண்டுதோறும் ஒருங்கிணைக்கும் அமைப்பு என்கிற வகையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கமும் (பபாசி) பெரிய அளவில் கவனம்பெற்றது. 1977ஆம் ஆண்டு தொடங்கி, கடந்த ஆண்டு வரை 46 ஆண்டுகளாக இந்தப் புத்தகக் காட்சியை வெற்றிகரமாக பபாசி நடத்திவருகிறது. 22 அரங்குகளில் தொடங்கி கடந்த ஆண்டு 1,000 அரங்குகள் வரை அமைக்கப்பட்டன. வர்த்தகரீதியிலும் பண்பாட்டுரீதியிலும் முக்கியத்துவம் மிக்க இந்த நிகழ்ச்சியைப் பபாசி வெற்றிகரமாக ஒருங்கிணைத்துவருகிறது.

தமிழ்நாடு அரசும் இந்தப் புத்தகக் காட்சிக்கு நிதி உதவி அளித்துவருகிறது. 2023 பன்னாட்டுப் புத்தகக் காட்சியையும் தமிழ்நாடு அரசுடன் பபாசி இணைந்து நடத்தியது. மாவட்டந்தோறும் புத்தகக் காட்சிகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்தும் வாய்ப்பும் பபாசிக்குக் கிடைத்துள்ளது. இன்று புத்தகக் காட்சி ஒருங்கிணைப்பு என்பதையும் தாண்டிப் பல விதங்களின் பதிப்புத் துறையில் பபாசி செயல்பட்டுவருகிறது. முக்கியத்துவம் மிக்க இந்த அமைப்பின் தேர்தல் கவனத்துக்கு உரிய ஒன்று. தேர்தல் இல்லாமல் ஒருமுகத் தீர்மானத்தின் அடிப்படையில், தொடக்கக் காலத்தில் பபாசிக்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுவந்தனர். பிறகு, தேர்தல் நடைமுறை நடைமுறைக்கு வந்தது.

இந்த முறை தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. கவிதா பதிப்பகம் சேது சொக்கலிங்கம்,  செண்பகா பதிப்பகம் ஆர்.எஸ்.சண்முகம், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சுப்பையா முத்துக்குமாரசாமி ஆகிய மூவர் தலைமையில் அணிகள் தேர்தலை எதிர்கொள்கின்றன. கவிதா சேது சொக்கலிங்கம் அணியில் பாரதி புத்தகாலயம் நாகராஜன், செண்பகா பதிப்பகம் அணியில் நக்கீரன் கோபால், முல்லைப் பதிப்பகம் பழனி ஆகியோர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர். பதிப்பாளர்களின் நீண்ட காலக் கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றும் வாக்குறுதிகளுடன் மூன்று அணிகளும் வாக்குச் சேகரித்துவருகின்றன.

விமர்சனங்கள்: பபாசி முன்னாள் தலைவரும் ‘கண்ணதாசன் பதிப்பக’ உரிமையாளருமான காந்தி கண்ணதாசன் கடந்த 10 வருடங்களாகவே பபாசியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்: “39 வருடங்களாகப் பபாசியில் இருக்கிறேன். அதன் தொடக்க காலத் தலைவர்கள், அடுத்த தலைமுறையினர் இதற்குள் வர வேண்டும் எனத் தேடிவந்து எங்களை உறுப்பினர் ஆக்கினர். இன்றைக்குப் புத்தகக் காட்சி இந்த அளவு வளர்ச்சியடைந்திருப்பதில் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இருக்கிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாகவே பபாசியின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. இனி வரக் கூடிய தலைவரும் நிர்வாகிகளும் இந்தக் குறையைப் போக்கித் திறம்படச் செயல்பட வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு”.

பதிப்பாளர்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட ஒரு சங்கமாக இருந்தாலும், புத்தகம் என்கிற அம்சத்தில் அது சமூக முக்கியத்துவம் மிக்க அமைப்பாகவும் பபாசி இருக்கிறது. அதனால், தமிழ்நாடு அரசு வாசிப்பைத் தீவிரப்படுத்தும் நோக்கில் பபாசியுடன் இணைந்து புத்தகக் காட்சிகளை, புத்தகக் கொள்முதலை நடத்திவருகிறது. இந்த நிலையில், பபாசியின் நடவடிக்கைகள் மீது பல குற்றச்சாட்டுகள் பதிப்பாளர்கள் சார்பில் வைக்கப்படுகின்றன. “இப்போதுள்ள அரசு பதிப்புத் துறைக்குப் பல உதவிகளைச் செய்துவருகிறது. இத்துறை மேம்பட இன்னும் பல உதவிகளைச் செய்ய, இந்த அரசு தயாராகவும் இருக்கிறது. ஆனால், அரசிடம் பதிப்பாளர்களின் பிரச்சினைகளை உரிய கவனத்துடன் கொண்டுசெல்லும் தலைமை இப்போது பபாசியில் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தப் போதாமை பபாசியில் நிலவுகிறது” என்றார் ‘சிக்ஸ்த் சென்ஸ்’ பதிப்பாளர் புகழேந்தி.

நீளும் கோரிக்கைகள்: மு.கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டத்தில் சென்னையில் நிரந்தரமாகப் புத்தகப் பூங்கா அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். சென்னையில் ஒரு வளாகத்தில் பதிப்பாளர்களுக்கு ஒரு கடை ஒதுக்கப்படும் வாய்ப்பு இந்தத் திட்டத்தில் உண்டு. ஆனால், இதை நிறைவேற்ற அரசிடம் இந்தத் தலைமை வலியுறுத்தவில்லை என்கிற ஆதங்கத்தைப் பெரும்பாலான பதிப்பாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். சென்ற ஆண்டு நடைபெற்ற பன்னாட்டுப் புத்தகக் காட்சியை தமிழக அரசு, பபாசியுடன் இணைந்து நடத்தியது. ஆனால், சரியான ஒத்துழைப்பு பபாசி நிர்வாகத் தரப்பிலிருந்து அளிக்கப்படவில்லை என அரசுத் துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. அதனால் இந்தாண்டு பன்னாட்டுப் புத்தகக் காட்சியை அரசே தனியாக நடத்தத் தீர்மானித்துள்ளது. இதெல்லாம் பதிப்புத் துறைக்கு இழப்புதான்.

பபாசியின் செயல்பாடுகள் துறைரீதியிலான நலன்களுக்காகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் ‘உணவு உலகம்’ பதிப்பாளர் மெய்யப்பன்: “சர்வதேசத் தரத்தை ஒப்பிடும்போது நமது பதிப்பாளர்கள் பலர் இன்னும் தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், அதற்கெல்லாம் பதிப்பாளர் சங்கம் என்கிற அடிப்படையில், பபாசி சொல்லிக்கொள்ளும் வகையில் எந்தச் செயலையும் முன்னெடுக்கவில்லை. பதிப்பகத் துறை சார்ந்த காகித விலை, அச்சு போன்ற அம்சங்கள் அதிகமாக இருக்கும் நிலையில், காகிதக் கொள்முதல், அச்சுக் கூடம் எனப் பலவற்றுக்கும் ஓர் ஒருங்கிணைப்பை, பரிந்துரையை ஒரு சங்கம் என்கிற வகையில் பபாசி செய்யலாம். ஆனால், அதெல்லாம் பரிந்துரையில்கூட இடம்பெறுவதில்லை என்பது வருத்தத்துக்குரியது” எனத் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார்.

புதியவர்களுக்கு வாய்ப்பில்லை: பபாசி அடிப்படையில் பதிப்புத் துறையில் உள்ள அனைவருக்கும் பொதுவானதுதான். ஆனால், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு பபாசி பெரும்பாலும் பாராமுகம் காட்டுகிறது என்கிறார் ‘யாவரும்’ பதிப்பாளர் ஜீவ கரிகாலன்: “பபாசி உறுப்பினர்கள் பலரும் நூலக ஆணைக்காக மட்டுமே புத்தகங்கள் பதிப்பிப்பவர்களாக இருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் புத்தகக் காட்சி அரங்கைத் தங்கள் பெயரில் எடுத்து, வேறு நிறுவனங்களுக்கு உள்வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கிறார்கள். உறுப்பினர் இல்லை என்கிற காரணத்தால் நடப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் பதிப்பாளர்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதையெல்லாம் புதிய நிர்வாகிகள் கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும்” எனத் தன் தரப்பை முன்வைக்கிறார். மேலும், பட்டியல் சாதியினர், பழங்குடி வகுப்பினர், திருநர் சமூகத்தைச் சேர்ந்த பதிப்பாளர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் பபாசியில் தரப்படுவதில்லை என ‘வாய்ஸ் ஆஃப் புத்தா’ பதிப்பாளர் அ.ப.காரல் மார்க்ஸ் சித்தார்த்தர் தன் தரப்புக் கருத்தை முன்வைக்கிறார்.

தமிழக அரசு, புத்தகக் காட்சிகள் நடத்த ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்கிறது. அது மட்டுமல்லாமல், விளம்பரங்கள் வழியாகவும் பபாசிக்கு வருவாய் கிடைக்கிறது. இதுபோக புத்தக அரங்கு, உணவகம், நொறுக்குத்தீனிக் கடைகள் அமைக்க வாடகை, வாசகர்களிடம் நுழைவுக் கட்டணம் ஆகியவற்றை பபாசி வசூலிக்கிறது. ஆனால், இந்த வருவாய் குறித்த வெளிப்படைத்தன்மை இல்லை என்பது பதிப்பாளர்கள் பலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. மேலும், மாவட்டப் புத்தக் காட்சிகளை ஒருங்கிணைப்பதில் ஒழுங்கையும் பபாசி பின்பற்றுவதில்லை என்றும் கூறப்படுகிறது. பக்கத்துப் பக்கத்து மாவட்டங்களில் அடுத்தடுத்த புத்தகக் காட்சிகள் நடத்தப்படுவதால் வாடகைக்கு எடுத்து அரங்கு அமைக்கும் பதிப்பாளர்கள் பெருமளவில் நஷ்டமடைகிறார்கள்.

“நூலக ஆணை கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகப் பல பதிப்பாளர்களுக்குக் கிடைக்கவில்லை. நூலக ஆணைதான் பல பதிப்பாளர்களின் தொடக்க காலச் செயல்பாட்டுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். ஆனால், அது முறையாக வழங்கப்படும் கோரிக்கையை பபாசி முன்வைக்க வேண்டும். இந்த ஆண்டு மூன்று அணிகள் தனித் தனி விஷயங்களை வலியுறுத்திப் போட்டியிடுகின்றன. ஆனால், அவை எல்லாம் பொது நன்மைக்காக இருக்க வேண்டும் என்பதுதான் என் எதிர்ப்பார்ப்பு” என ‘சந்தியா’ பதிப்பாளர் நடராஜன் தெரிவிக்கிறார். அவர் சொல்வதுபோல் தேர்ந்தெடுக்கப்படும் புதிய நிர்வாகிகள் புத்தகக் காட்சிகள், சங்கம் என்பதைத் தாண்டி துறைசார் வளர்ச்சிக்காகச் செயல்பட வேண்டும். அந்த நடவடிக்கையே நமது சமூகத்தின் வாசிப்பையும் வளப்படுத்தும்.

- தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in