Published : 20 Jan 2018 11:21 AM
Last Updated : 20 Jan 2018 11:21 AM

ரூமிக்கு ஒரு தமிழ் வரவேற்பு

லகின் கவிதைப் பேரிலக்கியங்களுள் பாரசீக சூஃபி ஞானி ஜலாலுத்தீன் ரூமியின் ‘மஸ்னவி’யும் ஒன்று. 27,000 வரிகளில் ஆறு பாகங்களாக வெளியான கவிதை பொக்கிஷம் இது. கி.பி. 1258-ல் எழுதத் தொடங்கி 1273-ம் ஆண்டு தனது மரணம் வரை ரூமி எழுதிய நூல் ‘மஸ்னவி’. மிகப் பெரிய நூலாக இருப்பதால் பகுதி பகுதியான மொழிபெயர்ப்புகள் உலக மொழிகளில் ஏராளமாக வெளியாகியிருக்கின்றன. கடந்த நூற்றாண்டின் முதல் பாதியில் ஆர்.ஏ.நிக்கல்ஸன் என்ற ஆங்கிலேயரின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் முழுமையாக வெளியான ‘மஸ்னவி’ மிகவும் புகழ்பெற்றது. தமிழிலும், மஸ்னவியின் தேர்ந்தெடுத்த பகுதிகளை ஆர்.பி.எம். கனி மொழிபெயர்த்திருக்கிறார். தற்போது நரியம்பட்டு எம்.ஏ. ஸலாம், ரூமியின் ‘மஸ்னவி’யைத் தமிழில் முழுமையாகக் கொண்டுவரும் பெருமுயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். 2009-ம் ஆண்டு தொடங்கிய மொழிபெயர்ப்பு இது. இதுவரை 4 தொகுதிகள் ஃபஹீமிய்யா பப்ளிஷர்ஸால் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஐந்தாவது தொகுதி இன்று சென்னையில் நடக்கும் சூஃபித்துவ மாநாட்டில் வெளியிடப்படுகிறது. 6-வது தொகுதி விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தத் தொகுதிகளில் பாரசீக மூலம், உருது வடிவம், தமிழில் பாரசீக ஒலிபெயர்ப்பு, தமிழ் மொழிபெயர்ப்பு என்று பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

திருவல்லிக்கேணி ஜாம் பஜாரில் உள்ள எம்.எஸ். மஹாலில் இந்த நிகழ்ச்சி இன்று காலை 9-மணி தொடங்கில் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. ‘மஸ்னவி’ வெளியீட்டை சூஃபி இசைக்கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு கொண்டாடவிருக்கிறார்கள். ரூமியின் ‘மஸ்னவி’ பெருந்தொகுப்பு தமிழ் இலக்கிய உலகம் கொண்டாட வேண்டிய முயற்சி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x