Published : 20 Nov 2023 06:07 AM
Last Updated : 20 Nov 2023 06:07 AM

‘இந்து தமிழ் திசை’, வர்த்தமானன் பதிப்பகம் சார்பில் திருச்சியில் வாசிப்புத் திருவிழா

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் வர்த்தமானன் பதிப்பகம் சார்பில் திருச்சியில் நடைபெற்ற வாசிப்புத் திருவிழாவில் பங்கேற்ற வாசகர்கள்.படங்கள்: ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: வாசிப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை துணைஇயக்குநர் மு.சிவகுமார் வலியுறுத்தினார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் வர்த்தமானன் பதிப்பகம் சார்பில், வாசிப்புத் திருவிழா திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநர் மு.சிவகுமார் பேசியது:

மக்களின் மனநிலை அன்றாட வாழ்வை நடத்துவதில் தான் உள்ளது. அதைக் கடந்து சமூக சிந்தனை இல்லை. இந்த மனநிலையை மாற்ற வாசிப்பு தான் உதவும். ஆரோக்கியமான மனநிலைக்கு சிலர் தியானம் செய்கின்றனர். ஆனால் புத்தகங்கள் வாசிப்பதும் மிகப்பெரிய தியானம் தான் என்பதை நாம் உணர வேண்டும். வாசிப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளை படிக்க வைக்க பெற்றோர் சிறுசிறு முயற்சிகளை எடுக்க வேண்டும்.

ஒரு நல்ல புத்தகம் படித்த உணர்வை இந்து தமிழ் திசைநாளிதழ் வழங்குகிறது. வாசிப்பதால் மட்டுமே ஒரு விஷயத்தைகோர்வையாக சொல்லும் திறன்,உள் வாங்கும் திறன், புரிந்து கொள்ளும் திறன் கிடைக்கும். வாசிப்பு அனுபவம் உள்ள ஆசிரியர்களால் தான் மாணவர்களை நல்வழிப்படுத்த முடியும்.

தேவையற்ற ரீல்ஸ், வீடியோக்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைக்கும் இன்றைய இளைய தலைமுறையினர், நூல் வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக நூல்கள் குறித்த அறிமுகங்களை ஸ்டேட்டஸாக வைப்பதாலும், நூல்களை பரிசளிப்பதாலும் இச்சமூகத்தை அறிவுசார் சமூகமாக மாற்ற முடியும் என்றார்.

கவிஞர் நந்தலாலா பேசியது: எனக்கு எல்லாம் தெரியும் என்பவனுக்கு, உனக்கு ஒன்றும் தெரியாது என்பதை வாசிப்பால் தான் உணர்த்த முடியும். கி.பி 105-ல் சீனாவைச் சேர்ந்த சாய்லூன் என்ற திருநங்கை தான் காகிதத்தை கண்டறிந்தார். காகிதம் வந்த பிறகு தான் சீனாவில் வளம் கொழிக்கத் தொடங்கியது. அதன்பின், 600 ஆண்டுகள் கழித்து காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பம் தெரிந்த சீனர் ஒருவரை அரேபியர்கள் கடத்திச் சென்று அதை செயல்படுத்தினர். கூட்டன்பெர்க் அச்சு எந்திரத்தை கண்டறிந்த பின், 15-ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பா வளமிக்க நாடாக மாறத் தொடங்கியது.

ஆனால் அதற்கெல்லாம் முன்பே தமிழர்கள் பனை ஓலையில் எழுதும் முறையை கண்டறிந்து வெற்றிகரமாக செயல்படுத்தினர். காகிதம் மற்றும் அச்சுத் தொழில்நுட்பத்துக்குப் பிறகு தான் வாசிப்பு பழக்கம் விரிவடைந்தது. உலகின் தலைசிறந்த போராட்டங்கள் வாசிப்பின் மூலம் தான் வெற்றிகரமாக நிகழ்ந்துள்ளன என்றார்.

2% மக்களே சிந்திக்கின்றனர்: கல்வியாளரும், எஸ்ஆர்வி பள்ளி தலைமை செயல் அலுவலருமான க.துளசிதாசன் பேசியது: உலகைப் புரிந்து கொள்ள வாசிப்பு மிக முக்கியம். புத்தகம் படிக்கத் தொடங்கியதும் சாதாரண மனிதன் வாசகனாகவும், பின்னர் தீவிர வாசகனாகவும், அதன்பின் எழுத்தாளனாகவும் பரிணமிக்கிறான். 120 கோடி மக்களில் வெறும் 2 சதவீதம் மக்கள் தான் சிந்திக்கின்றனர். அவர்கள் தான் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆள்கின்றனர்.

தமிழகத்தில் 5.5 லட்சம் பள்ளி ஆசிரியர்கள், ஒரு லட்சம் கல்லூரி ஆசிரியர்கள் என 6.5 லட்சம் ஆசிரியர்கள் இருந்தாலும், அதில் 1,000 பேருக்கு மட்டும் தான் வாசிப்புப் பழக்கம் உள்ளது. அனைவரும் வாசிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தால், இந்த சமூகம் மிகப் பெரும் முன்னேற்றமடையும் என்றார்.

கற்பனைத் திறனை அதிகரிக்கும்: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதன்மை உதவி ஆசிரியர் ஆர்.ஜெயக்குமார் பேசியது:இன்றைய டிஜிட்டல் யுகத்தில் 10 நிமிடம் ஓய்வுகிடைத்தாலும் செல்போன் பார்க்கிறோம். சமூக வலைதளங்களில் 90 சதவீதம் பொய் செய்திகள் தான் வருகின்றன. கதை கேட்டு வளர்ந்ததலைமுறை நாம்.

பாட்டிகள் குழந்தைகளுக்கு சொல்லும் கதைகள் மூலம்கற்பனைத் திறன் அதிகரிக்கும்.அந்த கற்பனை ஓட்டத்தைதருவது வாசிப்புப் பழக்கம்தான் என்றார்.

முன்னதாக ‘இந்து தமிழ் திசைநாளிதழ்’ திருச்சி பதிப்பு செய்தி ஆசிரியர் பெ.ராஜ்குமார் வரவேற்றார். பொது மேலாளர் டி.ராஜ்குமார்நன்றி கூறினார். நிகழ்ச்சியை முதுநிலை உதவி ஆசிரியர் முருகேசன் தொகுத்து வழங்கினார்.

ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி முதல்வர் பி.கெஜலட்சுமி, இந்து தமிழ் நாளிதழ் விற்பனை பிரிவு சென்னை மண்டல பொது மேலாளர் வி.சிவக்குமார், விற்பனை பிரிவுமதுரை மண்டல முதுநிலை பொதுமேலாளர் எஸ்.வெங்கடசுப்பிரமணியன் மற்றும் திரளான வாசகர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x