

இளம் இந்தியக் கவிஞர்களின் பன்மொழிக் கவிதைகளைச் கொண்ட தொகுப்பாக வந்துள்ளது ‘குலவை'. தொகுப்பாசிரியர் கவிஞர் நேசமித்ரன். ஒற்றைத்துவத்தை மையமாக்கித் தன் செயல்பாடுகளை நகர்த்திவரும் அரசுக்கு எதிரான கலகமாகவும் குலவையைப் பார்க்கலாம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் தாய்மொழிகளுடைய தனித்துவத்தை ஒருங்கிணைத்திருக்கிறது இத்தொகுப்பு. மரக்கட்டையில் ஈரம் ஏறினால் துளிர்ப்புகளை உருவாக்கும். இத்தொகுப்பின் கவிதைகளுக்கும் அப்படியானதொரு தன்மை உண்டு. மொழிக்கு மூன்று நான்கு கவிதைகள் என்கிறபோதும் அம்மாநிலத்தின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை முறைக் கூறுகளையும் உள்ளடக்கிய குரலாகவும் காட்சிப்படுத்திவிடுவது சிறப்பு.
கவிதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பதிலும் உள்ள மெனக்கெடலின் விளைவு வாசிப்பவர்களின் மனங்களை வென்றெடுக்கும். மாயைகள் நிறைந்த அதிகாரத்தின் பூச்சுகளை அழித்தொழிக்கும் தன்மை கொண்ட இத்தொகுப்பின் கவிதைகளை அசதா, விருட்சன், வே.நி.சூர்யா, பெரு.விஷ்ணுகுமார், எம்.கோபாலகிருஷ்ணன், மலர்விழி அன்புவேல், பாலகுமார் விஜயராமன், கார்த்திகை பாண்டியன் உள்ளிட்டோர் மொழிபெயர்த்துள்ளனர். இத்தொகுப்பின் கவிதைகள் நம்முள் இலையாக விழுந்து, இயல்பைக் கலைத்து துடிப்பை உருவாக்கும். - ந.பெரியசாமி
குலவை
தொகுப்பாசிரியர்: நேசமித்ரன்
வலசை பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9677250213
நூல் நயம்: படங்கள் வழி பாரதி : தமிழின் நவீனத்துவத்துக்கு வித்திட்டவர் பாரதியார். நவீன கவிதையாக இன்று மலர்ந்திருக்கும் புதிய கவிதை வடிவத்தை ‘இவ்வுலகம் இனிது’ எனத் தொடங்கிவைத்தவர். உரைநடைக் கதை, பத்தி எழுத்து எனப் பலவற்றுக்கும் முதன்மை அவர்தான். பாரதியின் வாழ்க்கையை இளம் தலைமுறை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதன் வழி புதிய உத்வேகம் சிறார்களுக்குக் கிடைக்கும். பாரதி குறித்துக் கேள்விப்பட்ட, கேள்விப்படாத கதைகள் சுவாரசியமான படக்கதைகளாக இதில் தொகுக்கப்பட்டுள்ளன. அ.செந்தமிழ்ச்செல்வன், கோ.பாரதி, ரா.அப்சரா, வெங்கட், க.நற்றமிழன் ஆகியோர் இந்தச் சித்திரக் கதைக்கான ஓவியங்களை வரைந்துள்ளனர். அர்பத்நட் கம்பெனி திவாலான விஷயத்தைப் பாரதி தன் பத்திரிகை எழுத்துவழி அம்பலப்படுத்தியது சிறார்களுக்குப் புதிய அறிவாக இருக்கும். சித்திரக் கதை என்றவுடன் ‘பிறந்து, வளர்ந்து, கவிதை எழுதினார்' என்றில்லாமல் வரலாற்றையும் சொல்லியிருக்கும் விதம் பாராட்டத்தக்கது. சிறார் நூல் எனும்போது விலை சற்று குறைவாக வைக்கப்பட்டிருக்கலாம். - விபின்
மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு
பொதுப் பதிப்பாசிரியர்: செ.சரவணன் இ.ஆ.ப.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
விலை: ரூ.800
தொடர்புக்கு: 044 22523992
மெக்காலே கல்வியின் வரலாறு: மெக்காலே இறந்து சுமார் 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால், இந்தியச் சமூகத்தில் அவர் அறிமுகப்படுத்திய கல்வி முறை மீதான விமர்சனங்கள் நின்றபாடில்லை. இந்தச் சூழலில் இரா.சுப்பிரமணியின் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நூல் வெறுமனே மெக்காலேவைப் பற்றி பேசும் நூல் அல்ல. ஆங்கிலேயே அதிகாரியான மெக்காலே இந்தியாவுக்கு வந்தது முதல் இந்தியாவில் ஆங்கிலக் கல்வி முறையை அறிமுகப்படுத்தியது, மெக்காலே கல்வியின் உள்ளீடுகள் எனப் பல அம்சங்களையும் அலசுகிறது. திண்ணைப் பள்ளிக்கூடக் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒரு கல்வி முறை என்கிற வகையில் இந்தியக் கல்வி முறையின் நகர்வுகளை அறிந்துகொள்ள உதவும் நூல் இது. அது மட்டுமல்ல, அடிப்படையில் வழக்கறிஞரான மெக்காலே இந்தியத் தண்டனைச் சட்டத்தை உருவாக்கியது பற்றியும் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. - மிது
மெக்காலே - பழமைவாதக் கல்வியின் பகைவன்
இரா.சுப்பிரமணி
விலை ரூ. 180
சாளரம் பதிப்பகம், சென்னை
தொலைபேசி எண்: 82483 38118
கதை சொல்லும் நாடகம்: காலம் பொன் போன்றது என்பார்கள். இன்றைய காலத்தின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் காலத்தை எப்படியெல்லாம் வீணாக்குகின்றன என்பதை இந்த நாடக நூலின் முதல் கதை எளிமையாகச் சொல்கிறது. சிறார்களுக்குப் புரியும்வகையிலும் சுவாரசியமூட்டும் வகையிலும் எளிய விவரிப்பில் கதை சொல்லப்பட்டுள்ளது. பொதுவாகக் குழந்தைகள் தீயவற்றைச் செய்வதுபோலவும் அதைப் பெரியவர்கள் கண்டிப்பதுபோலவும்தான் அதிகமாகக் கதைகள் எழுதப்படுகின்றன. மாறாக இந்தக் கதையில் அப்பாவும் அண்ணனும் இணையத்துக்கு அடிமையாகிக் கிடக்க, குழந்தைகள் ஓவியம் வரைவது போன்றவற்றால் அழகாக நாள்களைச் செலவழிக்கிறார்கள். கதையை மட்டுமல்லாது நாடகம் என்கிற கலைவடிவத்தையும் இதன் வழி சிறார்களுக்கு அறிமுகப்படுத்துகிறது இந்நூல். நாடகத்துக்கான தயாரிப்புகள், கதாபாத்திரத் தேர்வு, நிகழ்த்தும் முறை எனப் பல அம்சங்களை இந்த நூல் விளக்குகிறது. - குமரன்
காலத்திருடன்
சந்திரமோகன்
வம்சி பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9445870995
விமர்சனங்களை வைக்கும் கதைகள்: தமிழில் சில புதிய கருதுகோள்களை முன்வைத்து இடதுசாரிப் பார்வையுடன் எழதிவருபவர் இரா.முருகவேள். ‘சர்ரியல் இரவு’ முருகவேளின் முதல் சிறுகதைத் தொகுப்பு . நவீன மொழி, குத்தலும் நக்கலும் நிரம்பிய உரையாடல்கள், அமைப்புகள் மீதான கூர்மையான விமர்சனங்கள் ஆகிய அம்சங்கள் கொண்ட இருபது கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. நம்ப முடியாத கனவுவெளி போல விரியும் தனிச் சிறப்பான சில தருணங்கள் சர்ரியல் தன்மை கொண்டவை. அத்தகைய சில அபூர்வமான தருணங்கள் இக்கதைகளில் நுட்பமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. ‘தளையறுத்தல்’ கதையில் ஒரு மர்மமான இரவில் சிபி என்கிற காளை மாட்டுக்கும் அதைத் தன் நண்பனைப் போலக் கருதிக் கொண்டிருக்கும் உரிமையாளருக்கும் நடக்கும் மூர்க்கமான போராட்டம் அதிரவைக்கும் மொழியில் விவரிக்கப்பட்டுள்ளது. சிபி, உண்மையில் மாடுதானா? அல்லது விடுதலை வேட்கையின் குறியீடா என்கிற கேள்வியை இந்தக் கதை எழுப்புகிறது.
‘உலகம் திருச்செங்கோட்டை ஆய்வு செய்கிறது’ கதையில் போர்வெல் ரிக் தொழிலில், அந்தப் பகுதி மக்கள் ஈட்டும் செல்வத்தை உலக வணிகச் சங்கிலியில் இணைப்பதற்கான வழிவகைகளை ஆராய ஒரு பிரெஞ்சு நிறுவனம் வருகிறது. அது தன் தலைமை அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்கும் அறிக்கையில், ஓர் எதிர்பாராத வெடிகுண்டு ஒளிந்திருக்கிறது! ‘மரபெழில் வாய்ந்த மயானம்' கோவிட் மரணங்களையும், தனியார் மயான நிர்வாகத்துக்கும் அரசுக்கும் ஏற்படும் முரணையும், இடைவிடாமல் எரிக்கப்படும் சடலங்கள் சுற்றுப் பகுதிகளில் ஏற்படுத்தும் களேபரத்தையும் பேசுகிறது. - கமலாலயன்
சர்ரியல் இரவு
இரா.முருகவேள்
ஐம்பொழில் பதிப்பகம்
விலை: ரூ.260
தொடர்புக்கு: 94430 14445
இடஒதுக்கீடு நன்மையா? - பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு மிக முக்கியமான பிரச்சினை என்றாலும், அது மக்கள் மத்தியில் உரிய கவனம் பெறவில்லை. இந்த இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் 2022 நவம்பர் 7 அன்று தீர்ப்பளித்துவிட்ட நிலையில், இந்த இடஒதுக்கீட்டினால் விளையக்கூடிய தீங்குகளை விளக்கும் வகையில் அரசியல் தலைவர்கள், சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் எழுதிய கட்டுரைகளும் அரசியல் தலைவர்களின் அறிக்கைகளும் நூலில் இடம்பெற்றுள்ளன. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களின் வாதங்களை முன்வைக்கும், தீர்ப்பைக் கேள்விக்கு உள்படுத்தி விவாதிக்கும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
நீதிபதி சந்துரு, நீதிபதி அரி பரந்தாமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பி.எஸ்.கிருஷ்ணன், காஞ்ச அய்லய்யா, யோகேந்திர யாதவ், பிரஷாந்த் பூஷண் எனத் தமிழ்நாட்டிலும் தேசிய அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஆளுமைகளின் கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளன. சாதிவாரி இடஒதுக்கீடு, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றின் வரலாற்றை அறிமுகப்படுத்தும் விதமாக சு.விஜயபாஸ்கர் எழுதியுள்ள தொடக்கக் கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை. இடஒதுக்கீடு குறித்த சரியான ஆழமான புரிதலைப் பெற வாசிக்கப்பட வேண்டிய நூல் இது. - நந்தன்
உயர்ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு சரியா? தவறா?
தொகுப்பாசிரியர்: சு.விஜயபாஸ்கர்
நிகர்மொழி
பதிப்பகம்,
தொடர்புக்கு: 8428 455 455
விலை: ரூ.600