

மனித வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகளாக இருப்பவை உணவு, உடை, உறைவிடம். இவற்றின் பின்னணியில் மனித உழைப்பு தவிர்க்க முடியாதபடி இருக்கிறது. அதுதான் சமூகம் என்கிற அமைப்பின் அடிப்படையாக அமைந்துள்ளது. உழைப்பாற்றலின் தோற்றத்தையும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து வரலாற்றை மனிதர்கள் வடிவமைக்கிறார்கள். அந்த வரலாற்றின் உள்ளீடாக அமைந்துள்ள நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வாழ்க்கையில் வளர்ச்சியைப் புரிந்துகொண்டு அதை மதிப்பீடு செய்கிறோம். இந்த வகையான ஒரு புரிதலையும் அறிதலையும் உணர்வுபூர்வமாக உள்வாங்கிக்கொண்டு, இந்த நாவலில் கொங்குப் பகுதியை முன்னிறுத்தி சுப்ரபாரதிமணியன் வடிவமைத்திருக்கிறார்.
அதை வாசிப்பின் வாயிலாக உணர்ந்துகொள்ள முடியும். வரலாற்று மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு நாவல்வழி இந்தியாவின் வளர்ச்சியை இவர் மதிப்பீடு செய்கிறார். ஐரோப்பியரின் வருகையைத் தொடர்ந்து அந்நிய மதங்கள் இந்திய மக்களிடையே படிப்படியாகப் பரவி வாழ்க்கையை மாற்றி அமைத்தன. மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை, புதிய வாழ்க்கை முறைகளை புதிய உறவுநிலைகளை, இதில் தொடர்ந்து அடையாளப்படுத்துகிறார். வரலாற்றில் நீண்டகாலமாகப் பயன்படுத்தாமல் கிடந்த பல வகையான மரபுப் பழக்கங்களைப் பயன்படுத்தி ஒரு சில மனிதர்களின் வாயிலாக இனம்காட்டுகிறார்; இந்த நாவலில் கொங்கு மனிதர்களின் அனுபவம் மூலம் புலம்பெயரும் உழைக்கும் மக்களின் மனப்போக்குகளையும் வாழ்க்கை மாற்றங்களையும் அந்நிய, இந்திய மதங்களின் தாக்கங்களையும் தொழிற்சங்கத் தோற்றங்களையும் வளர்ச்சியையும் தொடர்ந்து பதிவுசெய்கிறார்.
பல வகையான இந்திய மக்களின் வாழ்க்கை முறைகளுக்குள் ஊடுருவும் அந்நிய மதம், எளிய மக்களின் வாழ்க்கையில் வறுமையைப் போக்க முனைவதோடு கல்வி, மருத்துவம், புதிய கலாச்சார வாழ்க்கை முறைகளிலும் விரிவான, பரவலான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு மக்களின் 300 ஆண்டுகளின் வாழ்க்கை மாற்றங்களின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைத் தனிப்பட்ட அளவிலும் விரிவான அளவிலும் யதார்த்தமான இயல்பு வாழ்க்கை நிகழ்வுகளை முன்வைத்தும் மனதை நெகிழச் செய்யும் விதத்தில் இந்த நாவலை வடிவமைத்திருக்கிறார் சுப்ரபாரதிமணியன். கிறிஸ்துவக் குடும்பம் ஒன்றின் பல்வேறு தலைமுறை வாழ்க்கையை நெசவாளர் பின்னணியில் ஆரம்பித்து பின்னலாடை தொட்டு வாழ்க்கையில் வேலை முறை மாறுபடுவதை இந்த நாவல் காட்டுகிறது.
நாவலை மூன்று பாகங்களாகப் பிரித்துத் தொழிலிலும் அதன் உற்பத்தி உறவுகளிலும் நிகழ்ந்த மாற்றங்களையும் வழக்குப் போக்குகளையும் உரிய தகவல்களையும் அடிப்படை ஆதாரங்களையும் முன்வைத்து எதிரும்புதிருமான மனப்போக்குகளை தெளிவாகத் தெரிந்துகொள்ளும் வகையில் புலப்படுத்துகிறார். கதை சொல்லும் மரபிலிருந்து மாறுபடும் கற்பனைக் களங்களைத் தவிர்த்து, வரலாற்று நிகழ்ச்சிகளின் பின்னணியில் மாறிக்கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கையை நம்பகத்தன்மையுடன் விளக்கியுள்ளார் எழுத்தாளர். இதற்கு ஆரம்பத்தில் கிறிஸ்துவ வாழ்க்கையின் ஆதாரங்கள் உதவுகின்றன.
வளர்ச்சி குறைந்த ஒரு காலகட்டத்தில் கைத்தொழில் அளவில் கைத்தறி நெசவு போன்றவை வளர்ந்ததைத் துல்லியமாகச் சித்தரிக்கிறார். இயந்திரங்களின் உதவியால் உற்பத்தியில் ஏற்பட்ட அளவு மாற்றங்களையும் இரண்டாவது பாகத்தில் சித்தரிக்கிறார். மின்சக்தியையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு நெசவுத் தொழிலைப் பெருமளவுக்கு நவீனப்படுத்திய செயல்முறைகளையும் மூன்றாம் பாகத்தில் அடையாளப்படுத்துகிறார். இதற்காகக் கோவை மாவட்டத்தின் சோமனூர், செகடந்தாளி கிராமம், திருப்பூர், வேலூர், திருப்பத்தூர் ஆகிய ஊர்களைக் களன்களாகக் கொண்டுள்ளார்.
கதாபாத்திரங்களின் உரையாடல்களின் வாயிலாக விவரிப்புகளைக் குறைத்து, எளிய உரைநடையின் வாயிலாக கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்திக்கொள்ளும் புதிய உத்தியைக் கையாண்டுள்ளார். மத கருத்துக்களைக்கூடத் தர்க்கரீதியாகவும் உரையாடலின் வாயிலாகவும் பரிமாறிக் கொள்ளும் முறையில் மாறுபட்ட ஒரு முறையைக் கையாண்டுள்ளார். வெவ்வேறு காலகட்டத்தில் மொழியின் மாறுபாடு காட்டப்படுவதும் முக்கியமானது. கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த அரசியல் தலைவர்களையும் அவர்களின் தொழிற்சங்கப் போராட்டங்களையும் அவற்றின் விளைவுகளையும் ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாகவும் வெளிப்படையாகவும் சித்தரித்துக் காட்டுகிறார்.
அதில் நெசவு, பஞ்சாலைத் தொழில்கள் முதன்மை பெறுகின்றன. ஆங்காங்கே மாறுபட்ட மனிதர்களின் சித்தரிப்பு வாயிலாக கதைத்தன்மையைக் கையாண்டாலும் வரலாற்றுத் தன்மையையும் யதார்த்தத்தையும் தவிர்த்துவிடவில்லை. மாறுபட்ட பல்வேறு கதைகளின் தொகுப்பாகவும் அசலான நம் காலத்து வரலாறாகவும் அமைந்துள்ள ‘சிலுவை’ நாவல் ஏராளமான வரலாற்று நிகழ்வுகளை அரசியல், சமூகம், ஆன்மிகம், தொழில்நுட்பம் எதிர்கொண்ட வாழ்க்கை நிகழ்ச்சிகள், கலாச்சாரப் பண்பாட்டுத் தன்மைகளைக் கடந்த 300 ஆண்டுகளின் காலகட்டத்தில் உள்ளடக்கி ஒரு புதிய கண்ணோட்டத்தில் ‘சிலுவை’ நாவலைப் படைத்திருக்கிறார் சுப்ரபாரதிமணியன். கடந்து சென்ற நூற்றாண்டுகளில் கொங்கு பகுதிசார்ந்த மக்களின் வாழ்க்கை வரலாறாக இந்த நாவல் விளங்குகிறது.
சிலுவை
சுப்ரபாரதிமணியன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
விலை: ரூ.1,200
தொடர்புக்கு: 044-26751968