Published : 16 Nov 2023 06:00 AM
Last Updated : 16 Nov 2023 06:00 AM
திருச்சி: வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் வாசிப்புத் திருவிழா எனும் நிகழ்வை முன்னெடுத்துள்ளது. வாசகர்களின் பங்கேற்புடன் இணைந்து கொண்டாடப்படும் இந்த நிகழ்வு வரும் 18-ம் தேதி (சனிக்கிழமை) திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி அரங்கில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை வர்த்தமானன் பதிப்பகம் இணைந்து நடத்துகிறது.
ஒவ்வொரு மனிதனின் அறிவு வளர்ச்சிக்கும், சுய சிந்தனைக்கும் வாசிப்பு மிகவும் அவசியம். நமது வரலாற்றையும், பண்பாட்டையும் வாசிப்பே நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
நவீன அறிவியல், தொழில்நுட்பம் தற்போது நம் உள்ளங்கைக்குள் உலகத்தை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. ஆனாலும், காட்சி ஊடகங்கள் நமக்கு ஒற்றைத்தன்மையான கருத்துகளையே அளிக்கின்றன. சமூக ஊடகங்களின் வழியே நொடிக்கொரு செய்தி நம் பார்வைக்கு வந்தாலும், செய்தியின் உண்மைத் தன்மையை அச்சு ஊடகங்களின் வழியாக மட்டுமே நம்மால் உறுதிசெய்ய முடிகிறது.
நாளிதழ் வாசிப்பு, புத்தக வாசிப்பு என வாசிப்பை சுவாசிக்கும் சமூகம்தான், அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாகத் திகழமுடியும். புத்தக வாசிப்பு என்பதுதனிப்பட்ட முறையிலும், சமூகத்துக்கும் நன்மை அளிக்கக்கூடிய செயலாகும். வாசிப்பின் வழி அவரவர் கற்பனைக்கும், ஆற்றலுக்கும் ஏற்ப பன்முகமான கருத்துகள் உருவாகும்.
வாசகர்களுடன் இணைந்து, வாசிப்பின் சிறப்பைக் கொண்டாடும் இவ்விழாவில் பேச்சாளரும், எழுத்தாளருமான நந்தலாலா, கல்வியாளர் க.துளசிதாசன், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநர் மு.சிவக்குமார் ஆகியோர் பங்கேற்று, வாசிப்பின் அவசியம் குறித்து உரையாற்றுகின்றனர்.
வாசிப்புச் செயல்பாட்டைப் போற்றும் இவ்விழாவில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் https://www.htamil.org/VTTRICHY என்ற இணைப்பில் பதிவுசெய்துகொண்டு பங்கேற்கலாம். வாசிப்பு ருசி அறிந்த அனைவரும் இதில் பங்கேற்றுப் பயனடையலாம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT