

மூன்று தலைமுறைப் பெண்களின் கதை இது. அவர்களுடைய நாட்டில் சூழலின் பின்னணியில் அதை வாசிக்கும்போது, அதன் சுவையே தனி. அபராஜிதனிலும் மூன்று தலைமுறைப் பெண்களின் கதைகளோடு, இறுதிப் போருக்கு முந்தைய இலங்கையின் பதற்றமான சூழ்நிலை இணைந்து வருகின்றது. ஜினவதி, மனோரம்யா, வர்ணாசி என்கிற பாட்டி, அம்மா, பேத்தி ஆகியோரின் கதை இது. வர்ணாசியின் கணவன் சாஷா அதிக பக்கங்களுக்கு வந்தபோதிலும் பெண்களின் கதையே இதில் பிரதானம். ஜினவதி போல வாழக் கூடாது என்று மனோரம்யா தனது வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கிறாள்.
அவளது மகள் வர்ணாசியும் அம்மாவின் வழியே, அவரது எதிர்ப்புக்கு நடுவே தனது துணையைத் தேர்ந்தெடுக்கிறாள். ஜினவதியும் வர்ணாசியும் எளிய குடும்ப வாழ்க்கைக்கு ஆசைப்படுகையில், அதிகம் படித்த மனோரம்யாவோ வானம் முழுதும் தனித்துச் சிறகடித்துப் பறக்க நினைக்கிறாள். அம்மா - மகள் உறவு இந்த நாவலின் அடிநாதம். முதலில் ஜினவதி - மனோரம்யா உறவு. மகள் என்ன செய்தாலும் அதிகம் கடிந்துகொள்ளத் தெரியாத அம்மா; அம்மா எவ்வளவு கோபப்பட்டாலும் புன்னகைக்கும் மகள்.
மனோரம்யா - வர்ணாசி உறவு அப்படியே அதற்கு நேர் எதிரானது. இங்கே மகள் எவ்வளவு கோபப்பட்டாலும், மகள் மேல் இருக்கும் பேரன்பில் ஒரு துளியையும் அம்மா குறைத்துக்கொள்வதில்லை. நிலநடுக்கத்தின்போதும் அதன் பின்னரும் தாய் - மகள் பாசம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பமும் அம்மா புதைத்துவைத்திருந்த ரகசியத்தைக் கண்டறியும் வாய்ப்பும் கிடைக்கிறது. இலங்கை அரசியலில் ஊழல்கள், பதவிக்காக எதையும் செய்வது, வெளிநாட்டவர் ஏதோ காரணத்துக்காக இலங்கை வருவது, அதனால் ஏற்படும் கலாச்சார மாற்றங்கள் போன்றவை நாவலின் இடையிடையே வருகின்றன.
முக்கியச் சிங்களக் கதாபாத்திரமே கெட்டவனாக இருக்கிறது. நிலநடுக்கத்துக்குப் பிந்தைய தமிழ்ச் சிறுமியின் கதையைச் சொல்லிய விதம், இலக்கியவாதிகள் எந்த இனத்தையும் சார்ந்தவரல்லர் என்பதற்கு உதாரணம். நாவலின் முன்னுரையில், சுநேத்ரா இந்த நாவலுக்குக் கிடைத்த எதிர்ப்புகளைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். முதலாவதாக, ஒரு சிங்களப் பெண் திருமணம் செய்துகொள்ளாமல் ஒருவருடன் இணைந்து வாழும் கதாபாத்திரம் கதையில் உண்டு. இந்தியாவைப் போலவே இலங்கையிலும் பாசாங்கு அதிகம்.
யானை கண்முன் நடந்துபோனாலும் கவனிக்கவில்லை என்று சொல்லும் பாசாங்கு. சுயமாகத் தங்களை நியமித்துக் கொண்ட கலாச்சாரக் காவலர்களுக்கு இலங்கையிலும் பஞ்சமில்லை என்பதை இந்த எதிர்ப்புகள் வழி புரிந்துகொள்ள முடிகிறது.
அடுத்ததாக, பிரபாகரனையும் தாய்மையுடன் மன்னிக்கிறேன் என்று எழுதியிருப்பது மிகவும் முக்கியமானது. கடைசியாக, நாவலில் எங்குமே ஒருபக்கச் சார்பு இல்லாமல் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சுநேத்ராவின் நோக்கம், அரசியல் போரால் பாதிக்கப்பட்ட இலங்கையின் கதையைச் சொல்வதைவிடவும், மூன்று வெவ்வேறு சூழலில் வளர்ந்த மூன்று தலைமுறைப் பெண்களின் கதையைச் சொல்வதேயாகும். அதை அவர் சிறப்பாகச் செய்திருக்கிறார். சிறந்த சிங்கள நாவலுக்காக, அநேகமாக இலங்கையின் அனைத்து விருதுகளையும் வென்ற நாவல் இது. ரிஷான் ஷெரிப்பின் மொழிபெயர்ப்பு, மூல மொழியில் வாசிக்கும் திருப்தியை அளிக்கிறது. - சரவணன் மாணிக்கவாசகம்