சிற்றிதழ் அறிமுகம்: துலக்கமாகும் தமிழ் ஒளி எழுத்துகள்

சிற்றிதழ் அறிமுகம்: துலக்கமாகும் தமிழ் ஒளி எழுத்துகள்
Updated on
2 min read

கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டுச் சிறப்பிதழாக இந்த இதழ் மலர்ந்திருக்கிறது. தமிழ் ஒளியின் சிறுகதைகள் குறித்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் கட்டுரை, அதிகம் விவாதிக்கப்படாத தமிழ் ஒளியின் சிறுகதைகள் உலகம் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. பேராசிரியர் க.பஞ்சாங்கம், தமிழ் ஒளியின் கட்டுரைகளின் உள்ளடக்கத்தைத் தன் குறுக்கீட்டின் வழி புதிய முறையில் துலங்கச் செய்துள்ளார். ஏற்கெனவே வழக்கத்தில் உள்ள நிலைப்பாட்டைத் தமிழ் ஒளி தன் கட்டுரைகளின் வழி கேள்விக்கு உள்படுத்துகிறார். அதனால், அவற்றை விசாரணைக் கட்டுரைகள் என மதிப்பிடுகிறார் பஞ்சாங்கம். தமிழ் ஒளி என்னும் ஆளுமையைத் துலங்கச்செய்யும் பல கட்டுரைகளும் இந்த இதழில் தொகுக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் வீ.அரசு நேர்காணல் இந்த இதழின் சிறப்புக்குரிய அம்சம். - ஜெய்

புதுமலர் (காலாண்டிதழ்)
ஆசிரியர்: கண.குறிஞ்சி

விலை: ரூ.100
தொடர்புக்கு: 9443307681

நிலத்தின் காட்சிகள்: தமிழ்க் கவிதையில் நவீனச் சொல்லாடலுடன் கூடிய கவிதைகளைப் புனைவதில் கவனம் பெற்றவராக வலம்வரும் கவிஞரது நான்காவது கவிதை நூல் இது. முந்தைய தொகுப்புகளிலிருந்து முற்றாக விலகாமலும், தனக்கான தனித்துவமான மொழியைக் கண்டறிந்தவராகவும் இந்நூலின் கவிதைகளினூடாக அறியப்படுகிறார் பூவிதழ் உமேஷ். கிராமத்து வாழ்வின் எளிய காட்சிகளைக்கூடச் சற்றே இறுக்கமான கவிதை மொழியில் வாசிக்கையில், வேறோர் உருக்கொள்ளும் காட்சிகள் வாசகனுக்குப் புதிய அனுபவத்தைத் தருகின்றன.

‘மரங்களைப் போல வெயில் நிற்கும்/புழுதி பறக்கும் பொட்டலில்/ஏறும்போது முட்டிகளில் கள் ததும்பும் பனைமரம்’ எனும் முதல் கவிதையின் காட்சியே, நமக்குள் கற்பனையைத் ததும்பவிடுகிறது. ‘ஒரு குத்துப் பசும்புல்லை ஓரத்தில் வளர்த்திருக்கும் பாறைக்கு / தலை தெரியாத இசைக் கலைஞனாக / மேயும்போது குனிந்து வணக்கம் சொல்லும் / எருமைக்கன்றை மேய்க்கிறேன்’ எனும் வரிகளை வேகமாகக் கடந்துசெல்ல முடியவில்லை. பெரும்பாலான கவிதைகள் நிலத்தின் காட்சிகளையே கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. அகவய தரிசனத்தின் உள்ளீடாக விரியும் கவிதைகளில் வறண்ட நிலத்தின் கனிந்த குரலும் ஒலிக்கவே செய்கிறது. - மு.முருகேஷ்

துரிஞ்சி
பூவிதழ் உமேஷ்

எதிர் வெளியீடு
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9942511302

நம் வெளியீடு: இந்தியாவில் அறிவியலின் நிலை? - ஜப்பான் போன்ற குட்டி நாடுகள்கூட அறிவியலுக்கான நோபல் பரிசுகளை அள்ளும்போது சர் சி.வி.ராமனுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக இந்தியர்களால் அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் உலகைத் திரும்பிப் பார்க்கவைக்க முடியாத நிலை. ஹர் கோவிந்த் கொரானா, சுப்பிரமணியன் சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகிய மூவரும் அறிவியல் துறைகளில் நோபல் பரிசு பெற்றிருந்தாலும் அவர்கள் இந்திய வம்சாவளியினர். இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி நடத்தி அதன் வழியாக உச்சத்தை அடைந்தவர்கள் அல்லர்.

அடிப்படையில் அறிவியல் மீது ஆர்வமே ஊட்டப்படாதபோது, எங்கிருந்து ஆராய்ச்சிவரை மாணவர்கள் செல்வார்கள்? அறிவியல் மீது ஈர்ப்பு ஏற்படுத்த சிறந்த வழி அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்துக் கற்பிப்பதற்கு முன், அறிவியலாளர்களின் வாழ்க்கையைக் கதையாக விவரிக்க வேண்டும். இதைக் கச்சிதமாகச் செய்யும் புத்தகம்தான் ‘அறிவியல் ஸ்கோப்’. ‘இந்து தமிழ் திசை’ நிறுவனத்தின் பள்ளி நாளிதழான ‘வெற்றிக்கொடி’யில் தொடராக வெளிவந்தது, தற்போது புத்தக வடிவம் பெற்றுள்ளது.

அறிவியல் ஸ்கோப்
முனைவர். என்.மாதவன்

‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம்
விலை: ரூ.125
தொடர்புக்கு: 74012 96562, 74013 29402
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in