நூல் வெளி: பதிப்புத் துறைக்கு மறுமலர்ச்சிக் காலம் எப்போது?

நூல் வெளி: பதிப்புத் துறைக்கு மறுமலர்ச்சிக் காலம் எப்போது?
Updated on
2 min read

உலகப் புகழ்பெற்ற ஃபிராங்பர்ட், ஷார்ஜா புத்தகச் சந்தைகளில் தமிழ்ப் பதிப்பாளர்கள் அரங்கு அமைக்கிறார்கள். பதிப்புத் துறை சார்ந்து பல்வேறு சந்திப்புகள் அங்கு நடைபெறுகின்றன. தமிழுக்கு நிறைய நூல்களைக் கொண்டு வருவதற்கான புதுப்புது ஒப்பந்தங்கள் இடப்படுகின்றன. இங்கிருந்தும் பல்வேறு உலக மொழிகளுக்கு நமது படைப்புகள் மொழியாக்கம் செய்யப்படுகின்றன. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசே முன்முயற்சி எடுத்து, சில கோடி ரூபாயை ஒதுக்கிப் புத்தகத் திருவிழாக்களை நடத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, நடப்பு ஆண்டு முதல் சென்னையிலேயே ஒரு பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவை நடத்தத் தொடங்கிவிட்டோம். ஆனால், உண்மையிலே பதிப்புத் துறை ஆரோக்கியமாக, செழிப்போடு இருக்கிறதா? இந்தக் கேள்விக்கு உண்மையான பதில் கசக்கத்தான் செய்கிறது.

சென்னைப் பெருவெள்ளம், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, நூலக ஆணை நிறுத்தம் எனக் கடந்த எட்டு ஆண்டுகளாகவே இறங்கு முகத்தில் இருக்கிறது பதிப்புத் துறை. சொற்ப இடங்களில் ஏற்பாட்டாளர்களின் சரியான திட்டமிடுதலால், கடுமையான உழைப்பினால், களப்பணிகளால், முதலுக்கு மோசமில்லை எனத் திருப்தியுற வேண்டிய சூழலில் பதிப்புத் துறை இருக்கிறது. அரங்கின் தொடக்கத்தில் இருக்கிற நான்கு, ஐந்து அரங்குகளில் மட்டுமே சொல்லிக்கொள்கிற மாதிரியான விற்பனை நடைபெறும் நிலையில், அரங்கு ஒதுக்கீட்டுக்கான குலுக்கலில் முன்னால் கிடைத்தால் அதிர்ஷ்டம் என்பதைப் போல இத்தொழில் ஒரு சூதாட்டமாக ஆகிவிட்டதோ என்று அஞ்ச வைக்கிறது.

பெரும் புத்தகத் திருவிழாக்களில் விற்பனை சற்று குறைந்திருப்பதற்கு மாவட்டம்தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுவது ஒரு காரணம். பொதுவாக வாசிக்கும் பழக்கம் குறைந்திருந்தாலும், நூல் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. உண்மையில், தமிழகத்தில் பதிப்புத் துறை வெற்றிகரமாக இயங்க முடியாத சூழல் ஏற்பட்டால், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இயங்குவதற்கு வாய்ப்பே இல்லை.

நூல்களின் தலைப்புகள் நூற்றுக்கணக்கில் புதிதுபுதிதாக வெளிவந்தாலும் அவற்றை அச்சக்கும் படிகள் என்னவோ பெரும்பாலும் 50க்கும் கீழ்தான். 1,000 படிகள் அச்சடிப்பது என்கிற காலம் மலையேறி ஒரு மாமாங்கம் ஆகப் போகிறது. விற்பனையைப் பெருக்கி, நல்ல தரமான நூல்களையும் கொண்டுவந்து, புதிதாக வாசகர்களையும் உருவாக்கித் துறையைத் தலைநிமிர வைக்கசிறிது முன்திட்டமிடுதலும் அர்ப்பணிப்பும் தொலைநோக்குப் பார்வையும் தேவை. ‘பபாசி’ (BAPASI) போன்றவலுவான அமைப்புகள் நினைத்தால், ஒரு மாபெரும்வாசகக் கட்டுமானத்தை மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் உருவாக்க முடியும்.

மாவட்டம்தோறும் நடைபெறும் புத்தகத் திருவிழாக்களை மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு, விற்பனையாளர்களுக்குச் சுழற்சி முறையில் அரங்குகளை ஒதுக்கலாம். மாவட்டம்தோறும் பபாசியின் சார்பாகவே வாசகர் வட்டங்களை உருவாக்கி, அதில் தன்னார்வலர்களை இணைத்துக்கொண்டு, புத்தகத் திருவிழாவுக்கு முன்பாகவே பிரச்சாரத்தைத் தொடங்கலாம். அக்குழு ஒரு மாவட்டத்துக்கு ஆண்டு முழுக்கப் புத்தகத் திருவிழா சார்ந்த பணிகளை முன்னெடுக்கலாம். கூட்டு முயற்சி எப்போதுமே கூடுதல் வெற்றியைத் தரும்.

ஈரோடு போன்ற நகரங்களில் இது வெற்றிகரமான சூத்திரமாக இருக்கிறது. வீட்டுக்கு ஒரு நூலகம்: ‘வீட்டுக்கு ஒரு நூலகம்’ என்கிற முழக்கத்தோடு இதனை ஒரு பிரச்சார இயக்கமாகவே முன்னெடுக்கலாம். இது மட்டும் சாத்தியமானால், ஆண்டுக்கு ரூ.1,000 கோடி விற்பனை என்பது சர்வ சாதாரணமாக நடைபெறும். அச்சகங்கள் உயிர்பெற்று எழும். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக வாசிக்கும் சமூகம், வளமான சமூகமாக மாறும்.

‘வீட்டுக்கு ஒரு நூலகம்’ திட்டம் மூலம் சென்னை புத்தகக் காட்சியில் மட்டுமே ரூ.100 கோடி ரூபாய் விற்பனை என்பதைச் சுலபமாக எட்ட முடியும். உதாரணமாக, புத்தகச் சேமிப்புத் திட்டத்தை உருவாக்கி, குறைந்தது 10 லட்சம் பேரையாவது மாதம் ரூ.100 சேமிக்க வைத்தால், ஆண்டுக்கு ரூ.1,200. அவர்களுக்கு 20% கழிவில் ரூ.1,500க்கு நூல்களை வழங்கினால், ரூ.120 கோடிக்கு நூல்கள் விற்பனை. இதனை காலப்போக்கில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தினால், ரூ.500 கோடி என்பது பெரிய விஷயமில்லை. தொழில்நுட்ப உதவியுடன் இதனைச் செய்வது இன்றைக்குப் பெரிய சிரமமில்லை.

எட்டுக் கோடிப் பேரில் 50%க்கு மேல் உயர்கல்வி கற்ற தமிழகத்தில், எந்த அரசு விருந்தினர் வந்தாலும் விமான நிலையத்தில் நூலைப் பரிசாகக் கொடுத்து வரவேற்கிற முதல்வர் இருக்கிற காலத்தில், ஒரு முன்னாள் முதல்வரின் நூற்றாண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் நூலகம் கட்டுகிற மாநிலத்தில், அந்த நூலகத்தை ஒரு புனித தலத்துக்குச் செல்வதைப் போலச் சென்று, தரிசித்துவிட்டு வருகிற மக்கள் வாழும் நிலத்தில், துறை சார்ந்து துடிப்பாக இயங்கக்கூடிய இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிற சூழலில், பதிப்புத் துறை மறுமலர்ச்சி அடையவில்லை என்றால், பின் எப்போதுதான் அடைவது?

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in