Published : 05 Jan 2018 09:33 AM
Last Updated : 05 Jan 2018 09:33 AM

இந்த ஞாயிறு... விருதுகளின் விருந்து!- ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ தமிழ் விருதுகள்!

னவரி வானத்தில் இலக்கிய மேகங்கள் திரண்டுவந்துகொண்டிருக்கின்றன. இன்னும் இரண்டே நாட்கள்தான் இலக்கிய அடைமழை பெய்வதற்கு. வரும் ஜனவரி 7, ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் கான்சர்ட் அரங்கில் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ தமிழ் இலக்கிய விழா நடைபெறவிருக்கிறது. இந்த இலக்கிய விழா குறித்த அறிவிப்புகள் வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுவரும் சூழலில், விழாவில் விருதுகளும் வழங்கப்படுகின்றன என்று நேற்று வெளியான அறிவிப்பு, வாசகர்கள் மத்தியிலும் எழுத்தாளர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘என்னென்ன விருதுகள் வழங்குகிறீர்கள்?’ என்று வாசகர்கள் பலரும் மின்னஞ்சல், தொலைபேசி போன்றவற்றின் மூலம் எங்களைக் கேட்டுத் துளைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மொத்தம் ஆறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன. சமகால இலக்கியச் சாதனையாளருக்கான ‘ஜெயகாந்தன் விருது’, பெண் படைப்புக் குரலுக்கான ‘பாரதி விருது’, விளிம்பின் முழக்கத்துக்கான ‘இன்குலாப் விருது’, இளம் எழுத்தாளருக்கான ‘பிரமிள் விருது’, அபுனைவுக்கான ‘ஏ.கே.செட்டியார் விருது’ போன்ற ஐந்து விருதுகளுடன் மூத்த எழுத்தாளர் ஒருவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ம் வழங்கப்படவிருக்கிறது. ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ ரூ.5 லட்சம் பணமுடிப்புத் தொகையையும், விருதுப் பட்டயத்தையும், சான்றிதழையும் உள்ளடக்கியது. இந்த விருது மட்டும் ஜனவரி 14, 15, 16-ம் தேதிகளில் அதே அரங்கில் நடைபெறவிருக்கும் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ ஆங்கில நிகழ்வில் வழங்கப்படுகிறது. ஏனைய ஐந்து விருதுகளும் ஜனவரி 7-ம் தேதி நடைபெறும் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ தமிழ் இலக்கிய நிகழ்வில் வழங்கப்படுகின்றன. மூத்த எழுத்தாளரும் நாடகாசிரியருமான இந்திரா பார்த்தசாரதி இந்த விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கிச் சிறப்பிக்கவிருக்கிறார். இந்த ஐந்து விருதுகளும் தலா ரூ.1 லட்சம் பணமுடிப்புத் தொகையையும், விருதுப் பட்டயத்தையும், சான்றிதழையும் உள்ளடக்கிய வையாகும்.

‘தி இந்து’ ஆசிரியர் குழுவினர், கடந்த இரண்டு மாதங்களாகத் தீவிரமாகப் பரிசீலித்து உருவாக்கிய பெரும் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனையாளர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

‘விருதுகள் சரி, விருதாளர்கள் யார் யார்’ என்று கேட்கிறீர்களா? (விருதாளர்கள் பற்றிய அறிவிப்புடன் நாளை…)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x