Last Updated : 20 Jan, 2018 04:38 PM

 

Published : 20 Jan 2018 04:38 PM
Last Updated : 20 Jan 2018 04:38 PM

புத்தகக் காட்சியில் ஒரு அரங்கத்தைத் தெரிஞ்சுக்கலாமா?- ப்யூர் சினிமா

மாற்றம் வேண்டும் என்று நினைத்தால் ஒரு வேலையோடு தொடர்புடைய பல வேலைகளில் இறங்கவேண்டும். அருண் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்துகொண்டிருந்த காலத்தில் இப்படியெல்லாம் யோசித்தாரா என்று தெரியவில்லை.

ஆனால் தமிழ் ஸ்டுடியோ என ஒன்றைத் தொடங்கி உலக சினிமாக்களை திரையிடத் தொடங்கி பல இளைஞர்களையும் தனது நம்பிக்கை வளையத்துக்குள் இழுத்துக்கொண்டார். ஒரு நல்ல சினிமாவை எடுத்துவிடவேண்டும் என்ற நோக்கத்தோடு சினிமாவை நோக்கி வரும் பலருக்கும் தமிழ் ஸ்டூடியோ அருண் என்றால் நன்றாகத் தெரிந்திருக்கிறது. ப்யூர் சினிமா புத்தக அரங்கில் சினிமா ரசனைக்கான பத்திரிகைகள், சினிமா குறித்த விரிவான புத்தகங்கள் பலவும் இடம்பெற்றுள்ளன. தமிழில் வரும் திரை இதழ்கள் மட்டுமின்றி இவர்கள் நடத்தும் 'படச்சுருள்' சினிமா இதழும் இங்கு கிடைக்கிறது.

பேசாமொழி இணையதள திரை இதழையும் இவர்கள் நடத்துகிறார்கள். பத்திரிகை இணையதளத்தோடு நின்றுவிடாமல் படிமை திரைப்படக் கல்விக்கான கல்லூரியும், சலனம் என்னும் சுயாதீன திரைப்பட விழாவுக்கான முயற்சிகளிலும் இறங்கி வருகிறார்கள்.

அப்படியெல்லாம் நான் எதுவும் செய்யலைங்க என்பதுபோல புத்தக் காட்சியின் ப்யூர் சினிமா அரங்கில் அடக்கத்தோடு அமர்ந்திருக்கும் அருணிடம் பேசினோம்.

அருண் ப்யூர் சினிமா அரங்கைப் பற்றி கொஞ்சம் அறிமுகப்படுத்துங்களேன்....

சினிமா குறித்து தமிழில் வெளிவந்த பல புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் இடம்தான் ப்யூர் சினிமா புத்தக அரங்கு. இந்தியாவிலேயே சினிமா நூல்களுக்கான தனிக்கடை இது. இந்தக் கடை வடபழனியில் உள்ளது. சென்னை புத்தகக் காட்சியைப் பொறுத்தவரை ப்யூர் சினிமா அரங்கம் 3 ஆண்டுகளாக இடம்பெற்று வருகிறது.

போதிய அளவுக்கு சினிமா நூல்கள் வந்துள்ளனவா?

குறைவுதான். மலையாளத்தில் வங்காளத்தில் அதிகமாக புத்தகங்கள் வருகின்றன. அதற்கு அடுத்து தமிழில்தான் அதிக அளவில் நிறைய புத்தகங்கள் வந்துள்ளன.

ஆனால் இவை அனைத்தும் சரியானவை என்று சொல்லமுடியாது. ஆனால் வரவேயில்லை என்பதற்கு பதில் இந்த அளவுக்காகவாவது சினிமா குறித்த உரையாடல்கள் நிகழ்த்தப்படுன்றன என்ற அளவில் வரவேற்கலாம்.

திரைப்பட இயக்கங்கள் ஏதாவது பயன் விளைகிறது என நம்புகிறீர்களா?

நல்ல பயன் விளைகிறது. உலகின் நல்ல சினிமாக்களைத் திரையிடுவதும் அதுகுறித்த உரையாடல்களும் இங்கு நிறைய மாற்றங்களை விளைவித்துள்ளன.

சென்ற ஆண்டு வெளிவந்த படங்களையே பாருங்கள். 'காக்கா முட்டை', 'அருவி', 'அறம்' போன்ற படங்கள் முன்பும் வந்துள்ளன. ஆனால் அப்பொழுது இந்த அளவுக்குப் பேசப்படவில்லை. நீங்கள் நினைப்பது போல மாற்றங்கள் படிப்படியாகத்தான் நடக்கும். அப்புறம் மாற்றங்கள் ஒருவரால் மட்டுமே அல்ல பலரின் முயற்சிகளால் நடப்பவை. சென்ற ஆண்டைப் பொறுத்தவரை பெரிய பட்ஜெட் படங்களைவிட சின்ன பட்ஜெட் படங்கள்தான் நன்றாக வரவேற்பைப் பெற்றன. இதற்குக் காரணம் இப்படிப்பட்ட இயக்கங்களும் அதை நடத்துபவர்களும்தான்.

தாங்கள் நடத்திய படச்சுருள் பத்திரிகையைப் பற்றி

படச்சுருள் மூன்றாண்டுகளில் 33 இதழ்கள் வெளிவந்தன. படச்சுருள் ஒவ்வொரு இதழுக்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் கட்டுரைகள் இடம்பெற்றன. முதல் இதழே சென்சார் எனப்படும் தணிக்கை பற்றிய பல்வேறு விதமான கட்டுரைகளை வெளியிட்டோம். அதுபோல படச்சுருளில் தலித் சினிமாவுக்கு ஒரு சிறப்பிதழ்...

கொண்டுவந்தோம். கம்யூனிஸ சினிமா, அரசியல் சினிமா, பெண்கள் சினிமா, சுயாதீன சினிமா என்று 33 இதழ்களிலும் 33 தலைப்புகளில் கட்டுரைகளும் ஆய்வுகளும் நிறைய அரிய புகைப்படங்களோடு கட்டுரைகள் இடம்பெற்றன.

நாங்கள் இணைய தளத்தில் நடத்திவரும் பத்திரிகை பேசாமொழி நிகழ்காலம் கடந்த காலம் சினிமா என கலந்து ஒரு தலைப்புகள் என்ற வரையறை இன்றி வெளிவரும்.

சினிமா எடுப்பது பற்றி சொல்லித் தருகிறீர்களாமே.  இக்கல்வி பயில எத்தனை வருடங்கள் தேவை?

நாங்கள் நடத்தும் படிமை திரைப்படக் கல்வி 2 ஆண்டுகள் அல்லது 2 ஆண்டுகளுக்கும் மேல் கால அளவு கொண்டது. 2 ஆண்டுகளுக்கும் மேல் என்று கூறுவதற்கு காரணம் இருக்கிறது. கிராமத்திலிருந்து 10 பேர் அழைத்து அவர்களுக்கு மட்டும் சினிமாவைக் கற்றுத் தருவது என முதலில் முடிவெடுத்தோம்.

முதல் பேட்ச் பொறுத்தவரை இப்படித்தான் செய்தோம். ஆனால் அடுத்த பேட்ச் அப்படி வரையறையை வைத்துக்கொள்ளவில்லை. சனி, ஞாயிறு முழுநாள் வகுப்பு உண்டு. வாழ்வியல் தேவைக்காக அவர்கள் வார நாட்களில் வேலைக்குப் போகலாம்.

இதற்கான பாடதிட்டம் முதல் ஆறுமாதம் இலக்கியம்..... அடுத்த 3 மாதம் ஜர்னலிசம் மற்றும் மற்றும் அரசியல். அடுத்து ஒரு 6 மாதம் பீல்டு ஒர்க். அடுத்து ஒரு ஆண்டு முழுவதும் சினிமா டைரக்ஷன், நடிப்பு, கேமரா, எடிட்டிங் ஸ்கிரிப்ட் என பல துறைகளிலும் அவர்களுக்கு திரைப்படக் கல்வி வழங்கப்படுகிறது.

மிகப்பெரிய திரைப்பட விழா நடத்தும் திட்டங்கள் இருப்பதாகக் கேள்வியுற்றோம்...

உண்மைதான். வரும் பிப்ரவரியே இதற்கான முயற்சிகள் தொடங்க உள்ளோம். அதைத்தொடர்ந்து ஓராண்டுகள் இதற்கான பணிகளில் ஈடுபடுகிறோம். ஓராண்டிற்குப் பிறகு தமிழகமே திரும்பிப் பார்க்கும் மிகப் பெரிய திரைப்பட விழாவை நடத்த உள்ளோம்.

எங்கள் திரைப்பட விழாவில் இதுவரை நீங்கள் பார்த்த திரைவிழாக்களில் இல்லாத பல அம்சங்கள் இடம்பெறும். நாங்கள் பத்து வருடங்களாக இதற்கென வேலைகள் செய்துவருகிறோம். ஒரு திரைப்பட விழா எப்படி நடத்த வேண்டும். என்ன மாதிரியான படங்கள் திரையிட வேண்டும். திரைப்பட கலந்தாய்வுகள், மாஸ்டர் கிளாஸ், சினிமா சந்தை என இதுவரை தமிழகம் காணாத ஒரு விழாவாக அது இருக்கும். அதற்கான பொருட்செலவு இந்த ஓராண்டில் திரட்டும் பணியில் ஈடுபடுவது மட்டுமே அடுத்து செய்ய வேண்டியது. இதற்கான ஃபண்ட் குறித்து வேலைகள்தான் அடுத்து நாங்கள் செய்யவேண்டியது. மக்களிடமிருந்தே இதற்கான பொருட்செலவினை ஈடுகட்ட உத்தேசம்.

நீங்களே ஒரு நல்ல படத்தை எடுத்துக்காட்டலாமே?

அதை செய்யத்தான் நிறைய பேர் இருக்கிறார்களே. மேலும் நூற்றுக்கணக்கனோர் சினிமாவை நோக்கி வந்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் இந்தமாதிரி நல்ல சினிமா குறித்த உரையாடலைச் சாத்தியப்படுத்தும் நூல்கள் இதழ்கள் திரைப்பட விழா வேலைகள் செய்யத்தான் ஆளில்லை. அதை செய்யத்தான் ஆட்கள் வேண்டும்.

இவரது செயல்பாடுகள், பேச்சு, பேஸ்புக் பதிவுகள் போன்றவற்றைப் பார்த்தால், தமிழ் சினிமா ரசனையை, அதன் உள்ளடக்கத்தை நல்ல திசையைநோக்கி மாற்றுவதற்கான அலையை அருண் நிச்சயம் உண்டாக்குவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x