

மார்க்சியக் கலைச்சொல் அகராதிக்கும் மார்க்சியக் கலைக் களஞ்சியத்துக்கும் இடையிலான ஒன்றாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் முக்கியக் கருத்துகள், மொழிபெயர்ப்பு செய்யப்படாத அவர்களின் நூல்கள் சார்ந்த கருத்துகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவர் தொடர்புடைய நண்பர்கள், பகைவர்கள், அமைப்புகள் எனப் பலவும் முழுமையாக இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழ் மார்க்சிய அறிஞரான எஸ்.வி.ராஜதுரை இந்த நூலை எழுதியுள்ளார் என்பது சிறப்புக்குரியது. மார்க்சியத்துக்கான ஒரு கையேடாக இந்நூல் இருக்கும். ரூ.1,000 விலையுள்ள இந்த நூல், அறிமுகச் சலுகையாக ரூ.700க்குக் கிடைக்கிறது.
தொடர்புக்கு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், 044 26251968.
எஸ்.ராவின் 100 கதைகள்: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் 100 கதைகளைத் தேர்ந்தெடுத்து, அது குறித்து இணைய உரையாடலை ‘அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம்' நடத்தியுள்ளது. செப்டம்பர் 18 இல் ‘புத்தனாவது சுலபம்’ என்கிற கதையுடன் இந்த உரையாடல் தொடங்கியது.
அக்டோபர் 15 இல் ‘பெரிய தோசை’ என்கிற கதையுடன் இந்த உரையாடல் நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் எஸ்.ராமகிருஷ்ணன் இணையம்வழி கலந்துகொண்டார். சமகால எழுத்தாளர் ஒருவரின் கதைகளைத் தேர்ந்தெடுத்து உரையாடல் நிகழ்த்துவது தமிழ்ச் சூழலில் ஆரோக்கியமான விஷயம்.
தொடர்புடைய சுட்டி: https://www.youtube.com/@user-bh8kb8ct6p/videos
புளியம்பட்டி புத்தகத் திருவிழா: ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடைபெற்றுவருகிறது. 10ஆவது ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தகத் திருவிழா நவம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரை நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
தினசரி மாலை கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சிகளில் இயக்குநர் சீனு ராமசாமி, ஒளிப்பதிவாளர் செழியன், எழுத்தாளர்கள் அஜயன் பாலா, அய்யப்ப மாதவன், பவா செல்லத்துரை, தேவேந்திர பூபதி உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.