நூல் வெளி: தன்னையுண்ணும் தரு

நூல் வெளி: தன்னையுண்ணும் தரு
Updated on
3 min read

‘தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம்போல விருத்தம் பெரிதாய் வருவானை’ என்று கோதை தண்தமிழில் சொல்லுமிடம் ஒன்று நாச்சியார் திருமொழியில் இருக்கிறது. வானத்தின் அளவு யாருக்குத் தெரியும், அது எவ்வளவு பெரியது என்று யார் சொல்வது? அதை, அறிவிப்பவை அந்த வானை ஆரத் தழுவிக்கொள்ளும் விண்மீன்கள்தான். இருண்ட வெளியில் அங்கே ஒன்று, அப்பால் ஒன்று என மின்னும் தாரகைகளைக் கண்டே விண்ணைக் கண்கள் அளவிட முடியும். விண்ணை அளந்தவனை ஆண்டாள் அதுபோல விருத்தம் பெரியவன் என்கிறார்.

எப்படி இவன் விண்ணுருக்கொள்ள முடியும்? அன்னையென, தந்தையென சேவகன்யென சுப்ரமணிய பாரதி போல ஒவ்வொரு வகையாய்த் தன்னைத் தழுவிக்கொள்ளும் கரங்களால் தோற்றம் பெறுகிற உரு அவனது. இழந்த நிலமொன்று அதுபோல அகரமுதல்வனின் ‘கடவுள் பிசாசு நிலம்’ என்ற நூலில் மொழியின் கரங்களால் தழுவப்பட்டுத் தழுவப்பட்டுப் பேருருக்கொள்கிறது.

சமகாலத் தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் முகங்களில் ஒன்றாக இருப்பவர் எழுத்தாளர் அகரமுதல்வன். தான் கண்டு கடக்க இயலாத ஈழ நிலத்தின் கதைகள், அவரது முதன்மைப் பாடுபொருளாக எப்போதும் இருந்துவருகிறது. ‘‘கடவுள் பிசாசு நிலம்’’ என்னும் அவரது சமீபத்திய படைப்பிலும் அப்படியே. படிப்புக்காக யாழ்ப்பாணத்தில் தனது சகோதரியுடன் வசிக்கிற ஆதீரன் காணும் கதை இது. ஈழத்தில் முன்னைப் போர்களும் முள்ளிவாய்க்கால் போருமான காலகட்டத்தின் கொந்தளிப்பை மட்டுமே நாம் நுகர்ந்திருக்கிறோம். மாறாக, சமாதானக் காலகட்டம் எப்படி இருந்தது, அதன் சூழல் எப்படி மெல்ல போர்ச்சூழலை நோக்கி நகர்ந்தது என்பதை இந்த நூலின் காலப்பின்புலமாக அகரன் எடுத்தாண்டிருக்கிறார்.

ஆதீரன் என்கிற சிறுவன் வளரிளம் பருவத்தில் நுழைகிற காலம், அவன் நீங்கிய நிலம் அவனைக் கனவுகளில் அழைக்கிறது. அவனது கனவுகளின் மீமொழியில்தான் கதையின் பெரும்பகுதி இயங்குகிறது. இரு கனவுமொழிகளுக்கு இடையில்தான் இந்த அலைதலின் கதை தொடங்குகிறது.

அவன் ஒரு பள்ளி மாணவன்; தனது வீரக் கனவுகளைப் பள்ளி மேடையில் வசனங்களாகப் பொழிபவன். அந்த நாடக ஆசிரியரை இழுத்துச்செல்லவும், அவர் இறப்பதையும் காண்கிறான். வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு அவனை நகர்த்திச்செல்லும் நிகழ்வுகள், ஒருவகையில் வலுக்கட்டாயமாக அவனை அவனது பால்யத்தில் மகிழவிடாத சூழல்.

நிஜ வாழ்க்கையில் பள்ளியில் படிப்பவர்கள், ஆசிரியர், விளையாட்டுத் தோழரான அண்ணன்கள் ஒவ்வொரு நாளும் சுடப்பட்டுப் பிணங்களாகக் கிடக்கிறார்கள். கனவும் நிஜமும் கலந்த நிலையில், ஆதீரன் பன்னிச்சை மரத்தடியிலும் உப்புக்காட்டிலும் அலைகிறான்; அந்தக் காட்டில் மறைந்திருக்கும் தொன்மங்களைத் தேடுகிறான்; இந்த இரு மனநிலைகளின் ஊடாட்டமாகவே கதை விரிகிறது.

பெண் கதாபாத்திரங்கள் ஏறத்தாழக் கடவுள் சாயலில் உலவுகின்ற படைப்பாக இதைப் புரிந்துகொள்ள முடியும். குடி மூதாயாக வருகிற பூட்டம்மா, போராளிகளுக்கு எந்த நேரத்திலும் உணவளிக்கும் அடைக்கல மாதாவாக வருகிற அம்மா, தன் தம்பியை அடைகாப்பவளாகவும் தனிமையில் மருதனுக்குக் கசிந்துருகுபவளாகவும் எதிர்பாராத கணமொன்றில் போராளியாகவும் மாறிப்போகும் அக்கா, ஆதீரனை விரும்பும் அம்பிகா இவர்களெல்லாம்தான் அவனது அகஉலகின் காவலர்கள்.

இயல்பாகவே யுத்தம் நோக்கி நகரும் ஆதீரனின் கையைப் பிடித்து முதலில் படிப்பைக் கவனி என்று ஒவ்வொருவரும் சொல்கிறார்கள். ஆனாலும் அவனது மனம் தன்னைச் சுற்றி இறந்துவிழும் வீரர்களை நோக்கியே செல்கிறது. மனதுக்கு விருப்பமானவர்கள் இழப்பும், சாகசச் செயல்களின் மீதுள்ள ஈர்ப்பும் அவனை உந்தித் தள்ளுகின்றன. போர் முற்றும் காலத்தில் அவனது கால்கள் தரையை உணருகின்றன; நின்ற கணத்தில் இடறி விழுந்து ரத்தமும் பெருகுகின்றது. அறத்தைக் கைவிடும் சூழலில் நேரில் காணும் கொடூரங்கள், அவனைக் கனவு நிலையிலிருந்து வெளித் தள்ளுகின்றன.

உப்புக்காடு என்று அகரனால் உருவகிக்கப்படும் மாய நிலம் ஒன்று கதையில் வருகிறது. பல வீரர்கள் ஒளிந்துகொண்டு உயிரை காத்துக்கொண்ட இடம். பன்னிச்சை மர வடிவில் நிற்கும் அறம்கேட்ட கண்ணகியின் வடிவான தெய்வம் காவல்செய்யும் இடம். நெடுவல்ராசனும் நாகப்பரும் சூழக் காட்டில் ஆதீரன் அலைந்துகொண்டிருக்கிறான்; அது அவனது மனதின் அலைதல்கள்தாம். அவன் கண்டுபிடிக்கும் நடுகற்களின் கதையைக் காலங்காலமாக அந்த நிலம் பார்த்துக்கொண்டேயிருக்கும் தோற்றம் எழுகிறது. இந்த அலைக்கழிப்பிலிருந்து அவன் விடுபட வாய்ப்பில்லாத சூழல், காட்சிப்படிமங்களாக அவனது அனுபவங்கள் படைப்பின் உணர்வு உச்சங்கள், இருப்பினும் ஆதீரன் வழியே அகரன் மீறிச்செல்கிற மொழியழகுதான் விஞ்சிநிற்கும் பெறுமதி.

பெரிய காயங்களின் வலியை மூளை உணர சிறிய காலதாமதமாகும். கண்ணெதிரே வழிவது தனது ரத்தம் என்பது காட்சியாக மட்டுமே புலப்படும். அதுபோலத் தனது ரத்தம் வழிவதை உணர்வற்றுப் பார்த்துக்கொண்டிருந்த மக்களை இந்நூல் முதன்மையாகக் காட்சிப்படுத்துகிறது. எத்தனை பெரிய பச்சை நிலம் அது. அதைக் குருதியின் வண்ணமாக மட்டுமே பார்க்கச் சபிக்கப்பட்டவர்கள்; அவர்கள் நடக்க வேண்டிய பாதைகள் இருபுறமும் இரும்பு வேலியால் சூழப்பட்டவை; தெரிவொன்றும் கிடையாது. பன்னிச்சை மரமும் ஒருகட்டத்தில் தனது பிள்ளைகளுடன் தானும் சேர்ந்து மரித்துப்போகிறது. சமாதானக் காலம் என்ன ஈட்டியது என்பதை ஒரு சிறுவனின் கேள்விகளால் ஊடுருவும் படைப்பு இது. தொடர்ந்து வரும் எண்ணற்ற கதாபாத்திரங்கள், சட்டென மாறிவிடும் களங்கள் இவற்றை மேம்படுத்த வேண்டிய பகுதிகளாகச் சொல்லலாம்.

நூலக எரிப்பை நேரில் கேள்விப்படாத தலைமுறை நாம், முள்ளிவாய்க்காலைக் கடந்துவந்தோம். இன்றுள்ள தலைமுறைக்கு இவை இரண்டுமே தெரியாது. ஏற்பு வெறுப்பின்றி இலக்கியத்தின் வழியே இவற்றை எப்போதும் நினைவுகூரத்தக்க பணியை அகரமுதல்வன் செய்கிறார். மானுடத் துக்கத்தை எப்போதும் இலக்கியம் ஏந்திக்கொள்கிறது. நெடும்பயணிக்குச் சுமைதாங்கிக்கல் எவ்வளவோ ஆசுவாசத்தைத் தரக்கூடியது, பிள்ளை சுமந்தவள் கல்லாக மாறித் தன் சுமைகளை ஏற்றுக்கொள்கிறாள் என்பதைப் பயணி என்றாவது அறிவான்.

கடவுள் பிசாசு நிலம் (நாவல்)

அகரமுதல்வன்

விகடன் பதிப்பகம்

விலை: ரூ.430

தொடர்புக்கு: 044-42634283

- தொடர்புக்கு: lstvdesign@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in