

வை.ராம்
எழுத்தாளர் இமையத்தின் 4 கதைகள், ப்ரஸன்னா ராமஸ்வாமியின் இயக்கத்தில் அக். 21-ம் தேதி ஆழ்வார்ப்பேட்டை மேடை அரங்கில் நாடகமாக நிகழ்த்தப்பட்டது. ‘இமையத்துடன் ஒரு மாலைப் பொழுது’ என்ற அந்த நாடகத்தைப் பார்க்கையில் ஒரு கதைசொல்லிக்கும் அவரது வாசகருக்கும் வாசிப்பில் இருக்கும் இடைவெளியைக் குறைப்பதில் நாடகக் கலைக்கு இருக்கும் பங்கை உணர முடிந்தது.
இமையத்தின் கதைகள் பலவும் மேடையேற்றத்துக்கு ஏதுவானவை. அவற்றின் பேசுபொருள், நம் அன்றாட வாழ்வின் பல தளங்களை மையமாகக் கொண்டு விரிவதும், அவற்றில் உள்ள கால ஒற்றுமையுமே இதைச் சாத்தியமாக்குகின்றன.
‘காதில் விழுந்த கதைகள்’ என்ற சிறுகதை பல்வேறு 'அக'த்தளங்களை இணைக்கிறது. அலைபேசி உரையாடல்களைக் கவனியாதது போல கவனித்து அவர்கள் யாருடன் எதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கக் கூடும்என்பதை ஊகிப்பதிலுள்ள அலாதி சுவையை, இக்கதையின் நாடகமாக்கம் கொடுத்தது.
‘அணையும் நெருப்பு’ கதையின் சித்தரிப்பில் சந்தோஷம் என்ற பெண்ணின் ஆதங்கத்தில் பொழியும் அவளது கதைக்கு இணையாக ரசிக்கப்பட்டது, இறுதி வரைஅந்த உரையாடலில் வாய் திறக்காமல் நெளிந்துகொண்டிருக்கும் பெயரற்ற இளைஞனின் மவுனம். குவியலாகக் கிடக்கும் துணிகளை மடித்து வைத்துக்கொண்டே தன் கதையைக் கூறும் சந்தோஷத்தின் உடல்மொழியில் வெளிப்படும் யதார்த்தம் கதையின் ஆழத்திலுள்ள ஆறிய வடுக்களின் தன்மையைப் பூடகமாகக் காட்டியது.
‘மயானத்தில் பயமில்லை’ என்ற சிறுகதை மயானத்தில் குழிவெட்டும் வேலை செய்யும் சீதாவுக்கும் அன்று அந்த மயானத்தில் கூலி வேலைக்கு வந்திருக்கும் நாகம்மாவுக்கும் இடையேயான உரையாடலில் விரிகிறது. ஆண்கள் மட்டுமே செய்யும் தொழிலில் ஒரு பெண் ஈடுபட்ட கதையைக் காண்கையில் இதுவும் அன்றாடம்தானே என்று தோன்றும் அளவுக்கு அதை இயல்பாக மாற்றுவது இமையத்தின் கதையாடல் மொழியின் சிறப்பு. அதை எந்த நெருடலுமின்றி அப்படியே வழங்கிய நடிகர்கள் இதற்காகப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
ஓட்டுக்கு ரூபாய் கொடுத்தும் தேர்தலில் தோற்ற ராஜன் என்ற வேட்பாளர் தன்னிடம் பணம் வாங்கியவர்களிடம் அதைத் திரும்பப் பெற முயலும் கதைதான் "தாலி மேல சத்தியம்". எவ்வளவு செலவழித்தாலும் தேர்தல் அரசியலில் இருந்து சாதி அரசியலைப் பிரிக்க முடியாது என்பதைச் சாதாரணக் கதைமாந்தரின் நினைவுகளின் வழியாகவும் அனுபவங்களின் வழியாகவும் பதிவு செய்கிறது இக்கதை.
கதைகளின் தேர்வும், நாடகமாக்கப்பட்ட பாங்கும், இமையத்தின் மொழியைத் தக்கவைத்து நாடக வடிவில் அளித்த விதமும் ப்ரஸன்னா ராமஸ்வாமியின் நாடகக் கலை ஆளுமைக்குச் சிறந்த சான்றாக இருந்தன. எந்தக் கதையும் நடிக்கப்படுகிறது என்று தோன்றாதவாறு அவற்றை இயல்பாக அளித்தநடிகர்களின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது.
நிக்கிலா கேசவன், ஜானகி சுரேஷ், கீதாகைலாசம், பிரசன்னா ராம்குமார், ஸ்மிர்தி பரமேஷ்வர், நந்தகுமார், பிரேம், சிநேகா, கீதாஞ்சலி, அபர்ணா ஆகியோர் நடித்திருந்தனர்