

எழுத்தாளர் ந.முருகேசபாண்டியன் ‘தமிழகக் காதல் கதைகள்’, ‘உலகக் காதல் கதைகள்’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை இவ்வாண்டு கொண்டு வந்திருக்கிறார். ஓர் உணர்வை மையப்படுத்தும் சிறுகதைகளை ஒருசேர வாசிக்கும்போது, அதன் உள்மடிப்புகளை நுணுக்கமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. காதல் காலந்தோறும் கடந்துவந்த பாதையை இந்தத் தொகுப்புகளைக் கொண்டு அவதானித்துக்கொள்ள முடியும். ஒவ்வொரு எழுத்தாளரும் காதலை எப்படி அணுகியிருக்கிறார்கள்; காலம் காதலுக்குள் என்னவாகச் செயல்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் இத்தொகுப்புகள் உதவக்கூடும்.
கு.அழகிரிசாமி முதல் மித்ரா அழகுவேல் வரையிலான எழுத்தாளர்கள் இருபத்தொன்பது பேரின் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இன்று, ‘காதல்’ என்ற சொல் மட்டும்தான் காதலைக் குறிக்கிறது. ‘காமம்’ என்ற சொல் புலன் சார்ந்த இன்பத்தைக் குறிக்கக்கூடிய சொல்லாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. காமத்தை மத நிறுவனங்கள் தனித்தனியான பொருளில் கையாள்கின்றன. புணர்ச்சி இன்பம், பாலின்ப விருப்பம் என்று இச்சொல்லுக்கு அகராதிகள் பொருள் கூறுகின்றன. எனவே, இன்று காதலும் காமமும் ஒன்றில்லை. காதல் என்ற சொல்லையே பொது இடங்களில் இயல்பாகப் பயன்படுத்த முடியாத சூழலே இருக்கிறது.
ஆனால், காதலும் காமமும் ஒன்றையொன்று பிரித்தறிய முடியாதவாறு கலந்தே வெளிப்படும். ‘காமம் அற்ற காதல் மொண்ணைத்தனமானது; காதல் அற்ற காமம் வறட்டுத்தனமானது’ என்று ந.முருகேசபாண்டியன் முன்னுரையில் எழுதியிருக்கிறார். ‘ஞாபகார்த்தம்’ (கு.அழகிரிசாமி), ‘அழியாச்சுடர்’ (மௌனி), ‘நூருன்னிசா’ (கு.ப.ரா.) ஆகியன இத்தொகுப்பின் முதல் மூன்று கதைகள். இக்கதைகள் காதலுக்கும் காமத்துக்கும் இடையிலான மெல்லிய கோட்டை அடையாளம் கண்டு, அதனைப் பிரதிக்கு வெளியே நிறுத்தியிருக்கின்றன.
காதலை வெளிப்படுத்திய தருணத்தைப் பதற்றத்துடன் சொன்ன கதைதான் ‘ஞாபகார்த்தம்.’ இக்கதையின் நிருபமாவும் கோவிந்தராஜனும் தங்களுக்குள்ள காதலைக் கண்டறிந்து, ஒருவரையொருவர் வெளிப்படுத்திக்கொள்ளும் கணங்கள்தாம் கு.அழகிரிசாமிக்கு முக்கியமாகப் பட்டிருக்கின்றன. கோவிந்தராஜனின் மனதுக்குள் பதுங்கியிருக்கும் காதலை நிருபமா தந்திரமாக வெளியே கொண்டுவருகிறாள்.
அவர்களது காதல் இறுதியில் கண்ணீராகப் புன்னகையுடன் வெளிப்படுகிறது. கு.ப.ரா.வின் ‘நூருன்னிசா’ காவியத்தன்மை வாய்ந்தவள். தன் ஒன்பதுவயதில் பிரிந்த காதலனை இருபத்தோரு வயதில் மீண்டும் சந்திக்கிறாள். அதே மாறாத அன்பு. நினைவுகளிலேயே தங்களதுமிச்ச வாழ்க்கையையும் கழித்துக்கொள்ள இருவரும் முடிவெடுக்கி றார்கள். கு.ப.ரா.வால்தான் இப்படியொரு கதையை எழுத முடியும். இக்கதை, காதலுக்கு வேறொரு அர்த்தத்தைக் கூட்டுகிறது.
சொற்கள் உருவாக்கும் சப்தங்களைப் படிமமாக்கிக் காலத்தின் நிழலில் உறையவைத்த மௌனியின் கதை ‘அழியாச் சுடர்.’ பதிமூன்று வயதுப் பெண்ணின் பார்வையில் அவனது உலகம் நின்றுபோகிறது. அந்தக் கணம் அவனது மனதில் எப்போதும் அழியாச் சுடராகத் தன்னை நிறுத்திக்கொள்கிறது. அகத்தூண்டலின் காரணமாக ஒன்பது வருடங்கள் கழித்து, அதே கோயிலுக்குப் போகிறான் அவன். அந்தப் பெண்ணை மீண்டும் சந்திக்கிறான். ‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’ என்கிற தேடலுக்குள் நுழைகிறான்.
அவளது பார்வை அவனது காலத்தை மீண்டும் சுழலவைக்கிறது. அவள் பின்னால் போகிறான். தூண்டப்படாது அணையவிருந்த அவனது ஜீவநாடி, அவளது பார்வையால் மீட்சியடைகிறது. காலத்தின் சாட்சியாக இருக்கும் யாளிகள் கூத்தாடுகின்றன. அவள் பேசுகிறாள். அப்பேச்சு அர்த்தமற்றது. இதிலிருந்து உங்கள் வாசிப்பு இக்கதையை எங்கும்அழைத்துச் செல்லலாம்.
காவியத்தின் சாயைகளுடன் எழுதப்பட்ட முதல் மூன்று கதைகளைத் தொடர்ந்து, தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘நிழல்கள்’ (ஆதவன்), ‘மலையாளத்து மழை’ (ஆ.மாதவன்), ‘வடு’ (பிரபஞ்சன்) ஆகிய கதைகள் காதலின் அடுத்த காலகட்டத்தைத் தின்று செரித்த நேர்த்தியான கதைகளாகும். நடுத்தரவர்க்க இளம் தலைமுறையினரின் ஆழ்மனதை அப்பட்டமாக எழுதியவர் ஆதவன். யதார்த்தத்தில் காதலர்களின் ஆழ்மனம் என்னவாகச் செயல்படுகிறது என்பதை எழுத்தில் கொண்டுவர முயன்றவர்.
காதலையும் அதன் நாசூக்கையும் பேசும் கதைதான் ‘நிழல்கள்’.காதலர்கள் இருவரும் ஒழுக்கப் போர்வையைப் போர்த்திக்கொண்டு, தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் நுண்தருணங்கள்தாம் இக்கதை. காதலின் ஒரு பகுதியே காமம் என்கிறார் ஆதவன். காமம் நம்பிக்கையின் வெளிப்பாடு; ஆனால், அதே காமம் எளிதாகக் கிடைத்துவிடும்போது அதன் மீதான சுவாரசியம் குறைந்துவிடுவதையும் ஆதவன் இக்கதையினூடாக வெளிப்படுத்துகிறார்.
ஆ.மாதவனின் கதை, கொஞ்சம் சினிமாத்தனத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. காதலர்களின் பிரிவு எப்போது வேண்டுமானாலும் நிகழ்ந்துவிடும் என்பதை இப்புனைவு முன்மொழிகிறது. ஆனால், அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பதை ஆ.மாதவன் வாசகர்களிடமே விட்டுவிடுகிறார். பிரபஞ்சன், காதல் கைக்கூடாத ஆணின் வன்மத்தை வெளிப்படையாகவே எழுதிவிடுகிறார்.
காதலின் மீது போர்த்தப்பட்டுள்ள புனிதத்தைப் பிரபஞ்சன் விலக்கிப் பார்க்கிறார். காதலர்களுக்குள் நிகழ்ந்த உடலுறவை மிக இயல்பான நிகழ்வாகவே அணுகியிருக்கிறார். எனவே, இந்த மூன்று கதைகளுக்குள்ளும் காலமும் ஒரு கதாபாத்திரமாக உள்மறைந்திருப்பதை உணரலாம்.
காதல் என்ற உணர்வு என்னவெல்லாம் செய்யும் என்று சொன்ன கதை வண்ணதாசனின் ‘யௌவன மயக்கம்.’ பெண்ணின் அன்பைப் பூரணமாகப் பெற முடியாத காதலன் என்னவெல்லாம் செய்வான் என்பதை வண்ணநிலவனின் ‘புளிப்புக் கனிகள்’ கதையினூடாக அறியலாம். கோபி கிருஷ்ணனின் ‘இதுவும் சாத்தியம்தான்’ என்ற கதை மீண்டும் கு.ப.ரா.வை நினைவூட்டுகிறது. காதலின் உன்னதங்களைச் சிதைவுக்கு உட்படுத்திய கதைகளாகச் சுஜாதாவின் ‘இப்படித்தான் காதலிக்கிறார்கள்?’ வா.மு.கோமுவின் ‘குட்டிப்பிசாசு’ ஆகிய கதைகளைக் கூறலாம்.
இவர்கள் ஏன் இப்படி எழுதினார்கள் என்று இக்கதைகளை விமர்சிப்பதற்கு எவ்விதமுகாந்திரமும் இல்லை. ஏனெனில், இதனையும் காதல் என்றுதான்அழைக்கிறார்கள். காதலின் பல்வேறு பரிமாணங்களை இத்தொகுப்பு வெளிப்படுத்துகிறது. உன்னதமான ஓர் உணர்வு நிலையிலிருந்து, மெல்ல மெல்ல அதன் உன்னதங்கள் சரிந்து, உடல் சார்ந்த பருப்பொருளாகக் காதல் வடிவம் கொண்டிருப்பதை இக்கதைகள் தெளிவுபடுத்துகின்றன. அவரவர்களின் பார்வையிலிருந்து இக்கதைகளைப் புரிந்துகொள்ள வேண்டியது வாசகர்களின் கடமை.
தமிழகக் காதல் கதைகள்
தேர்வும் தொகுப்பும்: ந.முருகேசபாண்டியன்
டிஸ்கவரி புக் பேலஸ்
கே.கே.நகர், சென்னை - 600 078
தொடர்புக்கு: 87545 07070
விலை: ரூ.350
- தொடர்புக்கு: ramesh5480@gmail.com