

பிராங்க்பர்ட் புத்தகக் காட்சி - 2023 கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. 2000களில் நடைபெற்ற புத்தகக் காட்சிகளுடன் ஒப்பிடும்போது அளவில் மூன்றில் ஒரு பங்குதான் இப்போது நடைபெறுகிறது. ஏழு தனி அரங்கங்கள், அதில் ஒவ்வொன்றிலும் மூன்று அடுக்குகள் எனப் பிரம்மாண்டமாக இருந்த புத்தகக் காட்சி, இப்போது சுருங்கி மூன்று தனி அரங்கங்களோடு முடிந்துவிட்டது. கூட்டமும் குறைவு. இருந்தாலும் கலந்துகொண்டோரின் உற்சாகத்திற்குக் குறைவு இல்லாமல் இருந்தது.
2004 புத்தகக் காட்சிக்கு சென்றிருந்தபோது லட்சக்கணக்கான புத்தகங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தமிழ்ப் புத்தகங்கள் இல்லையே என ஏக்கமாக இருக்கும். 2007க்குப் பிறகு தமிழ்நாட்டிலுள்ள ஆங்கில, தமிழ்ப் பதிப்பாளர்கள் சிலர் தங்கள் கால்சுவடுகளை அங்குப் பதிக்கத் தொடங்கினர். அந்த எண்ணிக்கை வளராமல் அப்படியே நின்றுவிட்டது.
இச்சூழலில் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு தங்கள் கனவுத் திட்டமான 'தமிழ் இலக்கியங்களை உலக மொழிகளுக்குக் கொண்டுசெல்வது, உலகிலுள்ள இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டு வருவது' என்பதற்குத் தொடக்கப் புள்ளிவைத்தது. 2022இல் அரசு சார்பில் ஒரு குழு பிராங்க்பர்ட் புத்தகக் காட்சியில் கலந்துகொண்டு, அதுபோல ஒன்றைச் சென்னையில் எப்படிச் சிறப்பாக நடத்துவது எனத் திட்டம் வகுத்தது.
குறுகிய காலத்தில் சென்னையில் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியை 2023 ஜனவரியில் சிறப்பாக நடத்தியது. வெளிநாடுகளிலிருந்து 30க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள், முகவர்கள் கலந்துகொண்டனர். 300க்கும் மேலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஏராளமான தமிழ்ப் புத்தகங்கள் உலகின் பிற மொழிகளுக்குச் செல்வதற்குத் தயாராகிவருகின்றன. 2024 சென்னைப் பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் 2023யைவிட இரண்டு மடங்கு பதிப்பாளர்களையும் முகவர்களையும் கலந்துகொள்ள வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிராங்க்பர்ட் வரலாற்றில் முதன்முறையாகத் தமிழ்ப் புத்தகங்களுக்காக அரசு பிரம்மாண்டமான அரங்கு அமைத்தது. நூற்றுக்கணக்கானவர்கள் அரங்கிற்குள் வந்து தமிழ்ப் புத்தகங்கள் குறித்தும் சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி குறித்தும் ஆவலுடன் தகவல்கள் சேகரித்ததைக் காணும்போது, இலக்கை அடைவது எளிதாகத் தெரிகிறது.
உலகில் பல நாடுகள் தங்கள் நாட்டு இலக்கியங்களையும் படைப்பாளிகளையும் பதிப்பாளர்களையும் அரவணைக்கும் பொருட்டு, காப்புரிமை, மொழிபெயர்ப்பு, அச்சடிக்கும் செலவுகளுக்கு மானிய உதவி, பதிப்பாளர்கள், முகவர்களை அவர்கள் நாட்டுக்கு வரவழைப்பது போன்ற பல நலத்திட்டங்களைக் கொண்டுள்ளன. தமிழ்நாடு அரசும் அந்த வகையில் பல அரிய திட்டங்களைக் கொண்டுவந்து, நடைமுறைப்படுத்தி வருகிறது.
உலகப் பதிப்பாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோஸ் பர்கினோ அரங்கிற்கு நேரில் வந்து தன்னுடைய பாராட்டினைத் தெரிவித்தார். வாய்ப்பு கிடைத்தால் வரும் சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் கலந்துகொள்வதாகக் கூறியுள்ளார். இந்தியப் பதிப்பகங்களின் கூட்டமைப்புத் தலைவர் நவீன் குப்தா, “தமிழ் மொழியிலுள்ள இலக்கிய வளங்களைப் பிற மொழிகளுக்குக் கொண்டுசெல்ல இது முன்மாதிரியாக விளங்கும்” என்றார்.
ஒரு புத்தகத்தை உலக அரங்கிற்குக் கொண்டுசெல்ல எழுத்தாளரால் மட்டும் முடியாது. பதிப்பாளர்கள் அல்லது முகவர்கள் தேவை. பதிப்பாளர்கள் தங்களிடம் உள்ள புத்தகங்களில் எவை உலக சந்தைக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு அதற்கான உரிமப் பட்டியலை அவர்கள் தயாரிக்க வேண்டும்.
சென்னைப் பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் கலந்துகொள்ள உள்ள வெளிநாட்டினரின் பெயர்களும் மின்னஞ்சல்களும் முன்னமே அறிந்து, சந்திப்பை உறுதிசெய்து கொள்ள வேண்டும். தங்களைப் பற்றியும் தங்களுடைய பதிப்பகத்தின் வரலாற்றைக் குறித்தும் இதுவரை வெளியிட்டுள்ள புத்தகங்கள், அவற்றில் பிற மொழிகளுக்குச் சென்ற பட்டியல் எனச் சுருக்கமாக, தெளிவான ஆங்கிலத்தில் அனுப்ப வேண்டும். சந்திப்பு உறுதியான பிறகு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் கண்டிப்பாகச் சந்திக்க வேண்டும். ஒரு பதிப்பாளரிடம் பெறப்படும் நம்பிக்கை, காட்டப்படும் ஒழுங்கு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் உரிமம் அளிக்கப்படுகிறது. அதற்கு நேர மேலாண்மை முதல் படி.
எந்த நாட்டினரைச் சந்திக்கப் போகிறோமோ அவர்களின் இலக்கியங்கள் குறித்து கொஞ்சமாவது புரிதல் தேவை. அந்த நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்கள், புகழ்பெற்ற புத்தகங்கள் போன்ற தகவல்களை அறிந்திருப்பது நல்லது. காரணம் உரையாடல்களில் நாம் அவற்றைப் பயன்படுத்தும்போது நன்மதிப்பு பெறுகிறோம். உலகச் சந்தை என்பது ஆழ்கடலில் மீன் பிடிப்பதுபோல, நீண்ட தூரப் பயணம். பொறுமை அவசியம். ஒரே நாளில், ஒரே சந்திப்பில் அடைந்துவிட முடியாது. அவர்களோடு நட்பு பலப்பட, முதலிரண்டு சந்திப்புகளில் நமக்கு ஒதுக்கப்படும் 15-30 நிமிடங்களை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது இன்றியமையாதது.
நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை மட்டும்தான் சொல்ல வேண்டும். காரணம், நாம் குறிப்பிடும் ஒவ்வொன்றையும் அவர்கள் எழுதிப் பதிவுசெய்துகொள்வார்கள். பின்னாளில் அதில் ஒன்றில் பின்வாங்கும்போதுகூட, நம்முடைய நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும். ஒருவேளை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என்றால், சூழ்நிலையை விளக்கி நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால் அவர்களே மாற்று வழி சொல்வார்கள். நம் மீது கூடுதல் நம்பிக்கையும் உண்டாகும். உலக வணிகத்தில் விலை, தரம் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம், வணிகம் புரிவோரிடையே ஏற்படுகின்ற பரஸ்பர நம்பிக்கை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
- தொடர்புக்கு: olivannang@gmail.com