Published : 05 Jul 2014 10:00 AM
Last Updated : 05 Jul 2014 10:00 AM

சடங்கால் வாழும் கலை

ஓவியம் என்றால் கண்காட்சி, கலை அரங்கம், அருங்காட்சியகம் மற்றும் மேல் தட்டினரின் வீட்டு வரவேற்பறைச் சுவர்கள் என்று நமது நினைவுக்கு வருவது இன்று இயல்பானதே. எனினும் சில நூற்றாண்டுகள் பின்னோக்கிப் பார்க்கையில் இந்திய ஓவியத்தின் நிலை அவ்வாறு இல்லை. ஓவியங்கள், வெகுமக்கள் வாழ்வின் பண்பாடு மற்றும் செம்மை நிலையின் அங்கமாக இருந்து வந்துள்ளதை நாம் காணலாம். கட்டிடக் கலை மற்றும் புழங்குப் பொருட்களின் செம்மைப்பாட்டில் ஓவியங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

பண்டைய காலத்தில் ஓவியர்கள் தலைமுறை தலைமுறையாக இப்பணியில் ஈடுபட்டு 'சித்திரக்காரர்' எனும் வகுப்பினராகவும் இருந்து வந்துள்ளதைக் காண்கிறோம். இவ்வாறு ஓவியம் தீட்டும் தொழிலையே குலத்தொழிலாகக் கொண்டுள்ள வகுப்பினர் வாழும் ரகுராஜ்பூர் எனும் கிராமம் ஒடிஷா மாநிலம் பூரி அருகில் இன்றளவும் உள்ளது.

மஹாராணா, மஹோபாத்ரா போன்ற குடும்பப் பெயர்கள் கொண்ட சித்திரக்கார வகுப்பினர் இன்றளவும் ஒரிசாவின் செவ்வியல் ஓவியங்களைத் தீட்டுவதை பணியாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்திய மரபு ஓவியக் கலை வரிசையில் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த பட்ட சித்திரங்கள் பிரபலமானவை.

பட்டா என்பது துணியையும் சித்திரம் என்பது அதில் தீட்டப்படும் ஓவியத்தையும் குறிக்கும். லிங்கம் (cinnabar), அரிதாரம் (yellow orpiment), ஊசிகாந்தம், கிழிஞ்சல் சுண்ணம், விளக்கு மை, தாவர சாயங்கள் கொண்டு, எலியின் காது ரோமங்களில் இருந்து தயரிக்கப்படும் தூரிகைகள் கொண்டு, சுண்ணம் மற்றும் புளியங்கொட்டை பிசின் கலவையால் சமன் செய்யப்பட்ட துணிகளில் இவர்கள் லாவகமாகத் தீட்டும் பிம்பங்கள் காண்பதற்கு எழிலானவை.

வழிபாட்டுடன் பிணைந்த கலை

மனிதன் காலங்காலமாகத் தனது அரிய விஷயங்களை அரச மரியாதை, கடவுள் வழிபாடு மற்றும் நினைவுச் சின்னங்களுடன் பிணைப்பதை வரலாறுதோறும் காண்கிறோம். இவ்வகையில் பட்ட சித்திர ஓவியக்கலையும் ஜெகநாதர் வழிபாட்டுடன் பிணைந்திருப்பதைக் காண முடியும்.

பூரி ஜெகநாதர் கோயில் கருவறைத் திருமேனிகளின் உருவங்கள் வினோதமானவை. இக்கோயில் தல புராணம், விஷ்வபாசுவால் நிர்மாணிக்கப்படும் வேளையில் அதிக தாமதம் ஆனதால் கஜபதி அரசர் குறுக்கீடு செய்தமையால் மரத்திருமேனிகள் முற்றுப்பெறாமலேயே வழிபாட்டுக்கு வந்துவிட்டன. மரச்சிற்பங்களாக இருப்பதால் ஆண்டுதோறும் பராமரிப்புப் பணிகளுக்காக, சில நாட்கள் மூங்கில் தட்டியிட்டு திருப்பணி செய்கின்றனர்.

பின்னர் திருப்பணி முடிந்ததும் கண்திறப்புச் சடங்குகள் செய்து தேர் திருவிழவில் உலா வரச் செய்து மறுநிர்மாணம் செய்கின்றனர். 12 அல்லது 13 ஆண்டுகளுக்கு ஒரு முறை பழைய சிலை அகற்றப்பட்டு புதிய திருமேனி செய்யப்பட்டு நிர்மாணம் செய்யப்படுகிறது. 'நவகளேவரா' எனப்படும் இச்சடங்கு மிகவும் விமரிசையான கோவில் திருவிழாவாகும்.

மரத்தினாலான இக்கடவுள் திருமேனிகளைப் பருத்தித் துணியால் போர்த்திப் பதம் செய்து வண்ணம் தீட்டும் வேலை, மரபுவழி வந்த சித்திரக்காரர்களுக்கே உரியதாகும். ஜெகநாதர் உருவம் கரிய நிறமாகவும், சுபத்திரை மஞ்சள் நிறமாகவும், பலபத்திரர் வெண்மை நிறமாகவும், சுதர்சனர் செந்நிறமாகவும் வண்ணமிடப் படுகின்றன. இத்திருமேனிகளை அமரவைக்கும் ரத்னவேதி சிம்மாசனம் பொன் நிறமாகவும் பஞ்ச வர்ணங்களால் அமைக்கப்படுகிறது.

சித்திரக்காரர்களின் பங்கு

இவ்வாறு ஆண்டுதோறும் பராமரிக்கவும் அல்லது புதிய திருவுருவம் நிர்மணிப்பதற்காகவும் பதினைந்து நாட்களுக்கு மேல் மூலவர் உருவ தரிசனம் தடை செய்யப்படுகிறது. அந்த நாட்களில் வழிபடுவதற்கு மாற்றாக பலபத்திரர், சுபத்திரை, ஜெகநாதர் உருவங்கள் தாங்கிய பிரம்மாண்டமான பட்ட சித்திர ஓவியங்கள் மூல உருவங்களாக வழிபடப்படுகின்றன. ரத யாத்திரை விழா மிகவும் நீண்ட ஒன்றாகும். நீராட்டு விழா, அனவாசரா, கண் திறப்பு விழா மற்றும் தேர் திருவிழா என பல நிகழ்வுகளின் தொகுப்பாகும். இவற்றில் சித்திரக்காரர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

‘ஸ்னான் ஜத்ரா’ எனப்படும் நீராட்டு விழாவில் மூலத் திருமேனிகள், 108 கசலசங்களால் நீராட்டப்படுவதால் அவற்றின் வண்ணங்களை இழக்கின்றன. இதனால் மராமத்துப் பணிகள் செய்யப்பட்ட பின்னர், ஜேஷ்ட அமாவாசை அன்று ‘அனவாசர பட்டி' ஓவியம் தீட்டும் பணி துவங்கி சுமார் பதினைந்து நாட்களில் முடிக்கப்படுகிறது. ஒரு தலைமை ஓவியரின் கீழ் பத்து, பதினைந்து ஓவியர்கள் கொண்ட குழு, இப்பணியில் ஈடுபடுகிறது. கோவிலில் இருந்து பெறப்பட்ட பருத்தித் துணியில் ஏறத்தாழ நான்கு அடி அகலம் ஐந்தரை அடி உயரம் வீதம் மூன்று படங்கள் தீட்டப்படுகின்றன.

பலபத்திரர் உருவம் அனந்த வாசுதேவர் திருவுருவாகவும், சுபத்திரை உருவம் புவனேச்வரி திருவுருவாகவும், ஜெகநாதர் உருவம் அனந்த நராயணன் திருவுருவாகவும் தீட்டப்படுகின்றன. இவை முற்றுப்பெறாத மூல வடிவங்கள் போல் அல்லாமல் ஒரிய சிற்பசாஸ்திர நூல்கள் குறிப்பிடும் இலக்கணத்தையொட்டிச் செய்யப்படுகின்றன. இவை தவிர பதிதபாவனர் திரு உருவமும் சிறியதாகத் தீட்டப்படுகிறது.

இந்த ஓவியங்கள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் பூசை செய்து மேளதாளத்துடன் கோவிலுக்குக் கொண்டுவரப்பட்டு மூல உருவங்களை மறைத்திருக்கும் மூங்கில் தட்டியில் தொங்க விடுகின்றனர். ‘அனவாசர' தினங்களில் இந்த ஓவியங்களே வழிபடப்படுகின்றன.

பூரி ஆலயம் சார்ந்த சித்திரக்காரர்கள், தேர் மற்றும் பதுமைகளுக்கு வண்ணமிடுதல், மூல வழிபாட்டுத் திருமேனிக்கான பல்வேறு அலங்காரப் பொருட்கள் செய்து வண்ணம் தீட்டல் போன்ற பல பணிகள் இங்கு உள்ளன. அனவாசர பட்டி மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடன் எடுத்துச் செல்வதற்கான ஜெகநாதருடைய திருவுருவ ஓவியங்களை வரைந்து விற்பதை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

‘யாத்ரி பட்டா' என்று அழைக்கப்படும் இவ்வகை ஓவியங்களில் ஜெகநாதர், சுபத்திரை, பலபத்திரர் திருவுருவங்கள், கோவிலின் அமைப்பு, திருவிழாக்கள் போன்றவை தீட்டப்படுகின்றன. இவற்றுள் மிக விரிவானதும் நுணுக்கமானதுமான வரைபடம் ‘சங்கனாபி பட்டா’ ஆகும். பூரி மாநகரின் வரைபடம் என்று சொல்லும் அளவுக்கு கோவில்கள், விழாக்கள் மற்றும் தலபுராணங்கள் இடம்பெற்ற படம் இது. மேலும் இதரக் கடவுள் உருவங்களையும் புராணக்காட்சிகளையும் வரையும் இவர்களது படைப்புகளுக்கு உலகளவில் பெரும் வரவேற்பு உள்ளது.

தொடரும் மரபு

அனவாசர பட்டா ஓவியங்கள் பூரியில் மட்டுமல்லாமல் ஜெகநாதர் வழிபாடு நிலவும் ஒரிசா மாநிலத்தின் பிற முக்கிய இடங்களிலும் தீட்டப்படுகின்றன. ஜெய்பூர், கொராபுட் மற்றும் பார்லெக்முண்டி இவற்றுள் குறிப்பிடத்தக்கவை. பூரியில் தீட்டப்படுவது போல் ஜெகநாதருக்கு கரிய நிறம் அல்லாமல் இங்கு நீலமாதவன் உருவமாக கருநீல வண்ணத்தவராய் படைக்கிறார்கள்.

பல்வேறு குழுக்களால் பலதரப்பட்ட இடங்களில் செய்யப்படாலும் சின்னஞ்சிறிய வேறுபாடுகள் தவிர, அனைத்துமே ஒரு செவ்வியல் மரபைச் சார்ந்து தீட்டப்படுகின்றன. மீண்டும் மீண்டும் புதுமைப்படுத்துவதாலும் புனிதம் காரணமாகப் பழைய படைப்புக்களை நீரில் விசர்ஜனம் செய்யும் பழக்கம் உள்ளதாலும் ஆய்வாளர்களுக்கு மிகவும் தொன்மை வாய்ந்த ஒடிஷா ஓவியங்கள் அதிகமாகக் கிடைப்பதில்லை. இந்த அரிய கலை பற்றிய நூல்கள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன.

இச்செவ்வியல் ஓவியர்களின் கைவன்மை இதர புழங்கு பொருட்கள் மற்றும் பண்பாட்டுப்பொருட்களிலும் காணப்படுகிறது. மரப்பெட்டிகள், சீதனப் பெட்டிகள் மட்டும் அல்லாமல் துறவிகள் பிச்சையேந்தும் திருவோடுகளான மண் மடக்குகள் வரைஅனைத்தும் இம்மரபு ஓவியர்களின் ஸ்பரிசம் பெற்று விளங்குகின்றன. பல மரபு ஓவியக் கலைஞர்களை திக்குமுக்காடச் செய்யும் அச்சுப் பதிப்புகள் மற்றும் டிஜிட்டல் தொழிநுட்ப சாத்தியங்கள் வந்துவிட்டன.

ஆனாலும் சடங்கு சார்ந்த காரணங்கள், தொன்மையைப் பாதுகாத்து இவ்வகை ஓவியர்களும் ஓவிய மரபுகளும் உயிர்த்திருக்கக் காரணமாக அமைந்துள்ளன. கடவுள், சடங்கில் வாழும் கலையாய், கடவுள் சடங்கால் வாழும் கலையாய் உயிர்த்திருக்கும் இந்திய ஓவிய மரபுகளும், மரபு ஓவியர்களும் அன்றாட வாழ்வுடனும் சமூகத்துடனும் இன்றும் பின்னிப் பிணைந்திருக்கின்றனர்.

-பாலாஜி ஸ்ரீநிவாசன், ஓவியர்,
தொடர்புக்கு: sthanuhu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x