கவனத்தை ஈர்த்த கவிதைத் தொகுப்புகள்

கவனத்தை ஈர்த்த கவிதைத் தொகுப்புகள்
Updated on
2 min read

ரு பண்பாட்டின் ஆரோக்கியத்தைக் கணிக்க உதவும் நாடித்துடிப்பு என்று அதன் மொழியில் எழுதப்படும் கவிதைகளைக் கூறலாம். தமிழின் கவிதை மொழிக்கு அவ்விதத்தில் ஆழமான தொன்மையும் அறுபடாததொரு தொடர்ச்சியும் உண்டு. இன்றும் உரைநடைப் புனைவுகளைக் காட்டிலும் அதிகமாகக் கவிதைகள் எழுதப்படுகிற மொழியாக தமிழ் இருப்பதைக் காண்கிறோம்.

சமீப காலத்தில் வெளியான கவிதை நூல்களில் தமக்கேயுரிய தனித்துவமான நோக்கு மற்றும் விவரணை மொழியோடு பலரின் கவனத்தையும் கருத்தை யும் ஒருங்கே ஈர்த்த தொகுப்புகளென்று சபரிநாதனின் ‘வால்’ (மணல் வீடு பதிப்பகம்), பெருந்தேவியின் ‘வாயாடிக் கவிதைகள்’ (சஹானா வெளியீடு), குணா கந்தசாமியின் ‘மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர்’ (காலச்சுவடு பதிப்பகம்), ரவிசுப்ரமணியனின் ‘விதானத்துச் சித்திரம்’ (போதிவனம் வெளியீடு), கண்டராதித்தனின் ‘திருச்சாழல்’ (புது எழுத்து பதிப்பகம்), வெயிலின் ‘கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃபிராய்டு’ (மணல் வீடு பதிப்பகம்), இசையின் ‘ஆட்டுதி அமுதே’(காலச்சுவடு பதிப்பகம்), போகன் சங்கரின் ‘தடித்த கண்ணாடி அணிந்த பூனை’ (உயிர்மை பதிப்பகம்) ஆகியவற்றைக் கூறலாம்.

இவற்றுக்கு அப்பால், நாளும் கூர்மையடைந்துவரும் சமூக முரண்களை, கலாச்சார நெருக்கடிகளை, அவற்றின் உள்ளார்ந்த அரசியலைப் பேசுபவையென்ற விதத்தில் மனுஷ்ய புத்திரனின் ‘இருளில் நகரும் யானை’ ( உயிர்மை பதிப்பகம்), பெருமாள் முருகனின் ‘கோழையின் பாடல்கள்’ ( காலச்சுவடு பதிப்பகம்), யவனிகா ஸ்ரீராமின் ‘அலெக்ஸாண்டரின் காலனி’ (மேகா பதிப்பகம்), நரனின் ‘லாகிரி’ (சால்ட் பதிப்பகம்), கரிகாலனின் ‘தாமரை மழை’ (நான்காவது கோணம்)ஆகிய தொகுதிகளைக் குறிப்பிட வேண்டும். தொடர்ந்து கவிதையில் இயங்கிவரும் முன்னோடிகளான வண்ணதாசனுக்கும் கலாப்ரியாவுக்கும் சென்ற வருடமும் ‘மூன்றாவது முள்’ (சந்தியா பதிப்பகம்), ‘தூண்டில் மிதவை யின் குற்ற உணர்ச்சி’ (டிஸ்கவரி பதிப்பகம்) ஆகிய தொகுப்புகள் வெளிவந்துள்ளன. மற்றொரு தொகுப்பு மகுடேசுவரனின் ‘புலிப்பறழ்’ (தமிழினி பதிப்பகம்) இம்மூன்றுமே அவற்றினுடைய மொழி ஆளுமைக்காகத் தனித்துக் கவனம் கொள்ளப்பட வேண்டியவை. இவைதவிர, சில கவிஞர்களின் முழுக் கவிதைகளும் மொத்தத் தொகுப்பாக வெளிவந்துள்ளன. தேவதச்சனின் ‘மர்ம நபர்’ (உயிர்மை பதிப்பகம்), எஸ். வைதீஸ்வரனின் ‘மனக்குருவி’ (அனாமிகா வெளியீடு), யுவனின் ‘தீராப்பகல்’ ( காலச்சுவடு பதிப்பகம்), ஆகியவை அவ்விதத்தில் முக்கியமானவை. ஒரு மொழிக்குள் முனைந்து புதிய போக்குகளைக் கொண்டுவந்து சேர்ப்பவை மொழியாக்கங்கள். பிரம்மராஜனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ‘மிரோஸ்லாவ் ஹோலூப் கவிதைகள்’ (யாவரும் வெளியீடு), சத்தியமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வெளியான ரூமியின் ‘தாகங்கொண்ட மீனொன்று’ தொகுப்பு (லாஸ்ட் ரிசார்ட்ஸ்) ஆகியன முக்கியமான மொழிபெயர்ப்புகள்.

இவையன்றி சுய அனுபவம், பார்வைக் கோணம், கூறு மொழி, வெளிப்பாட்டு உத்தி ஆகியவற்றில் தனக்கான தனி அடையாளத்தைக் கைக்கொள்ளும் முயற்சியாக எழுதிவருகிற புதியவர்களின் சில தொகுப்புகளும் கவனத்துக்கு உரியவை. பிரதாப ருத்ரனின் ‘கடலாடும் கல் ஓவியம்’, ‘சூரர்பதி கவிதைகள்’, ஜீவன் பென்னியின் ‘அளவில் சிறியவை அக்கருப்பு மீன்கள்’, நா. பெரியசாமியின் ‘குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்’, யாளியின் ‘கேவல் நதி’, சுவாதி முகிலின் ‘எலெட்க்ரா’ முதலியவற்றோடு பாயிஸா அலியின் ‘கடல் முற்றம்’ இமாம் அத்தனானின் ‘மொழியின் மீது சத்தியமாக’ என்ற இரு ஈழத் தமிழ்த் தொகுப்புகளையும் குறிப்பிடலாம்.

ஓலைச்சுவடியிலிருந்தும் கல்வெட்டுகளிலிருந்தும் காகிதத்துக்குள் நுழைந்த தமிழ்க் கவிதை இப்போதைய கணினி யுகத்தில் மின் பதிப்புகளாகவும் கிடைக்கிறது. பேயோனின் ‘வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை’, பாலா கருப்பசாமியின் ‘ஓரிரு வரிகளில் என்ன இருக்கிறது’ ஆகியவற்றோடு பிரமிளின் ‘மேல் நோக்கிய பயணம்’, ‘கைப்பிடியளவு கடல்’ ஆகியவையும் கிண்டில் பதிப்புகளாகக் கிடைக்கின்றன.

தமிழ் பேசுவோரின் நிலவெளி, கண்டங்கள் கடந்தும் விரிந்து கிடக்கிற சூழலில், காலத்தை ஒட்டிய அவர்தம் அனுபவங்களுக்கும் கணக்கில்லை. இவற்றையெல்லாம் மொழிக்குள் உணர்வாக, நினைவாக கொண்டுவந்து சேர்க்கப் புதிய சொற்களை வேண்டி நிற்கிறது இன்றைய கவிதை.

- க.மோகனரங்கன், கவிஞர், இலக்கிய விமர்சகர், தொடர்புக்கு: mohankrangan@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in