

இரு பிளவாகப் பிளந்திருந்த இன்னொரு பாறையில் ஆகாச கங்கையைப் பூமிக்குக் கொண்டு வருவதற்காகப் பகீரதன் கடுந்தவம் செய்த காட்சி சித்திரிக்கப்பட்டிருந்தது. அவனுடைய தவ மகிமையினால் கவரப்பட்டுத் தேவர்கள் முனிவர்கள் எல்லாரும் வந்து இருபுறமும் நிற்கிறார்கள். அவர்களுடைய முகங்களில் வியப்பும் பக்தியும் காணப்படுகின்றன.
இந்த ஒப்பற்ற சித்திரக் காட்சியை எழுதிய ஓவியக்காரன் நகைச்சுவை நிரம்ப உள்ளவனாகவும் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ஒரு மூலையில் கண்ணை மூடிக் கொண்டு தவஞ் செய்வதாகப் பாசாங்கு செய்த ஒரு பூனையின் உருவத்தையும் அவன் எழுதியிருந்தான்.
இந்த மாதிரி எத்தனையோ அற்புதச் சித்திரங்கள் காட்சிகள் ஒவ்வொரு பாறை முகப்பிலும் காணப்பட்டன. இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு ஸ்திரீகளும் புருஷர்களும் சிறுவர் சிறுமிகளும் கும்பல் கும்பலாக அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் எல்லாரும் பட்டுப் பட்டாடைகளை அணிந்து, திவ்ய ஆபரணங்களைப் பூண்டிருந்தார்கள். ஸ்திரீகள் கூந்தலில் மலர் சூடியிருந்தார்கள். புருஷர்கள் கழுத்தில் பூமாலைகளை அணிந்திருந்தார்கள். எங்கே பார்த்தாலும் ஒரே கோலாகலமாகவும் குதூகலமாகவும் இருந்தது.
ஜனங்களின் குதூகலத்தை அதிகப்படுத்துவதற்குச் சித்திரக் காட்சிகளைத் தவிர இன்னும் பல சாதனங்களும் அங்கேயிருந்தன. ஆங்காங்கு வாழை மரங்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிறு சிறு பந்தல்கள் காணப்பட்டன. அந்தப் பந்தல்களில் இசை விருந்துகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு பந்தலிலிருந்து வீணையின் ஒலி எழுந்தது. இன்னொரு பந்தலிலிருந்து குழலோசை வந்து கொண்டிருந்தது. வேறொரு பந்தலில் வேதியர்கள் ஸாமகானம் செய்து கொண்டிருந்தார்கள். மற்றொரு பந்தலில் ஓர் இசைப் புலவர் அப்பர் பெருமானின் தேவாரப் பதிகங்களைப் கல்லுங்கனியப் பாடிக் கொண்டிருந்தார்.
ஜனங்கள் அவரவர்களுக்கு இஷ்டமான இடத்திலே போய் நின்று சித்திரக் காட்சிகளையும், இசை விருந்துகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப் பந்தல்களிலும் கூட்டத்துக்குக் குறைவில்லை. அவல் பொரியும் சர்க்கரையும் பானகமும் நீர்மோரும் வந்தவர்களுக்கெல்லாம் உபசரிப்புடன் வழங்கப்பட்டன.
- மீண்டும் கனவு விரியும்...