

கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஆதி வேளாண் குடிகளான காராளர்கள், நில உரிமையாளர்களாக இருந்து, இன்று ரூபாய் நூறுக்கும் இருநூறுக்கும் உயிரைப் பணயம் வைத்துக் கூலி வேலை செய்பவர்களாக மாறியிருக்கும் வாழ்க்கைமுறை மாற்றத்தைப் பேசுகிறது இக்கதை. பல்வேறு விதமான சுரண்டல்களை எதிர்கொண்டு வாயற்ற சனங்களாக வாழப் பழகிவிட்ட இனத்தின் மூன்று தலைமுறைகளைப் பற்றியது இந்த நாவல்.
சுதந்திர இந்தியா உருவாக்கிய அரசமைப்பின் கீழ் வாழும் மனிதர்களாக மாறிய பின்னும் எவ்விதத்திலும் மாறிடாத வாழ்க்கைநிலை; கல்வி, அரசியல் என எந்த விழிப்பும் அணுகிவிடாதபடி, அறியாமையுடைய மனிதர்களாகவே அவர்களைப் பேணும் பெரும்பான்மைக்கான அதிகாரம்; இயற்கையோடு கூடிய வாழ்க்கைமுறையை, மதிப்பீடுகளைத் தொலைத்து நவீன வாழ்க்கையை அதன் தீமைகளோடு எதிர்கொள்ளத் தொடங்கிவிட்ட இச்சமூகம் கடந்து வந்திருக்கும் துயரார்ந்த சுவடுகள் எனப் பல்வேறு களங்களைக் கொண்டிருக்கிறது இந்தப் படைப்பு. சமதளத்து மனிதர்களான நாம் அறியாத பல சேதிகளைக் கொண்டிருக்கிறது.
கிழக்குத் தொடர்ச்சி மலை மட்டுமின்றி, தேசத்தின் பல்வேறு இடங்களிலும் பெருநிறுவனங்களால் சூறையாடப்பட்டு வரும் இயற்கையை, அதனோடு இயைந்த வாழ்க்கையை உடைய மக்களை ஏதிலிகளாக்கிய அநீதியை இது ஆவணப்படுத்தியுள்ளது. திட்டமிட்டு உருவாக்கப் படும் வறட்சியை, வறுமையை மாற்ற கைக்கூலிகளாகக்கூட மாறிவிடும் எளியவர்களின் இயலாமையை மையமாகக் கொண்ட இப்படைப்பு, பெரும்பான்மைச் சமூகத்தால் வாசிக்கப்படவும் விவாதிக்கப்படவும் வேண்டும்.
மலைமக்களின் மரபார்ந்த வாழ்க்கைமுறை, பண்பாடு, நம்பிக்கைகளைப் பேசும் வேளையில், அம்மக்கள் இயற்கையுடன் கொண்டிருந்த ஆழமான தொடர்பினைப் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கின்றது இப்படைப்பு. அவர்களுக்கு உள்ளிருந்த அடிமைத்தனத்தை இயல்பென ஏற்றுக்கொண்ட மனோபாவம், தோழர்களின் அறிமுகத்தால் பின்னாள்களில் எவ்வாறு மாறுதலடைந்தது என்பதையும், அறியாமை இருள் சூழ்ந்த மலைநிலத்தில் எவ்வாறு எழுத்தறிவின் ஒளிபட்டது, சமய நிறுவனங்கள் எவ்வாறு அச்சூழலைப் பயன்படுத்திக்கொண்டன என்பது குறித்த பதிவுகளையும் கொண்டிருக்கிறது.
வறுமையும் இயலாமையும் சமய நிறுவனங்களாலும் அரசியல் கட்சிகளாலும் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப்பட்டன; சமதள மனிதர்களின் ஆடம்பரமும் பகட்டும் இந்த எளிய மனிதர்களையும் எவ்வாறு பற்றிக்கொண்டன என்று விரித்துரைக்கும் இப்படைப்பில் உணர்வுபூர்வமான கதாபாத்திரங்கள் நம் மனதில் நீங்காத இடம்பிடிக்கிறார்கள்.
குறிப்பாகக் கரியான், சின்னாண்டி போன்றவர்கள். தாய்வழிச் சமூகத்தின் எச்சத்தைக் கண்ட ஒரு சமூகமாகத் திகழ்ந்த இந்தக் காராள வம்சம், நிலமும் காடும் அற்ற ஏதிலிச் சமூகமாக மாறிய நெடுங்கதையே இப்படைப்பு.
இப்படைப்பின் வரலாற்றுபூர்வமான தரவுகளுக்காகப் படைப்பாளர் செழியன் எடுத்துக்கொண்ட அக்கறையும் இவ்விளிம்புநிலை மக்கள் வாழ்க்கை மீது அவர் கொண்டிருக்கும் ஆழ்ந்த பிடிப்பும் பரிவும் அக்கறையும் இப்படைப்பினைச் சமூக அக்கறை மிகுந்த வாசிப்புத் தளத்திற்கு நகர்த்தியுள்ளன. - கவிதா நல்லதம்பி
கிழக்குத் தொடர்ச்சி மலை-காராள வம்சம்
டாக்டர். செழியன்
புலம் வெளியீடு
விலை: ரூ.500
தொடர்புக்கு: 9840603499