

மனோ சின்னதுரையின் ‘கரோனா வீட்டுக் கதைகள்’ முழுக்க முழுக்க கரோனா நாள்களின் அனுபவங்களோடு பிரான்ஸ் தமிழரின் அன்றாட வாழ்க்கையை முறையைத் தாங்கி வந்தன. அதற்கு அடுத்ததாக வெளியான இந்த ‘சிலங்கிரி’ தொகுப்பும் ஊரடங்குத் தருணங்களில் எழுதிய கதைகள்தாம். இதில் சிற்சில கதைகளில் கரோனா என்ற சொல் இடம்பெற்றுள்ளது. மற்றபடி, கரோனா காலத்தில் நடக்கும் உணர்வுபூர்வமான சமகாலப் பிரச்சினைகளின் எதிர்வினைகளாகக் கதைகள் நகர்கின்றன.
மனோ சின்னதுரையின் கதைகள் பலவும் தனிமனித வலிகளும் தோல்விகளும் எவ்வாறு சமூகத்தின் வலிகளாக, தோல்விகளாக அமைந்துள்ளனஎன்பதைக் காட்டுகின்றன. முகநூல் கதைகள், சின்னஞ்சிறு கதைகள் என்பதற்காக இக்கதைகள் சிறுகதைகளின் நளினத்தையும் நுட்பத்தையும் உழைப்பையும் விட்டுவிடவில்லை.
இதில் முதலில் இடம்பெற்றுள்ள ‘யார் மீதும் குற்றமில்லை’ கதையில், ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினை மையப்படுத்தப்பட்டுள்ளது. தற்கொலை வரை சென்று திரும்பிய பள்ளி மாணவி சொல்லும் கூற்று இது. மாணவியின் தற்கொலை முயற்சியால் நான்கு நாள்களாகப் பெற்றோர் பட்டபாடு, சகோதரர்கள் பேயறைந்ததுபோலக் காணப்பட்டது, உயிர் பிழைத்துவிட்டதை அறிந்து சிநேகிதர்களின் ஆரவாரம் என எல்லாவற்றையும் கடந்து இப்போது ஒரு மனநல மருத்துவர் முன் அவள் அமர்ந்திருக்கிறாள்.
உண்மையில், மனநல மருத்துவரைப் பார்க்க அழைத்துச் செல்லப்படுவது தெரிந்தால், அவர் எவ்வகையில் எல்லாம் மனவலியோடு எதிர்ப்பை வெளிப்படுத்துவாரோ அவ்வளவு எதிர்ப்பையும் ஆரம்பத்தில் அவள் தெரிவிக்கத்தான் செய்கிறாள். ஆனால் அங்கு சென்ற பிறகு, மனநல மருத்துவர் மிகவும் சிநேகமாக அமர்ந்து அப்பெண்ணிடம் பேசப்பேச, நமது பேச்சையும் மருத்துவர் கேட்பார் என்று மாணவிக்கு நம்பிக்கை வருகிறது. அவருடைய கேள்விக்கெல்லாம் அவளும் நிதானமாகப் பதில் சொல்லத் தொடங்குகிறாள்.
பரீட்சை முடிவைக் கண்டு நான் பயந்தது உண்மைதான். அதற்குக் காரணம், அது என் குடும்பத்தினரைப் பாதிக்கும் என்பதால். உண்மையில் நான் விரும்பியது இசைத் துறை. ஆனால், பொருளீட்டக்கூடிய துறைக்குத்தான் சமூகத்தில் மரியாதை என்பதால், என் குடும்பத்தினர் விரும்பிய கல்வித் துறையை நானாகத் தேர்ந்தெடுக்கவில்லை. சிறுவயதிலிருந்தே பெற்றோரால், உறவுகளால் எங்கள் தலைக்குள் இவையெல்லாம் விதைக்கப்பட்டுவிட்டன என்கிறாள். மருத்துவரிடம் அவள் சொல்வது, நமக்கும் சேர்த்துச் சொல்வதாக அமைந்துள்ள கதை அது.
குழந்தைகளின் கல்விப் பிரச்சினையை எதிர்கொள்ளுதல் மட்டுமின்றி, சிக்கல் நிறைந்த உலகை எதிர்கொள்ளுதலில் பெண் குழந்தைகளின் தவிப்பான மன உலகத்தையும் மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். வீட்டு வேலைக்குச் சென்று அங்குள்ளவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிச் சிரமத்துக்குள்ளாகும் பெண் குழந்தை ஒன்று, தான் அல்லல்பட்ட கதையே ‘ஒரு நாய்க்குட்டியும் சொல்லும் கதை’, தன்னை ஏமாற்றி மோதிரத்தை வாங்கிக்கொண்ட களவாணி, தன் தாய் தந்தையர் கொல்லப்பட்டுவிடுவார்கள் என்று மிரட்டப்பட்ட நிலையில், பெற்றவர்கள் எவ்வளவு கேட்டும் கடைசிவரை மோதிரம் எப்படிக் காணாமல் போனது என்பதைச் சொல்லாத நிலையில் அழும் சிறுமி, காதல் மணம் புரிந்த கணவன் போதைக்கு அடிமையான நிலையில், அவனை விட்டுப் பிரிகிற நிலையில் குடும்பத்தினர், ‘நீ தேர்ந்தெடுத்ததுதானே... இன்று வந்து ஏன் புகார் சொல்கிறாய், இணைந்து வாழ்’ எனக் கூற... கையறு நிலைக்குத் தள்ளப்பட்ட பெண் எனப் பெண்கள் பலரையும் பரிவோடு அணுகியுள்ளன இந்தக் கதைகள்.
மனிதர்களின் அகச் சிக்கலை விசாரிக்கும் மனோ சின்னதுரை ‘சரா அண்ணர் ஏன் இப்படி நடந்துகொண்டார்’ கதையில் அதன் உச்சத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறார். ‘சரா அண்ணர் இவ்விதம் நடந்துகொண்டதை திவாகரன் குடும்பத்தால் கொஞ்சம் நம்ப முடியவில்லை’ என்று தொடங்குகிறது அந்தக் கதை.
எவ்விதம் நடந்துகொண்டார் என்பதை அந்த வீட்டுப் பெண்ணின் திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வதைப் போல நடித்து, அதைக் கெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதை அவர்கள் கண்டறிந்ததை முதல் பாதி சொல்கிறது. அதற்கான காரணத்தை மூர்த்தி மாஸ்டரிடம் வேதாளம் கேட்க, அவர் சொல்லும் கதையாக மீதிக் கதை உள்ளது. அதற்குக் காரணம், புலம்பெயர்ந்து வந்த பிறகும் அவருக்கு நிம்மதியான வாழ்க்கை அமையவில்லை என்பதுதான்.
கூர்ந்து கவனித்தால் நமது வார இதழ்களில், நாளிதழ்களின் இணைப்பிதழ்களில் வரும் கதைகளைப் போலவே பரிணமித்திருக்கும் கதைகள்தாம் இவை. ஆனால், அவற்றில் உள்ள மேலோட்டத்தன்மை இவற்றில் இல்லை. தான் சந்தித்த ரத்தமும் சதையுமான மனிதர்களை நம்மிடையே உலவவிட்டிருக்கிறார் மனோ சின்னதுரை. ஆனால், அழகியல் பார்வையில் கவனமே இல்லை. இவரது கதைகளில் வரும் பிரான்ஸ் நாட்டில் பூக்களைச் சிதறும் ஒரு மரம்கூட இடம்பெறவில்லை. கரோனா காலத்தில் உட்கார்ந்து எழுதியதாலோ என்னவோ, கதை வாழ்வுக்குள் மிகவும் ஆழ்ந்துவிட்டார் மனிதர்.
சிலங்கிரி கதைகள்
மனோ சின்னதுரை
கருப்பு பிரதிகள் வெளியீடு
விலை: ரூ.120
தொடர்புக்கு: 94442 72500
- தொடர்புக்கு: sridharan.m@thehindutamil.co.in