Published : 27 Jan 2018 10:17 AM
Last Updated : 27 Jan 2018 10:17 AM

புத்தகக் காட்சியை மேலும்விரித்திடுங்கள்!

ந்தியாவின் மிகப் பெரிய கலாச்சாரத் திருவிழாக்களில் ஒன்றான சென்னை புத்தகக் காட்சி வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. எவ்வளவு குறைகள், விமர்சனங்கள் இருந்தாலும் 41-வது ஆண்டாக இதை நடத்தும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் பணிகளை எவராலும் புறக்கணித்துவிட முடியாது. ஆண்டுக்கு ஆண்டு மெருகேறிவரும் புத்தகக் காட்சியில் இந்த ஆண்டில் முந்தைய ஆண்டின் குறைகள் பல களையப்பட்டிருந்தன. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த வகையில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அணி பாராட்டுக்குரியது. அதேசமயம், இதுவரையிலான கட்டமைப்புகளின் நீட்சியாகவே இனியும் புத்தகக் காட்சி தொடர முடியாது என்பதையும் இந்தப் புத்தகக் காட்சி உணர்த்துகிறது. ஒரு பெரும் அறிவியக்கமாக வளர்ந்துவரும் புத்தகக் காட்சியின் பிரமாண்டத்துக்கு முகங்கொடுக்க நிர்வாகிகள் தயாராக வேண்டும் என்பதையும் இந்தப் புத்தகக் காட்சி திட்டவட்டமாக உணர்த்துகிறது.

தமிழ்ச் சமூகத்தை சென்னை புத்தகக் காட்சியால் இன்று கிட்டத்தட்ட முழுமையாகச் சென்றடைய முடிகிறது. அதாவது, புத்தகக் காட்சியின் செய்திகள் கடைசித் தமிழனையும் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. முழுப் பொறுப்புணர்வோடு புத்தகக் காட்சி செய்திகளைத் தமிழ்நாடு முழுக்கக் கொண்டுசேர்க்கும் ஊடகங்களின் ஆக்கபூர்வப் பணிகளையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அரசுத் தரப்பிலிருந்தும் சமூக நல அமைப்புகளிடமிருந்தும் - போதிய என்று சொல்ல முடியாவிட்டாலும் - குறிப்பிடத்தக்க உதவிகள் வந்தடைகின்றன. எப்படியோ லட்சக்கணக்கான வாசகர்களைப் புத்தகக் காட்சி வளாகம் நோக்கி வரவழைத்துவிட முடிகிறது. இதற்கு மேல் வாசகர்களைப் புத்தகங்கள் வாங்க வைப்பதும், அவர்களை மகிழ்ச்சியோடு அனுப்பி வைப்பதும் பதிப்பாளர்களின் கடமை. அதற்கேற்ற செயல்திட்டங்களைப் பதிப்பாளர்களும் சங்க நிர்வாகிகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

இரு முக்கியமான விஷயங்களைச் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது. பதிப்புத் துறையைத் தொழில்முறையாக அணுகும் பதிப்பகங்களே இந்தப் புத்தகக் காட்சியில் விற்பனையில் கோலோச்சின. இதன் வழியே தெரியவருவது என்ன? சமூகத்தின் அக்கறை எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன என்பது குறித்தும், வாசகர்கள் எப்படியெல்லாம் புத்தகங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்தும் பிரக்ஞை உடையவர்களே இனிவரும் காலத்தில் நீடிக்க முடியும் என்பதுதானே? அடுத்து, கடந்த சில ஆண்டுகளில் முக்கியமான புத்தகங்களைக் கொண்டுவந்த பல சிறிய பதிப்பகங்களைப் புத்தகக் காட்சியில் பார்க்க முடியவில்லை. அவர்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய கட்டணத்தில் அரங்குகள் கிடைக்கவில்லை என்பதுதான் இதற்கான காரணம். பதிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இணைக்கப்பட்டால், புத்தகக் காட்சியில் கட்டுப்படியாகக் கூடிய கட்டணத்தில் அவர்களுக்கு அரங்குகள் கிடைத்துவிடும். நூற்றுக்கணக்கான பதிப்பாளர்கள் இப்படி உறுப்பினர்களாகக் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், புதிய உறுப்பினர் சேர்க்கையை இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கப்போகிறது சங்கம்? வாசகர்களுக்கும் சேர்த்து ஏற்படும் இழப்பு இது!

ஒரே விஷயம்தான், இன்னும் விரிவான தளத்தில் பதிப்பாளர் சங்கம் யோசிக்க வேண்டும். சென்னைப் புத்தகக் காட்சியை மேலும் பிரம்மாண்டமானதாக வளர்த்தெடுக்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x