

சென்னை: ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் 2013 செப்.16-ல் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு நிறைவின்போதும் வாசகர் திருவிழா நடத்தப்பட்டு வந்தது. தமிழ் ஆளுமைகளுக்கு மணிமகுடம் சூட்டி மகிழும் விதமாக 2017 முதல் 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் ‘தமிழ் திரு' விருதுகள் வழங்கும் விழாக்களும் நடத்தப்பட்டு வருகிறது. 4-வது ஆண்டாக ராம்ராஜ் காட்டன் வழங்கும் 'இந்து தமிழ் திசை - யாதும் தமிழே 2023' விழா சென்னை காமராஜர் அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
‘யாதும் தமிழே’ விழாவில் ‘தமிழ் சினிமாவும் இலக்கியமும்' என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது. எழுத்தாளரும், எம்.பி.யுமான சு.வெங்கடேசன், திரைப்பட இயக்குநர் வசந்தபாலன், எழுத்தாளரும் நடிகருமான ஷாஜி ஆகியோர் கலந்துரையாடினர். அவர்கள் பேசியதாவது:
எழுத்தாளர் சு.வெங்கடேசன் எம்.பி.: தமிழகத்தின் வளர்ச்சிக்கு திரைப்படங்கள் அளப்பரிய பங்காற்றியிருக்கின்றன. திரைப் படம் மூலம் உருவான மொழியும், உரையாடலும், கருத்தும், கருத்து பரிமாற்றமும் சாதாரணமானவை கிடையாது. தமிழ் சினிமா பொருளாதார ரீதியில் மிகச்சிறியது தான்.
ஆனால் அது மொத்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கம் அவ்வளவு வலிமையானதாக இருக்கிறது. அவற்றின் இன்னொரு பகுதியாக இலக்கியம் விளங்கி வருகிறது. தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களுக்கு இலக்கியங்களின் தாக்கமே காரணம். எனவே, சிறந்த இலக்கியவாதிகள் தமிழ் சினிமாவில் பங்கெடுப்பது அவசியம்.
இயக்குநர் வசந்த பாலன்: தற்போது, வியாபாரமும், சினிமாவின் முகமும் வேறொன்றாக மாறிவிட்டது. இச்சூழலில் இலக்கியத்தை மக்களிடம் கொண்டு செல்வது கடினமான வேலையாக உள்ளது. இதிலும் மணிரத்னம், வெற்றிமாறன் போன்ற ஆசிர்வதிக்கப்பட்டவர்களால் இலக்கியங்களை திரைப்படமாக உருவாக்க முடிகிறது. அவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.
அந்த எண்ணிக்கை அதிகமாகும் போது தான் சினிமாவிலும் இலக்கியம் வளரும். இலக்கியத்தையும் சினிமாவையும் ஒரே தளத்தில் வைத்து பார்க்கவும் முடியாது. முக்கிய ஆளுமைகள் வந்தபிறகு கதை, திரைக்கத்தை, பாடல் உள்ளிட்டவற்றை சுமந்து செல்பவனாக இயக்குநர்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
எழுத்தாளர் ஷாஜி: பொன்னியின் செல்வன், அண்மையில் ஓடிடியில் வெளியான சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்தில் எழுத்தாளர்கள் ஆதவன், அசோகமித்ரன், ஜெயமோகன் ஆகியோரின் சிறு கதைகளை அப்படியே திரை மொழியில் கொண்டு வந்திருப்பார் இயக்குநர் வசந்த்.
இது போன்ற படங்களே இலக்கிய பிரதியை எப்படி சினிமாவாக மாற்ற வேண்டும் என்பதை பயிற்றுவிக்கின்றன. எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை தழுவி அசுரன் போன்று இலக்கியத்தில் இருந்து திரைப்படங்கள் தொடர்ச்சியாக உருவாகி வருகின்றன. இதுபோதுமானதா அல்லது இன்னும் இலக்கியத்துடன் சேர்ந்து தமிழ் சினிமா இயங்க வேண்டுமா என்ற கேள்வி இருக்கிறது. இவ்வாறு அவர்கள் பேசினர்.