

சிருஷ்டிக்கும் காரண காரியங்களுக்கு நம்மை ஒப்புக்கொடுக்காமல், விலகி எதிர்கொள்ளும் தனித்துவமே வாழ்தலின் முழுமை. இம்முழுமையை எப்படிக் கைக்கொள்வது என்பதை அல்லது எதையெல்லாம் விலக்கி வைக்க வேண்டும் என்பதைத் தபசியின் இரு கவிதைத் தொகுப்புகளான ‘எல்லோரும் ஜடேஜாவாக மாறுங்கள்’, ‘ஜான் கீட்ஸ் ஆதவனைச் சந்தித்ததில்லை’ ஆகியவை உணர்த்துகின்றன.
நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் சக மனுசர்/மனுசிகளின் பல்வேறுபட்ட மனப்போக்குகளைச் சித்தரிக்கின்றன கவிதைகள். இதுவெல்லாம் நமக்குத் தேவையில்லை எனச் சட்டென முடிவெடுத்து, அடுத்தகட்ட நகர்வுக்குச் செல்ல வைக்கவும் இவரின் கவிதைகள் துணைபுரிகின்றன. தொட்டதற்கெல்லாம் புகார்கள், சலிப்புகள், எரிச்சல்கள், அவநம்பிக்கைகள், இயலாமைகள் என வாழ்ந்துகொண்டிருப்போரின் மனப்போக்குகளை, கவிதைகளைக் காட்சிகளாகக் கொண்ட ஆல்பமாக இத்தொகுப்புகள் உள்ளன.
இவ்விரு தொகுப்புகளிலும் சமகாலப் புழங்கு மொழி பிரதானமாக வெளிப்பட்டிருப்பதால், கவிதைகளை நெருக்கமாக உணர முடிகிறது. மிக எளிய சொற்களால், மிக எளிய விஷயங்களைப் பெரும் வீச்சோடு சொல்ல வைத்திருக்கிறது கவிதைச் சுதந்திரம். எத்தகைய புது முயற்சியைக் கவிதைகளில் மேற்கொண்டாலும் உணர்வைக் கடத்துதல் சிதைவுறாது இருக்க வேண்டும்.
அவ்விதத்தில் தபசியின் கவிதை முயற்சி வெற்றி கண்டுள்ளதைத் தொகுப்புகளில் காண முடிகிறது. கார்ப்பரேட்டுகள் தங்களின் உற்பத்திப் பொருள்களை வியாபாரமாக்க ‘தினங்கள்’ கொண்டாடப்படுவது, அரசின் மூடத்தனமான திட்டங்களால் எதிர்கொள்ள இயலாத மக்களின் அவதி எனச் சாமானியர்களின் அன்றாடச் சிக்கல்களைத் தன் கவிதைகளுக்கான பாடுபொருளாக மாற்றம் கொள்ளச் செய்வதில் கவிஞரின் திறன் வெளிப்படுகிறது. பெரும்பாலானவர்களின் அன்றாடங்களின் வாழ்வில் தவிர்க்க இயலாது போன சமூக ஊடகங்களின் கருத்துக் கூறல், அதற்கான குறியீட்டுப் பதில்கள், அதனால் உருவெடுக்கும் மனப்போக்குகள் கவிதைகளில் வெளிப்பட்டிருப்பது நன்று.
கவிதைகளில் உரைநடைத் தன்மை மேலோங்கி இருப்பினும், கவிதை உணர்வை வெளிப்படுத்தத் தவறாதிருப்பதால் சலிப்பற்று வாசிப்பைத் தொடர முடிகிறது. நாம் பெரும்பாலும் எதிர்கொள்ள நேரிடும் புறக்கணிப்புகளை எளிதாகக் கடந்து வர இவரின் கவிதைகள் நம்பிக்கையூட்டும். இலக்கிய உலகில் மிகச் சாதாரணமாக நிகழ்ந்தபடி இருக்கும் கோஷ்டி சேர்ப்பு, சாதி சேர்ப்பு, கருத்துச் சேர்ப்பு, கட்சி சேர்ப்பு எனக் கூட்டமாகி, கூட்டத்துக்குள் இருப்போரைக் கொண்டாடும் போக்கின் அபத்தத்தையும் கவிதையாக்கி இருக்கிறார்.- ந.பெரியசாமி
எல்லோரும் ஜடேஜாவாக மாறுங்கள்
ஜான் கீட்ஸ் ஆதவனைச் சந்தித்ததில்லை
தபசி
வேரல் புகஸ்,
விலை: முறையே ரூ.250,
தொடர்புக்கு: 95787 64322