

உலகமயமாக்கலுக்குப் பிறகு பல்வேறு பண்பாட்டுப் பின்புலம் கொண்ட உணவு வகைகள் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. உணவு தொடர்பான காட்சிகளை, சமூக ஊடகங்கள் வழி அடிக்கடி இப்போது எல்லாரும் பார்க்கின்றனர். இதன் வழியாக சில ஊர்களின் பிரத்யேகமான உணவகங்களின் உணவு வகைகளும் இன்று தமிழ்நாடு முழுக்கப் பிரபலமாகியிருக்கின்றன. அம்மாதிரி உணவு வகைகளைத் தேடிய பயணத்தை அழகான மொழியில் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் ‘கொல பசி’ நூலில் எழுதியுள்ளார்.
மதுரை, திருநெல்வேலி, தஞ்சை, ஈரோடு, ஆம்பூர், கரூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சென்னை எனத் தமிழ்நாட்டில் பரவலாகச் சுற்றி, சுவைமிகு உணவு வகைகளைத் தேடி வாசகர்களுக்கு விளம்பியுள்ளார் முத்துகிருஷ்ணன். மதுரையின் நொறுக்குத் தீனி பற்றிக் கூறும் கட்டுரையின் தலைப்பில், ‘இரண்டாயிரம் எண்ணெய்ச் சட்டிகளில் மிதக்கும் நகரம்’ என வர்ணித்திருக்கிறார்.
புத்தூர் ஜெயராமன் கடை, கமலாத்தாள் பாட்டியின் ஒரு ரூபாய் இட்லிக் கடை என உணவகங்கள் பற்றியும் பள்ளிப்பாளையம் சிக்கன், சேலம் ராக்கெட் ரோஸ்ட், கடையம் வத்தல் குழம்பு, விருதுநகர் பொரிச்ச புரோட்டா என உணவு வகைகள் குறித்து ருசியைத் தூண்டும் வகையில் முத்துகிருஷ்ணன் இந்நூலில் பகிர்ந்துள்ளார்.- குமணன்
கொல பசி
அ.முத்துகிருஷ்ணன்
‘இந்து தமிழ் திசை’ப் பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 74012 96562 / 74013 29402
ஆன்லைனில் வாங்க: store.hindutamil.in/publications
துலங்கும் ஓர் இலக்கியக் காலம்: தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் யூமா வாசுகி. ‘ரத்த உறவு’, ‘மஞ்சள் வெயில்’ போன்ற சிறந்த நாவல்களைத் தமிழுக்குத் தந்தவர். சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஓவியம், கவிதை எனப் பல வடிவங்களில் கலைஞனாக வாழ்பவர் யூமா.
அவருடன் பத்திரிகையாளர்கள், கவிஞர்கள், சிறார் எழுத்தாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பு இது. கவிதையியல் குறித்த கேள்வி ஒன்றுக்கு, மொழியின் கையறு நிலை குறித்த மனத் துணிபை யூமா வெளிப்படுத்துகிறார்.
சிறார் இலக்கியம் தொடர்பான உரையாடலில், ‘உலகின் ஆன்மக் களிப்பு குழந்தைகளால்தான் சாத்தியமாகிறது’ எனக் கவித்துவமான பதிலை அளிக்கிறார். யூமா நடத்திய ‘குதிரை வீரன் பயணம்’ இதழில் சுஜாதாவின் கவிதைத் தேர்வுகளை விமர்சித்து பெருமாள் முருகன் எழுதிய கட்டுரையை ஒட்டி, சுஜாதா பகிர்ந்த மனக் கசப்பு பற்றி ஒரு பதிலில் பகிர்ந்திருப்பது கடந்த காலத்தையும் மனிதர்களையும் உணர்த்தும் பதிவாக இருக்கிறது. யூமா வாசுகி என்கிற படைப்பாளன் வழி ஓர் இலக்கியக் காலகட்டத்தையும் இந்நூல் வாசகர்களுக்குத் துலங்கச் செய்கிறது. - ஜெய்
யூமா வாசுகி நேர்காணல்கள்
தேநீர் பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9080909600
சென்னை ஆளுமைகள்: சென்னையின் முன்னோடி ஆளுமைகளைக் குறித்த புத்தகம் இது. பிரிட்டிஷ் இந்தியாவிலேயே பல முன்னெடுப்புகளுக்கு சென்னை முதன்மையான பங்களிப்பை வழங்கியுள்ளது. அந்த வகையில் அறியப்படாத ஆளுமைகள் பலரைப் பற்றியும் கவனத்துடன் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. சமூக மாற்றத்துக்கான நாடகங்களை எழுதிப் பெரும் பங்களிப்பு செய்தவர் கோமல் சுவாமிநாதன். இவரது நாடகமான ‘தண்ணீர் தண்ணீர்’ கே.பாலசந்தரால் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது பதிவாகியுள்ளது.
மாற்று நாடக முயற்சிகளை ‘கூத்துப்பட்டறை’ நாடக இயக்கத்தின் வழி முன்னெடுத்த ந.முத்துசாமி குறித்த கட்டுரையும் இதில் இடம்பிடித்துள்ளது. இந்திய அளவில் புகழ்பெற்ற இதய அறுவைச்சிகிச்சை மருத்துவர் கே.எம்.செரியன், அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவராகச் செயலாற்றிய மருத்துவர் சாந்தா ஆகியோர் குறித்தும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதுபோல் 26 ஆளுமைகள் குறித்து நூலாசிரியர் கெளசல்யா சந்தானம் எழுதியுள்ளார். - குமரன்
பயோனியர்ஸ் - ஸ்டார்ஸ் இன் தெ மெட்ராஸ் கேலக்ஸி
(Pioneers - Stars in the Madras Galaxy)
கெளசல்யா சந்தானம்
தி இந்து குரூப் பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட்,
விலை: ரூ.499
தொடர்புக்கு: https://publications.thehindu group.com/bookstore/
பழைய மதுரை: தமிழின் முன்னோடிப் பயண எழுத்தாளர்களில் ஒருவர் சோமலெ. சோம.லெட்சுமணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், பல உலக நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டவர். ஏ.கே.செட்டியாரின் பயண எழுத்தால் கவரப்பட்டு, எழுத வந்த இவர் எழுதிய ‘மதுரை மாவட்டம்’ என்ற நூல் அவரது நூற்றாண்டை ஒட்டி மறுபதிப்பாக வெளிவந்துள்ளது.
பழைய மதுரையைக் குறித்தான பலவற்றையும் இந்த நூல் பதிவுசெய்துள்ளது. மதுரை நகர் பற்றிய பழந்தமிழ்ப் பாடல் குறித்த பதிவுகள், நிர்வாகரீதியாகப் பிரிக்கப்பட்ட மதுரை மாவட்டத்தின் பகுதிகள் குறித்த பதிவுகள் என இந்தத் தொகுப்பு, மதுரை மாவட்டம் குறித்த ஒரு கையேடாக இருக்கும். - விபின்
மதுரை மாவட்டம்
சோமலெ
காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.550
தொடர்புக்கு: 98404 80232