

குமாரசெல்வாவின் ‘காக்காம்பொன்’ தொகுப்பில் உள்ள கதைகள் தனித் தனியாகவோ, இணைத்தோ வாசிப்பதற்கான சுவாரசியத்தையும், புதிய அறிதல் சாத்தியங்களையும் வழங்குகின்றன. குறிப்பிட்ட கால, பகுதிசார் தன்மையையும் உலகளாவிய தன்மையையும் ஒருசேரப் பண்புருக்களாகக் கொண்டிருக்கின்றன இந்தக் கதைகள். வர்க்கம், சாதி, பாலினம், மதம், அரசியல், ஆன்மிகம், வாழ்வு, மரணம் ஆகியவை சார்ந்து நடக்கும் எழுத்து விசாரணையில், குமாரசெல்வாவின் அராவுதல் எல்லைகளைக் கடந்த ஒரு மெய்த்தேடலைத் துழாவுகின்றன.
‘ஒரு வாளி சாம்பார்’, ‘நார்க்கட்டில்’, ‘அமர விளை’, ‘வெனிலா’, ‘காக்காம்பொன்’ ஆகிய ஐந்து கதைகளுக்குள்ளும் பொதுவான அம்சங்களும் தனிச்சிறப்பான கூறுகளும் உள்ளன. பொதுவான அம்சமாகக் கதாபாத்திரங்களில் வெளிப்படும் வர்க்கப் பின்னணியைக் குறிப்பிடலாம். பெரும்பாலான கதாபாத்திரங்கள் அடித்தட்டுவர்க்க மனிதர்கள். இவர்கள் மத்தியதரவர்க்கத்தினரால் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ‘நார்க்கட்டில்’ கதையில் வரும் திருப்பதி, ஆசிரியையான தன் சகோதரியாலும், அவள் கணவன் குடும்பத்தினராலும் தெருவுக்குத் தள்ளப்படுவதைச் சுட்டிக்காட்டலாம்.
அடித்தட்டுவர்க்கக் கதாபாத்திரங்களின் குணக்கேடுகளை இந்தக் கதைகள் விவாதிக்கத் தயங்கவில்லை. ‘ஒரு வாளி சாம்பார்’ கதையில் தவளை, கொசு எனச் சுட்டப்படும் கதாபாத்திரங்கள் சராசரிக்கும் கீழான மனித நடத்தையையே வெளிப்படுத்துகின்றன. அடித்தட்டு என்பதாலேயே புனிதப்படுத்தவோ, உன்னதப்படுத்தவோ செய்யவில்லை.
இரண்டாவதாகக் காணப்படும் பொது அம்சம், எல்லாக் கதைகளிலும் மரணம் சம்பவிக்கிறது. அது கதை தொடங்கும் காலத்துக்கு முன்பாகவோ கதை தொடங்கும் தருணத்திலோ கதையின் இடையிலோ நடக்கிறது. இந்த மரணங்கள் துன்பியல் தன்மையை வழங்கினாலும் அவை துயரக் கதைகள் அல்ல. இந்த மரணங்கள் நிகழும் அடித்தட்டு மக்கள் வாழ்வில் மரணத்துக்குத் துக்கப்படும் வாய்ப்பு வசதிகள்கூட இல்லை.
‘அரச வம்சம்’ கதையில் வரும் சூக்கிராண்டி மகன் கொச்சப்பியின் உடனடிப் பிரச்சினை தந்தையின் உடலை அடக்கம் செய்வதுதான். கடன்சூழ்ந்த வாழ்க்கையில் அழுது அரற்றும் அவகாசத்தை வாழ்க்கை அனுமதிக்க மறுக்கிறது. ‘காக்காம்பொன்’ கதையிலும் கலாவின் தாய் இறக்கிறாள்.
குடிகாரத் தந்தை ஓடி ஒளிகிறார். தாயின் சடலத்தை அடக்கம் செய்வதுதான் முதன்மைப் பிரச்சினையாகிறது. குமாரசெல்வாவின் கதைகளில் மரணங்களில் ஒப்பாரிகள் குறைவாக ஒலிக்கின்றன. இதில் காணும் துன்பியல் கதாபாத்திரங்கள், பைபிளில் வரும் யோபுவைப் போன்றவர்கள். தங்கள் துன்பத்துக்கான காரணத்தை அறியாதவர்கள். அல்லது தங்கள் துன்பத்தைப் புகாரின்றி ஏற்பவர்கள்.
‘மாற்றத்தை நிரந்தரமாகக் கொண்ட சமூகத்தில், ஒன்றை நிறுவுவதல்ல எழுத்தின் பணி. மாறாக, அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்துவதே அதன் பணி’ என்கிறார் சார்த்தர். ‘அரச வம்சம்’ கதையில், கொச்சப்பியை நாடாண்ட சாதி என்று சொல்லி, அவன் தந்தையை அடக்கம் செய்ய கிரீடம், செங்கோல் வாங்க சாதி சங்கத்தினர் பணம் கேட்பர். வீட்டை அடகுவைக்கக் கூறுவர். கொச்சப்பி இணங்கும் தறுவாயில் அவனுடன் கூலி வேலை செய்யும் கம்யூனிஸ்ட்காரன் வந்து பொருளுதவி செய்து மரணக் குழியும் தோண்டுவான்.
இக்கதையில் கம்யூனிஸ்ட் தோழரைக் காட்டும் விதத்துக்கும், ‘கயம்’ தொகுப்பிலுள்ள ‘குறுவெட்டி’யில் வரும் தோழரைக் காட்டும் விதத்துக்கும் வித்தியாசங்கள் இருக்கும். ‘குறுவெட்டி’யில் அரசின் கண்காணிப்பை ஒத்த அதிகாரத்தைக் கட்சி ஊழியன் பாவிப்பான். ‘அரசவம்ச’த்தில் காட்டப்படும் சாதக மதிப்பீடு ‘குறுவெட்டி’யில் இருக்காது.
‘காக்காம்பொன்’னில் குமாரசெல்வா முன்வைக்கும் அரசியல் என்னவென்பது மிகுந்த எதிர்பார்ப்பு மிக்க கேள்வி. அவருக்கு மார்க்சியம், திராவிட இயக்கம், பெரியார், அம்பேத்கர், பெண்ணியக் கருத்துக்களின் பால் அறிமுகமும், கோட்பாட்டுப் புரிதலும் இருப்பது இந்தக் கதைகளிலிருந்து நாம் பொதுவாகப் பெறக்கூடிய விஷயங்கள். அது குமாரசெல்வாவின் கதைகளின் கருப்பொருளுக்குச் செறிவையும் கால மாற்றத்துக்கு ஏற்ற ரீதியிலான தகவமைப்புடன் கூடிய கதைகளை அவர் எழுதவும் பயன்படுகிறது.
நேரடியான அரசியல் கொள்கையைக் குமார செல்வாவின் கதைகள் முன்வைக்கவில்லை. ஆனால், ஒரு பொதுச் சமூக உரையாடலை அனைத்துப் பிரச்சினைகளின் மீதும் மேற்கொள்ள விழைகின்றன.
குமாரசெல்வாவின் எழுத்துகளை மதிப்பிடுவது பற்றி ஒன்றைச் சொல்ல வேண்டியுள்ளது. ஒரு தேசிய இனத்துக்கான வரையறுப்பில் நான்கு முக்கியமான அம்சங்களை வலியுறுத்துகிறது மார்க்சியம். பொதுவான நிலப்பரப்பும், பொதுவான மொழியும் முக்கிய அம்சங்கள். இது எனது மொழி, எனது நிலப் பரப்பு, எனது மக்கள் என்ற ஆர்வம் பொங்க வேண்டும்.
தேசியம் என்பதற்கு பெனடிக் ஆண்டர்சனின் கூற்று மிக முக்கியமானது. அ என்ற ஊரில் வாழும் ஒருவனுக்கு ஆ என்ற ஊரில் வாழ்பவனைத் தெரியாது. இருவரும் கண்ணால் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இருவரையும் இணைக்கும் ஒரு தங்குதடையற்ற தோழமை உணர்வைத் தேசியம் என்பார். குமாரசெல்வாவின் படைப்புகள் இந்த இடத்தில்தான் முக்கியத்துவம் பெறுகின்றன.
மலையாளம் என்று நம்பப்படும் பல சொற்களைத் தனது பழந்தமிழ் இலக்கிய வாசிப்பின் அறிவால் தமிழுக்கு மீட்டுத் தந்திருக்கிறார். தமிழ்நாட்டின் பிற பகுதி மக்களை இந்தக் கடைநிலைத் தமிழ்ப்பரப்பு மீது ஆர்வம் கொள்ளவைக்கும் எழுத்து அவருடையது. இது நவீன தமிழ்த் தேசியத்தின் இலக்கியம் எனலாம். இந்தத் திக்கில் இது குறித்து இன்னும் விரிவாக விவாதத்தைக் கோரி நிற்கிறது, குமாரசெல்வாவின் ‘காக்காம்பொன்’.
நேரடியான அரசியல் கொள்கையைக் குமார செல்வாவின் கதைகள் முன்வைக்கவில்லை. ஆனால், ஒரு பொதுச் சமூக உரையாடலை அனைத்துப் பிரச்சினைகளின் மீதும் மேற்கொள்ள விழைகின்றன.
காக்காம்பொன்
குமாரசெல்வா
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.230
தொடர்புக்கு: 9940446650