

அமெரிக்கத் தமிழர்களின் விளக்கு இலக்கிய அமைப்பின் 27ஆம் ஆண்டுக்கான எழுத்தாளர் புதுமைப்பித்தன் நினைவு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வறிஞர் பொ.வேல்சாமிக்கும் எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்விக்கும் 2022க்கான விருது வழங்கப்படவுள்ளது. கட்டுரை, விமர்சனம், ஆய்வு, பதிப்பு, உரையாடல் எனத் தொடர்ந்து இயங்கிவருபவர் பொ.வேல்சாமி. ‘பொற்காலங்களும் இருண்ட காலங்களும்’, ‘கோவில் நிலம் சாதி’, ‘வரலாறு என்ற கற்பிதம்’ போன்ற நூல்களின் ஆசிரியர்.
தமிழில் கவனம் பெற்ற யதார்த்தவாத எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வி. அடித்தட்டு மக்களின் பாடுகள்தாம் இவரது எழுத்தின் பாடுபொருள். கதைகள் வழி நிலம், பண்பாடு ஆகிய அம்சங்களைச் சொல்வதில் விற்பன்னர். அதனால், தமிழின் ‘சிறந்த மானுடவியல் எழுத்தாளர்’ என்கிற அடையாளமும் பெற்றவர்.
‘மாணிக்கம்’, ‘கீதாரி’, ‘அளம்’, ‘கற்றாழை’ உள்ளிட்ட பல நாவல்கள் இவரது பங்களிப்புகள். இந்த விருது கேடயமும் ரூ. 1,00,000 பரிசுத் தொகையும் கொண்டது. எழுத்தாளர் சி.மோகன், ஆய்வாளர் வ.கீதா, மொழிபெயர்ப்பாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் இந்த விருதுக் குழுவின் நடுவர்களாகச் செயலாற்றினர்.
அஞ்சல் அட்டையில் எழுத்தாளர்கள்! - எழுத்தாளர்களைக் கெளரவிக்கும் வகையில் தமிழின் முன்னணி எழுத்தாளர்களின் ஒளிப்படம் கொண்டு அஞ்சல் அட்டையை மெட்ராஸ் போஸ்ட்கிராசிங் கம்யூன் அமைப்பு உருவாக்கியுள்ளது. எழுத்தாளார்கள் பற்றிய குறிப்புகள், அவர்களது புத்தகத்தின் அட்டை என இந்த அஞ்சல் அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கு.அழகிரிசாமி, பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் அஞ்சல் அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அட்டை ஒன்றின் விலை ரூ.10. தொடர்புக்கு: 99404 46650.
அம்பைக்கு டாடா விருது: இந்திய அளவில் வழங்கப்படும் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான டாடா வாழ்நாள் விருது தமிழ் எழுத்தாளர் அம்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் பெண் எழுத்துக்கான முன்னோடிகளில் ஒருவர் அம்பை. அதே நேரம் தன் கதைகளை இயல்புடன் உருவாக்கியவர் அவர்.
யாரும் சஞ்சரிக்காத பெண்கள் உலகத்துக்குள் அவர்களுள் ஒருவராக, வேற்று மனுஷியாக என இருவேறு நிலைகளில் நுழைந்து தன் கதைகளுக்குள் அவர்களை இயல்புடன் சிருஷ்டித்தவர் அம்பை. அம்பையின் இயற்பெயர் சி.எஸ்.லட்சுமி. ஆங்கிலத்தில் இதே பெயரில் கட்டுரைகள் எழுதிவருகிறார். சாகித்திய அகாடமி விருது, கிராஸ் வேர்ட் விருது ஆகிய விருதுகளையும் அம்பை பெற்றுள்ளார்.
எழுத்தாளரின் நூல் கொடை: சென்னை விவேகானந்தா கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் ‘திருக்குறளில் மேலாண்மை கருத்துக்கள்’ என்னும் தலைப்பில் சோம. வீரப்பன் உரையாற்றினார். சோம.வீரப்பன் இந்தக் கல்லூரியில் படித்தவர். தான் படித்த கல்லூரிக்கு 101 நூல்களை, அந்த நேரத்தில் சோம.வீரப்பன் அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார். தனது தமிழ்ப் பேராசிரியர் ஜெகநாதச்சார்யார் நினைவாக அவரது மகன் ராம் முன்னிலையில் இந்த நூல்களை அவர் வழங்கியுள்ளார்.