

வாழ்க்கை என்பதே ஒரு சூத்திரம்தான் எனச் சாதித்தவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். தமது வாழ்க்கையை அதன்படி திட்டமிட்டுச் செயல்படுத்தி வெற்றி கண்டவர்கள் அதைச் சொல்லும்போது, அதற்குத் தனிக் கவனம் கிடைக்கிறது. அதுபோல் வெற்றிக்கான சூத்திரங்களைச் சொல்லும் நூல் என இதைச் சொல்லலாம். ஒரு காரியம் செய்வதற்கு முன் என்னென்ன செய்ய வேண்டும் என்று சாணக்கியர் பகிர்ந்ததை மேற்கோள் காட்டுகிறார் நூலாசிரியர். அதற்கு உதாரணமாக நூலாசிரியர் சந்தித்த ஓர் அனுபவத்திலிருந்து வாசகர்களை சாணக்கியரின் வகுப்பறைக்கு அழைத்துச் செல்கிறார்.
அங்கு சாணக்கியர் நமக்கு எளிமையாகப் பாடம் நடத்துகிறார். ஒரு காரியத்தைக் கையில் எடுக்கும் முன் மூன்று கேள்விகளை நமக்குள்ளே கேட்டுக்கொள்ளச் சொல்கிறார். ஒன்று; ஏன் இதைச் செய்கிறேன். இரண்டு; இதனால் என்ன நடக்கும். மூன்று; நாம் எடுத்துக்கொள்ளும் இந்தக் காரியத்தில் வெற்றிபெற முடியுமா? காரியம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது சிறியதோ பெரியதோ இந்தக் கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும் என சாணக்கியர் வழி ஆலோசனையை இந்தப் புத்தகம் வழங்குகிறது.
நூலாசிரியர் சோம.வீரப்பன் எல்லாக் கட்டுரைகளிலும் ஒவ்வொரு விஷயத்தைச் சொல்வதற்கும் தனது அனுபவத்திலிருந்து ஒரு சம்பவத்தை எடுத்துவைக்கிறார். இந்தத் தன்மை வாசகர்களை நெருக்கமடைய வைக்கிறது. உதாரணமாக, வங்கிக் காசாளர் ஒருவரைப் பற்றிய அனுபவக் கதை. வாழ்க்கையில் எவ்வளவு தூரம் நாம் வளைந்துகொடுக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகச் சொல்லப்படும் சம்பவம். காசாளர் தாமதமாக வருவதால், அவர் மீது புகார்.
அவரைப் பிடிக்காதவர்களும் காசாளருக்குக் கிடைக்கும் கூடுதல் வருமானத்துக்காகவும் அவருக்கு அந்தப் பணியை வழங்கக் கூடாது என வங்கி ஊழியர்கள் பலரும் அதிகாரியிடம் சொல்கிறார்கள். அவர் தடாலடியாகச் செயல்படவில்லை. மாறாக, வங்கியின் சேவைக்காக வளைந்து கொடுக்கிறார். அதற்கு ஜன்ஸ்டீனையும் மேற்கோள் காட்டுகிறார்; ‘ஒருவரின் கெட்டிக்காரத்தனம் அவர் எவ்வளவு வளைந்து கொடுக்கிறார் என்பதை வைத்தே அளவிடப்படும்’.
செய்யவிருக்கும் பணிகளைத் தள்ளிப்போடுவது இன்றைக்குப் பலருக்கும் இருக்கும் பொதுவான ஒரு பலவீனம். ஆனால், பலவீனம் என்று தெரியாமல் நம்மில் பலரும் அதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறோம். இதை ஒரு சினிமா இயக்குநரின் சுவாரசியமான கதை கொண்டு விளக்குகிறார்.
தமிழ் சினிமாவின் பெரிய இயக்குநர் ஒருவரின் உதவி இயக்குநர் எப்படித் தனது குருவின் உடம்புக்கு முடியாத வயோதிகத் தாய், தந்தையைப் பொறுப்பாகக் கவனித்து, வெளியூர் கூட்டிப் போய் வந்தார் என்பதை இந்தப் பக்கத்தில் விளக்குகிறார் சோம.வீரப்பன். வயோதிகத் தம்பதி எழுவதற்கு முன்பே எழுந்து தயாராகி, அவர்களுக்காகக் காத்திருந்து, அவர்களை நல்லபடியாக ஒரு திருமண நிகழ்ச்சிக்குக் கூட்டிப் போயுள்ளார்.
அவர்களே எழவில்லை என இவர் தயாராகாமல் இருந்தால், அந்த இயக்குநரிடம் கெட்ட பெயர் வாங்கி, வெளியேறியிருப்பார். ஆனால், அவர் காலத்தைத் தவறவிடவில்லை. ஒரு காரியத்தைச் செய்யத் திறமை மட்டும் இருந்தால் போதாது. அதைக் குறித்த காலத்தில் செய்வதற்கான சுறுசுறுப்பும் அவசியம். இதற்காக கம்பராமாயணத்தில் இருந்து மேற்கோள் காட்டுகிறார்: ‘மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்’.
லைஃப் லெசன்ஸ் ஃபிரம் சாணக்யா (LIFE LESSONS FROM CHANAKYA)
சோம.வீரப்பன்
இந்து தமிழ் திசை
விலை: ரூ.200
தொடர்புக்கு: 74012 96562 / 74013 29402
ஆன்லைனில் வாங்க: store.hindutamil.in/publications