

வள்ளுவர் வகுத்த அறத்தை முழுமையாக வாழ முயன்றவர் காந்தியடிகள். தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனாரும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கமும் வள்ளுவத்தின்படி வாழ்ந்த மகான் என்று காந்தியைப் பல இடங்களிலும் குறிப்பிட்டுள்ளார்கள். ‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’ என்கிற ஓர் அருமையான நூலை திரு.வி.க. எழுதியுள்ளார். அதேபோல் நாமக்கல் கவிஞரும் ‘காந்தியக் கவிஞர்’ என்று அறியப்பட்டவர். அசலாம்பிகை அம்மையார் ‘காந்தி புராணம்’ என்ற நூலை எழுதியுள்ளார்.
காந்தியடிகள் 20 முறை தமிழ்நாட்டுக்கு (1896 - 1946 இடைப்பட்ட காலத்தில்) வருகை தந்துள்ளார். அதைப் பற்றிய விரிவான தகவல்கள் அடங்கியுள்ள நூல் தற்போது அமரர் அ.இராமசாமி நூற்றாண்டு நினைவுப் பதிப்பாக வெளிவந்துள்ளது. 35 தலைப்புகள், 926 பக்கங்கள், தமிழ்நாட்டு வருகையுடன் தொடர்புடைய பல அரிய புகைப்படங்கள் கொண்டது.
காந்தியடிகள் நூற்றாண்டின்போது (1969) ஒவ்வொரு மாநிலத்துக்கும் காந்தி வருகை புரிந்த விவரங்கள் அடங்கிய தொகுப்பு நூல் வெளியிடும் முயற்சி நடந்தது. அந்த வகையில், தமிழ்நாட்டில் காந்தி மேற்கொண்ட பயணங்கள் பற்றி மதுரையைச் சேர்ந்த காந்தியவாதியான அ.இராமசாமி மூன்றாண்டுகள் தமிழகம் எங்கும் பயணித்துப் பலரைச் சந்தித்து, தொடர்புடைய ஆவணங்களைத் திரட்டி எழுதிய இந்த நூல் முதன்முதலாக 1969 ஆம் ஆண்டு வெளிவந்தது.
‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற இந்த நூல் வெறுமனே தமிழ்நாட்டில் காந்தி மேற்கொண்ட பயணங்களைப் பட்டியலிட்டுக் கூறாமல், தமிழர்களுக்கும் காந்திக்கும் எவ்விதமான தொடர்பிருந்தது என்பதை தென்னாப்ரிக்காவில் தொடங்கி கூறிச் செல்கிறது.
காந்தியடிகள் முதன்முறையாகத் தமிழகத்துக்கு வந்தபோது, அவரது வயது 27. அப்போது அவரை வரவேற்கக் காத்திருந்தவர்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உள்பட மிக முக்கியமான பிரபலங்கள். அவரது பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். தென்னாப்ரிக்காவில் இந்தியர்கள் நிலைமை, குறிப்பாகத் தமிழர்கள் நிலைமையைப் பற்றி அவர் கூறியதை அனைவரும் மிகவும் கூர்ந்து கவனித்தனர்.
தமிழ்நாட்டில் காந்தியின் பயணங்களில் என்ன நிகழ்ந்தது, அதில் யார் யாரெல்லாம் கலந்துகொண்டார்கள், அலையலையாக அவர் கூட்டங்களில் கலந்துகொண்ட மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பனவற்றை மட்டும் இந்த நூலாசிரியர் கூறிச் செல்லாமல், அப்போதிருந்த அரசியல் சூழ்நிலை என்ன, எவ்வாறு இந்திய விடுதலைப் போராட்டம் வளர்ச்சிபெற்று வந்தது என்பதையெல்லாம் விரிவாகவும் துல்லியமாகவும், தக்க ஆதாரங்களுடன் பதிவுசெய்கிறார்.
பயணத்தின்போது காந்தியடிகளிடம் கேட்கப்பட்ட சிக்கலான கேள்விகள் பலவற்றுக்கும் - குறிப்பாக அரசியலும் இளைஞர்களும், தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, வருணாசிரமம், சாதிப் பிரிவினை, மதமாற்றம், கல்வி முறை, தாய்மொழி வழிக் கல்வி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் ஆளுநருக்கும் உள்ள உறவின் தன்மை - போன்றவற்றுக்கு அவர் எவ்வாறு பதில் அளித்தார் என்பதை நூலாசிரியர் உரிய சான்றுகளுடன் பதிவுசெய்கிறார். காந்தியடிகள் உடை மாற்றம், ஒத்துழையாமை இயக்கத்தின் தொடக்கப் புள்ளி, நாடு தழுவிய தீண்டாமை ஒழிப்பு இயக்கம் ஆகியவையெல்லாம் தமிழ்நாட்டில் காந்தியடிகள் பயணம் மேற்கொண்டபோது நிகழ்ந்தவை.
வள்ளுவர் உரைத்த மனித இனத்துக்கான அற வாழ்வு, காந்தியடிகளின் கொள்கைகள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியில்லா இணைப்பைக் காந்தியத்திலும் வள்ளுவத்திலும் தமிழிலும் தோய்ந்த இந்நூலாசிரியர் மிக எளிமையாக, யதார்த்தமாகச் சொல்லிச் செல்கிறார். ‘குற்றம் இலானாய்க் குடிசெய்து வாழ்வானைச்/சுற்றமாச் சுற்றும் உலகு (குறள் 1025)’: எண்ணம், பேச்சு, செயல் மூன்றிலும் தூய்மை காத்து, எவ்விதக் குற்றமும் இல்லாதவனாக, தான் பிறந்த குடி உயர்வதற்காக வாழ்பவனை உலகம் தன் சுற்றமாகச் சூழ்ந்துகொள்ளும். தமிழர்களையும் காந்தியடிகளையும் இணைத்தது, பிணைத்தது ‘அறம்’ என்ற மூன்றெழுத்தே.
பல்வேறு காரணங்களால் பிளவுபட்டு, நிலை தடுமாறி இன்றைய காலகட்டத்தில், இந்த நூலைப் படிப்பவர்களுக்குச் சிந்தனைத் தெளிவை இந்நூல் ஏற்படுத்தும். சமுதாயத்தில் அமைதியும் அதன் ஊடாகப் பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட வழிவகுக்கும். இந்த நூலைப் படிக்கும்போது, நூலாசிரியர் மறைந்துபோகிறார்; நாம் காந்தியோடு பயணிக்கிறோம் என்கிற உணர்வே மேலோங்கும். இதுதான் நூலாசிரியரின் வெற்றி.
நூலின் பதிப்புரையில் சந்தியா நடராஜன், நூல் குறித்து இப்படிச் சொல்கிறார்: காந்தி என்கிற காந்தப்புலம், கண்டவர்களை எல்லாம் சுண்டி இழுத்துக்கொள்கிறது. காந்தி இந்திய அரசியல் வானில் தென்படும் முன்னரே அவரது தென்னாப்ரிக்க அறப் போராட்டம் குறித்து 1909இல் பாரதி எழுதுகிறார்: ‘இப்படிப்பட்ட தெய்விகக் குணங்களமைந்த புருஷனும் உலகத்தில் இருக்கிறானா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது’. அப்படிப்பட்ட புருஷன் இங்குதான் இருந்தான் என்று சத்தியம் செய்கிறது அ.இராமசாமியின் ‘தமிழ்நாட்டில் காந்தி.’ பதிப்பாளரின் கூற்றில் எள்ளின் பிளவளவும் பங்கமில்லை.
தமிழ்நாட்டில் காந்தி
அ.இராமசாமி பி.ஏ.
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ. 1,000
தொடர்புக்கு: 044 24896979
- தொடர்புக்கு: voiceofvalluvar1330@gmail.com